இலங்கையில் அரசியல் குழப்பம்
பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் கவலை



இலங்கையில் முன்னாள் ஜனாதிபதி, பிரதமராக நியமிக்கப்பட்டதால் ஏற்பட்டுள்ள அரசியல் கொந்தளிப்பு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளதாகவும், அங்குள்ள நிலவரங்களை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும், பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் ஜெரிமி ஹன்ட் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நேற்று கொன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர் ஹியூகோ ஸ்வயர்  எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய வெளிவிவகார அமைச்சரைப் பார்த்து, “எனது நண்பன், இந்த வார இறுதியில் இலங்கை ஜனாதிபதியுடன் பேசும் போது, அவரது அண்மைய நடவடிக்கைகள், 19 ஆவது அரசியலமைப்புக்கு முரணானது என்றும், அனைத்துலக சமூகம், தொடர்ந்தும் ரணில் விக்கிரமசிங்கவையே  சட்டரீதியான பிரதமராக ஏற்றுக் கொண்டிருக்கிறது என்பதையும், கூறுவாரா?

இதனை நாடாளுமன்ற வாக்கெடுப்பு மூலம் மட்டுமே மாற்ற முடியும், நாடாளுமன்றம் உடனடியாக கூட்டப்பட்டு, அந்த வாக்கெடுப்பை நடத்த வேண்டும்என்று ஹியூகோ ஸ்வயர் கூறினார்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் ஜெரிமி ஹன்ட்,

இலங்கை ஜனாதிபதியுடன் பேசும் போது, நிச்சயமாக இந்த விடயங்களை சுட்டிக்காட்டுவேன்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்புக் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவலை கொண்டுள்ளனர் என்பது எனக்குத் தெரியும்.

நாங்கள் நிலைமைகளை மிகவும் கவலையுடன் கண்காணித்துக் கொண்டிருக்கிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.

அதிவேக அரசியல் மாற்றங்களால் கவலைமார்க் பீல்ட்


பிரித்தானியா வெளிவிவகார அமைச்சின் ஆசிய பசுபிக் பிராந்தியங்களுக்கான அமைச்சர் மார்க் பீல்ட்,  இலங்கையில் அதிவேகமாக நடக்கும் அரசியல் மாற்றங்களை கவனித்துக் கொண்டிருப்பதாகவும், இது கவலையளிக்கிறது என்றும் கூறியுள்ளார்.

மீண்டும் ஒருமுறை, அனைத்து தரப்புகளும் அரசியலமைப்புக்கு அமைய செயற்படுமாறு அழைப்பு விடுக்கிறேன்.

சபாநாயகருடன் கலந்துரையாடி, நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டி, மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் குரலை வெளிப்படுத்த சந்தர்ப்பம் அளிக்குமாறும் இலங்கை ஜனாதிபதியைக் கேட்டுக் கொள்கிறேன்.

இலங்கையின் நண்பனாக, அனைத்துலக சமூகம்,  இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களுடன் இணைந்து, ஜனநாயகம், மனித உரிமைகள், பொறுப்புக்கூறலுக்காக பணியாற்ற பிரித்தானியா உறுதிபூண்டுள்ளதுஎன்றும் அவர் தெரிவித்துள்ளார்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top