சிறுபான்மை மக்களை மலினப்படுத்தும்

 பேரினவாதிகளின் திட்டம்
சிறுபான்மை சமூகத்தின்
 தயவின்றி ஆட்சியமைக்க முஸ்தீபு:
முன்னாள் அமைச்சர் றிஷாட் பதியுதீன்





சிறுபான்மை சமூகத்தின் ஆதரவின்றி அரசாங்கத்தை உருவாக்கி, அதன்மூலம் சிறுபான்மை மக்களை மலினப்படுத்தும் பேரினவாதிகளின் திட்டம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், சிறுபாண்மை  மக்களின் வாக்குகளை செல்லாக் காசாக்கும் சதி முயற்சிகள் குறித்து விழிப்பாக இருக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அக்கரைப்பற்றில் நேற்று மாலை இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன் மேலும் தெரிவிக்கையில்,

முஸ்லிம்களுக்கு எதிரான குரோதப்போக்கு இன்னும் தொடர்கின்றது. சிறுபான்மை சமூகத்தின் பிரதிநிதித்துவத்தை வீழ்த்துவதற்கு சதிகள் இடம்பெறுகின்றன.

நாடாளுமன்ற பிரதிநிதித்துவ வெட்டுப்புள்ளியை அதிகரிக்கின்ற கோசங்கள் முனைப்படைந்துள்ளன. இதன்மூலம், சிறுபான்மை மக்களை தேடுவாரற்றவர்களாக மாற்றுவதே அவர்களின் உள்நோக்கம்.

"எல்லோருக்கும் ஒரே சட்டம்என்ற புதிய கோசத்துடன், காலகாலமாக நமக்கிருக்கும் முஸ்லிம் விவாகரத்து சட்டத்தை இல்லாமலாக்க, ரதன தேரர் நாடாளுமன்றில் தனிநபர் பிரேரணை ஒன்றை சமர்ப்பித்துள்ளார். இவ்வாறான நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கு முஸ்லிம் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்படல் வேண்டும்.

பேரினவாதிகள் தாம் நினைத்தது போன்று, நாடாளுமன்றத்தில் செயற்பட நாம் வழிவிடலாகாது. சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவின்றி ஆட்சியமைக்க இடமளித்தோமேயானால், அவர்களின் செயற்பாடுகள் கட்டில்லாது போய்விடும். இந்த யதார்த்தத்தை நாங்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.

அப்பாவி மக்களுக்கு இதனை தெளிவுபடுத்த வேண்டும். ஏழ்மையையும், வறுமையையும் மூலதனமாகப் பயன்படுத்தி, வாக்குகளைச் சிதைத்து சின்னா பின்னமாக்கும் செயற்பாடுகள் அரங்கேறியுள்ளன.

நமது வாழ்வுரிமையையும் இருப்பையும் காப்பாற்றிக்கொள்வதற்காக, நாம் விழிப்புடன் செயற்பட வேண்டும்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்சமூகத்துக்கான ஒரு கட்சி. சமூகம் தலைநிமிர்ந்து வாழ வேண்டும் என்பதற்காக, பல்வேறு சவால்களை சந்தித்து வருகின்ற ஒரு கட்சி. நமது சமூகத்துக்கென உருவாக்கப்பட்ட இந்த சமூகக் கட்சி, தமிழ் பேசும் மக்களுக்கான ஓர் இயக்கமாக இப்போது மிளிர்ந்துள்ளது.

சகோதரத் தமிழ் மக்கள் இந்தக் கட்சியில் ஈடுபாடு கொண்டு, கட்சியின் வளர்ச்சிக்காக உழைத்து வருகின்றனர். இந்தக் கட்சியின் வருகையானது குறிப்பாக, வடக்கு, கிழக்கில் உள்ள சமூகங்களுக்கிடையில் ஒரு உறவுப்பாலமாக பரிணாமம் எடுத்துள்ளது.

அதேபோன்று, பேரினவாத சக்திகளுக்கு இந்தக் கட்சி சிம்மசொப்பனமாக இருப்பதனாலேயே, கட்சித் தலைமை மீது அபாண்டங்களும் வீண்பழிச் சொற்களும் சுமத்தப்பட்டு வருகின்றன என்று நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்










0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top