ஈரானுக்கு எதிராக போர்:
டிரம்ப்பை கட்டுப்படுத்தும் தீர்மானம்
அமெரிக்க பிரதிநிதிகள் சபையில், நிறைவேறியது


அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், மேற்காசிய நாடான ஈரான் மீது, போர் தொடுப்பதை கட்டுப்படுத்தும் தீர்மானம், அமெரிக்க பிரதிநிதிகள் சபையில், நிறைவேற்றப்பட்டது.
ஈரான் ராணுவத்தின், குத்ஸ் படைப்பிரிவின் தளபதி குவாசிம் சுலைமானி, கடந்த 3ல், ஈராக் விமான நிலையத்தில் வந்து இறங்கியபோது, அமெரிக்க படையின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் பலியானார். அவருடன் 10க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு பழிக்கு பழி வாங்குவோம் என, ஈரான் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஈராக் தலைநகர் பாக்தாத் அருகே உள்ள அமெரிக்க ராணுவத்தின் இரண்டு முகாம்கள் மீது, ஈரான் படையினர் நேற்று முன் தினம் தாக்குதல் நடத்தினர். இதில், 80 அமெரிக்கர்கள் கொல்லப்பட்டதாக ஈரான் தெரிவித்தது. இதன் காரணமாக, அமெரிக்கா - ஈரான் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டது.
இதையடுத்து, ஈரான் மீது, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் போர் தொடுப்பதை கட்டுப்படுத்தும் தீர்மானம், பிரதிநிதிகள் சபையில், ஜனநாயக கட்சியினரால் கொண்டுவரப்பட்டது.
இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக, 224 பேர் வாக்களித்ததை அடுத்து, தீர்மானம் நிறைவேறியது.

டிரம்ப்பின் குடியரசு கட்சியை சேர்ந்த மூன்று உறுப்பினர்கள், இத்தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.பிரதிநிதிகள் சபையில், ஜனநாயக கட்சியினருக்கு பெரும்பான்மை இருப்பதால், இத்தீர்மானம் எளிதில் நிறைவேறி உள்ளது. இதைத் தொடர்ந்து, இத்தீர்மானம், அமெரிக்க செனட் சபையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. அங்கு, டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு பெரும்பான்மை இருப்பதால், இத்தீர்மானம் தோல்வியடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து கருத்து தெரிவித்த டிரம்ப், ''சில நேரங்களில், நொடிப்பொழுதில் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும். அப்போது, யாரிடமும் அனுமதி கேட்டுக் கொண்டு இருக்க முடியாது. தாக்குதல் நடத்துவதற்கு யாருடைய அனுமதியோ, ஆசிர்வாதமோ எனக்கு தேவையில்லை'' என்று தெரிவித்துள்ளார்.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top