மத அவமதிப்பு வழக்கில்
கிறிஸ்தவ பெண்ணின் மரண தண்டனை ரத்து
பாகிஸ்தானில் பல பகுதிகளில் கலவரம்

  


பாகிஸ்தானில் மத அவமதிப்பு வழக்கில் கிறிஸ்தவ பெண்ணான ஆசியா பீபிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை சுப்ரீம் கோர்ட் இன்று ரத்து செய்ததை எதிர்த்து பல பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்படுகின்றது.

பாகிஸ்தானில் லாகூர் புறநகர் பகுதியை சேர்ந்தவர் ஆசியா பீபி. அந்நாட்டின் சிறுபான்மையினத்தவரான கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த இவர், தனது அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட தகராறின்போது முஹம்மது நபி (ஸல்) அவர்களை தரக்குறைவாக பேசியதாக மத அவமதிப்பு வழக்கை எதிர்கொண்டு வந்தார்.

இந்த வழக்கில் ஆசியா பீபிக்கு மரண தண்டனை விதித்து கடந்த 2010-ம் ஆண்டு விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை உறுதிப்படுத்தி லாகூர் உயர் நீதிமன்றம் கடந்த 2014-ம் ஆண்டில் தீர்ப்பளித்தது.

இதையடுத்து, சிறையில் அடைக்கப்பட்ட ஆசியா பீபியின் மரண தண்டனையை ரத்து செய்யுமாறு பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் அவரது வழக்கு மேல்மூறையீடு செய்திருந்தார்.

இந்த மனுவின்மீது சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி மியான் சகிப் நிசார் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை நடத்தி வந்தது. இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட் ஆசியா பீபிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

அவர் மீதான மத அவமதிப்பு குற்றச்சாட்டை அரசுதரப்பு வழக்கறிஞர்கள் தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்க தவறியதால் இவ்வழக்கில் இருந்து ஆசியா பீபியை விடுதலை செய்வதாக அறிவித்த நீதிபதிகள் அவர்மீது வேறெந்த வகையிலும் பொலிஸார் நடவடிக்கை எடுக்கவும் தடை விதித்துள்ளனர்.

மரண தண்டனையில் இருந்து ஆசியா பீபியை விடுவித்து வெளியாகியுள்ள இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், லாகூர், கராச்சி உள்ளிட்ட பெருநகரங்களிலும் நாட்டின் பிறபகுதிகளிலும் இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்த பலர் போராட்டங்களிலும், ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் கலவரமாகவும், வன்முறையாகவும் மாறாமல் இருக்க பதற்றம் நிறைந்த பகுதிகளில் ஏராளமான பொலிஸ் மற்றும் துணை இராணுவப் படைகள் குவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில்,  மரண தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்ட செய்தியை தன்னால் நம்ப முடியவில்லை என லாகூர் சிறையில் இருந்தவாறு தொலைபேசி மூலம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆசியா பீவி தெரிவித்துள்ளார்.

ஆசியா பீபியின் விடுதலை செய்தி தனக்கும் தனது பிள்ளைகளுக்கும் மகிழ்ச்சி அளித்துள்ளதாக அவரது கணவர் ஆஷிக் மசிஹ் குறிப்பிட்டுள்ளார். கடவுளுக்கு நாங்கள் நன்றி தெரிவித்து கொள்கிறோம். ஆசியா பீபி குற்றமற்றவர் என்பது எங்களுக்கு தெரியும். இந்த தீர்ப்பை அளித்த நீதிபதிகளுக்கு நாங்கள் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.








0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top