சாய்ந்தமருதின் அன்றைய எல்லையும்
இன்றைய எல்லையும்



சாய்ந்தமருதின் வடக்கு எல்லை குறித்து சிலர் தற்போதய எல்லையை வைத்து எளிதாக இதுதான் கல்முனையின் தெற்கு எல்லை என்று எண்ணிக்கொண்டு முகநூலில் பதிவிடுகின்றார்கள்.
கல்முனைத் தேர்தல் தொகுதி 4 உள்ளூராட்சி மன்றங்களாக அன்று இருந்தபோது கரைவாகு தெற்கு சாய்ந்தமருது கிராம சபையின் வடக்கு எல்லை எங்கிருந்தது? கல்முனை பட்டின சபையின் தெற்கு எல்லை எங்கிருந்தது? என்பது குறித்த உண்மையான விபரம் தற்போதய  இளைஞர்களுக்கு வரலாறு தெரியாத வகையில் இருந்து கொண்டிருக்கிறார்கள்.
இது குறித்த உண்மையான விபரங்களையும் வரலாற்றையும் தற்போதயை இளைஞர்களும் எதிர்கால சந்ததியினரும் அறிந்து  வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக இது பதிவேற்றம் செய்யப்படுகின்றது.
இவ்வாறு இந்த விபரங்களை பதிவேற்றம் செய்வது சாய்ந்தமருதின் எல்லையை போராட்டம் நடத்தி மீண்டும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கமல்ல. சாய்ந்தமருது மக்கள் சாந்தமானவர்கள், அமைதியானவர்கள். ஆனால், சரித்திரம் மாற்றப்பட்டு புதிதான தகவல்கள் தற்கால இளஞர்களுக்கு வழங்கப்படக்கூடாது என்ற நோக்கத்திலேயே சாய்ந்தமருதிலுள்ள முதியவர்களின் வேண்டுகோளுக்கெணங்க இது பதிவேற்றம் செய்யப்படுகின்றது.
 ஆரம்பத்தில் சாய்ந்தமருதின் வடக்கு எல்லை பிரதான வீதியின் மேற்கில் "ஸம்ஸம்" அரிசிஆலையின் வடக்கே அமைந்துள்ள ஊத்தமடு (தற்போது நகர மண்டப வீதி) வீதியாகவும்,பிரதான வீதிக்கு கிழக்கே ஜீ.எஸ். வீதி(சட்டத்தரணி .எம்.சம்சுதீன் வீட்டிற்கு வடபுறம்) கிழக்கு நோக்கிச் சென்று அரசடி வீதி (நியூ்றோட்டில் )சந்தித்து மஹ்மூத் மகளிர் கல்லூரியின் தற்போதய வட எல்லையுடன் இணைந்து கிழக்கு நோக்கிச் சென்று ஸாஹிறாக் கல்லூரி வீதியுடன் இணைந்து இருந்தது .

1928 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கிராம சேவையாளர் பிரிவுகளுக்கு இலக்கமிடப்பட்டபோது சாய்ந்தமருதில் கே.பீ/47 தொடக்கம் கே.பீ /53 வரை 7 குறிச்சிகள் இருந்தன. வட எல்லையில் இருந்த கே.பீ/53 இலக்கத்துடைய குறிச்சி சாய்ந்தமருது தமிழ் குறிச்சி என்ற பெயரில் ஒரு விதானையாரின் நிர்வாகத்திற்குட்பட்டிருந்தது.

