ஞானசார தேரருக்கு ஏற்பட்டிருக்கும் ஏக்கம்!
அதனால் அவர் விடுத்துள்ள கோரிக்கை!!


எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல்களையடுத்து குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட முஸ்லிம் அரசியல்வாதிகளைக் கைது செய்ய வேண்டும் என பொதுபல சேனா கோரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன், அனைத்து மதரஸா பாடசாலைகளையும் அரசாங்கம் தடை செய்ய வேண்டும் எனவும் அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய, பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

சாதாரணமாக தீவிரவாதம் என்பது அரசியல் ரீதியிலான அனுசரணையின்றி தீவிரமடையாது. கடந்த காலங்களில் உயிர்த்த ஞாயிறு தின தீவிரவாத தாக்குதல்களை நடத்திய தீவிரவாதிகளுடன் கைகோர்த்து, தோள்மீது கைகளையிட்டு தீவிரவாதத்தை விருத்தி செய்ய உதவிய பல்வேறு அமைச்சர்களின் பெயர்கள் அம்பலமாகியிருந்தன.

ரிஷாட் பதியூதீன், ஹக்கீம், ஹிஸ்புல்லா உள்ளிட்டவர்கள் குறித்து பேசப்பட்டன. ஆனாலும் இதுவரையிலும் குறைந்தபட்சமாக கைது செய்து தடுத்து வைத்து விசாரணை செய்யப்படவும் இல்லையே.

ஏன் செல்லம் கொஞ்சுகின்றனர்? உதாரணமாக வஹாபிசம் பற்றியே பேசுகின்றனர். வஹாப்பிசம் பற்றி கேட்டால் ஓடிவிடுகிற அமைச்சர்களே இருக்கிறார்கள்.

வஹாபிசம் ஒரு பிரிவினரும், சலபிசம் என்பது இன்னுமொரு குழுவினரும் இருக்கின்றனர். அவர்களே பல திருமணங்களை செய்பவர்கள். கட்டுப்பாடின்றி குழந்தைகளை பெற்றெடுப்பவர்கள்.

அதனை விருத்தி செய்வதற்காகவே பிறிதொரு அரசியல் பிரிவொன்று செயற்படுகின்றது. இந்த அரசாங்கம் என்ன செய்ய வேண்டும்? இதனை செய்தால் சிங்கள மக்கள் தலையில்தான் அரசாங்கத்தைத் தூக்கிவைத்து கொண்டாடுவார்கள்.

இந்த முஸ்லிம் குழுக்களை ஒரு இடத்திற்கு சேர்த்து விசாரணை செய்யப்பட வேண்டும். இல்லாவிட்டால் பாதுகாப்பு பிரிவில் ஏதாவது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆனாலும் இதுவரை அப்படியொரு செயற்பாடு இல்லை.

ஹக்கீம் மற்றும் அவரது மைத்துனர், கட்டார் தூதரகத்திலுள்ள இனாமுல்லா போன்றவர்கள் நேரடியாக எகிப்தின் ஈசுப் அல் கர்தாரி என்ற தலைவரையே சந்தித்திருந்தனர். புகைப்பட ஆதாரங்களையும் நாங்கள் காண்பித்தோம்.

இருந்த போதிலும், இந்த அரசாங்கமோ, கடந்த அரசாங்கங்களோ இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. ஷரியா பல்கலைக்கழகத்தை நிர்மாணிக்க அடிக்கல் நாட்டப்பட்டு இரண்டே வாரங்களில் அதுகுறித்து நாங்களே அம்பலப்படுத்தினோம். அதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

எனவே இவர்களை கைது செய்யாமையிட்டு அதிருப்தியடைந்திருக்கின்றோம். இந்த நாட்டில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலையடுத்து சிங்களத் தலைவர் ஒருவரை சிங்கள மக்களின் வாக்குகளால் நியமிக்க வேண்டும், நாட்டிற்கு பாதுகாப்பு வேலியிட வேண்டும் என்று உணர்ந்தனர்.

அதற்கான உணர்வை நாங்களே கடந்த வருடங்களாக ஏற்படுத்திவந்துள்ளோம். இந்த அரசாங்கம் எந்த பாதையில் பயணிக்கிறது என்பதை நாங்கள் பார்த்துக்கொண்டே இருக்கின்றோம்.

எதிர்வரும் தேர்தலுக்கு முன்னதாக உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களுடன் தொடர்புடைய அனைவரையும் கைது செய்து விசாரணை செய்யும்வரை அவதானித்துக்கொண்டே இருக்கின்றோம்என அவர் மேலும் கூறியுள்ளார்.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top