 1986 ஆம் ஆண்டு வரை இக்குறிச்சி சாய்ந்தமருது கிராமத்தின் ஒரு பகுதியாக இருந்ததை தேர்தல் வாக்காளர் இடாப்பு, வளவுறுதிகள், பிறப்பு இறப்பு விவாகப் பதிவுகள், சாய்ந்தமருது அல்-அமான் வித்தியாலயம்(தற்போது மஹ்மூத் மகளிர் கல்லூரி) காணி சுவிகரிப்புக்கான அரச வர்த்தமானி அறிவித்தல் (195/19/12/75),

1945 ஆம் ஆண்டளவில் கல்முனை சனிற்றரி போட்டாக இருந்து பட்டின சபை என்ற அந்தஸ்து பெற்றபோது கல்முனை பட்டின சபையின் 7 ஆம் வட்டாரத்திற்கு வாக்காளர் தொகை அதிகரிக்கப்பட வேண்டியிருந்ததால் அன்று பட்டினசபைத் தலைவராக இருந்த கேற் முதலியார் எம்.எஸ்.காரியப்பரின் வேண்டுகோளுக்கிணங்க சாய்ந்தமருது கிராம சபையின் முதலாம் வட்டாரத்தில் இருந்து 1 தொடக்கம் 97 வரையுள்ள வீட்டு அட்டவணைக்குரிய வாக்காளர்கள் கல்முனை பட்டின சபையுடன் சேர்க்கப்பட்டனர்.

ஆயினும் 01 தொடக்கம் 97வரையுள்ள குடும்பங்களின் உணவுப் பங்கீடு, பங்கீட்டு நிவாரணம், சகாய நிதி போன்ற பொது நிர்வாகத்தின் பல்வேறு கருமங்களும் கே.பீ/53 இலக்க கிராம சேவகர் நிர்வாகத்திலேயே அன்று இருந்தன. சமய, கலாச்சார நிர்வாகம் சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் பொறுப்பில் இருந்தது.

 1987 ஆம் ஆண்டு கே.பீ/53ஆம் இலக்கக்குறிச்சியில் பிரதான வீதிக்குக் கிழக்கே மேற்படி குடும்பங்களின் வீடுகளை உள்ளடக்கிய பகுதி மிக இரகசியமாக அக்கால அரசியல் பிரமுகர்களின் வேண்டுகோளுக்கிணங்க கல்முனைக்குடி கே.பீ/54ஆம் குறிச்சியுடன் இணைக்கப்பட்டது.

1996.09.06ஆம் திகதி கல்முனை பிரதேசசபைக் கூட்டத்தில் சாய்ந்தமருது கே.பீ/53 குறிச்சியின் எஞ்சிய பகுதியான வடக்கே "ஸம்ஸம்"அரிசி ஆலைக்கும் கிழக்கே பிரதான வீதிக்கும் தெற்கே சாய்ந்தமருது கானடி ஒழுங்கைக்கும் மேற்கே இறைவெளிக் கண்டத்தின் எல்லைக்கும் உட்பட்ட பகுதியை கல்முனைக்குடி 13ஆம்,அல்லது 14ஆம் கி.சேபிரிவுடன் இணைக்கத் தீர்மானம் சபையில் எடுக்கப்பட்டது.
இந்த செயல்பாட்டை அன்று சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நிர்வாகமும் ஊரின் பல ஸ்தாபனங்களும் எதிர்த்து குரல் கொடுத்தன.
சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச செயலகம் பெற இந்த எதிர்ப்பைக் கைவிடுமாறு அப்போதய அரசியல் பிரமுகர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க சாய்ந்தமருது மக்கள் அமைதியாக இருக்க வேண்டிய நிலை அன்று ஏற்பட்டது.
இதனால் இப்பகுதி கே.பீ/53 ஆம் இலக்க குறிச்சியின் எஞ்சிய பகுதியும் சாய்ந்தமருதிலிருந்து பிரிக்கப்பட்டது. இதுதான் சரித்திரம் இதுதான் உண்மை.

 சாய்ந்தமருதின் தற்கால எல்லைகள்

Ø  வடக்கு   : கானடி ஒழுங்கை, ஸாஹிறாக் கல்லூரி வீதி,     கல்முனை பிரதேச செயலாளர் பிரிவு
Ø  தெற்கு     : மளிகைக்காடு வீதி, காரைதீவு பிரதேச செயலகப் பிரிவு
Ø  கிழக்கு     : வங்காள விரிகுடாக் கடல்
Ø  மேற்கு      : சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவு
-    மக்கள் விருப்பம்




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top