கல்முனை - வடக்கு பிரதேச செயலகம்
தரம் உயர்த்தி கொடுப்பதற்காக
மரணத்தை தழுவும் வரை போராடுவேன்!
ரன்முத்துகல சங்கரத்ன தேரர் தெரிவிப்பு

கல்முனை - வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தி கொடுக்கும் வரை நான் அமைதியாக இருக்க மாட்டேன். மரணத்தை தழுவும் வரை பிரதேச செயலகம் தரம் உயர்த்தி தருவதற்காக பாடுபடுவேன் என கல்முனை சிறி சுபத்திரராம விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

கல்முனை பிராந்திய தமிழ் இளைஞர் சேனையின் ஏற்பாட்டில், தைத்திருநாள் பொங்கல் விழா நேற்று கல்முனை பழைய பஸ் நிலைய முன்றலில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துவோம் என கூறிக்கொண்டு திரிகின்றவர்களுக்கு நான் செருப்பால் தான் பதில் சொல்வேன். அரசியல்வாதிகளை நம்பி இந்த நாடு மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் உரிமையை பெற்றுக்கொடுப்பதற்காக மதத் தலைவர் என்ற ரீதியில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தக் கோரி உண்ணாவிரதம் இருந்தேன்.

ஆனால் இன்று தங்களது பெயரை அரசியலுக்காக உட்புகுத்தி இந்த பிரதேசத்தில் உலா வருகின்றனர்.

அவர்களுக்கு இந்த புனித நாளில் நான் சொல்லிக்கொள்ள விரும்புவது கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தி கொடுக்கும் வரை நான் அமைதியாக இருக்க மாட்டேன்.

மரணத்தை தழுவும் வரை பிரதேச செயலகம் தரம் உயர்த்தி தருவதற்காக பாடுபடுவேன். இந்த நாட்டில் தமிழர்களுக்கும் உரிமை உண்டு.

சிலர் நினைக்கின்றனர் தமிழ் மக்களை இந்தியாவில் இருப்பவர்கள் காப்பாற்ற வேண்டும் என்று. இந்த மண்ணில் பிறந்த அத்தனை மக்களுக்கும் அதிகாரம் இருக்கிறது.

இந்த நாட்டில் சிங்களவர்களுக்கு மாத்திரம் தான் அதிகாரம் இருக்கிறது. கௌரவம் இருக்கிறது. என்பதை நீங்கள் சிறிதளவும் எண்ணக்கூடாது தமிழ் மக்களுக்கும் அதிகாரம் உள்ளது.

அப்பாவி தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று தமிழர்களின் பிரதிநிதிகளாக நாடாளுமன்றம் சென்றவர்கள் வெறுமனே குரல் கொடுப்பதாக நடிக்கின்றனர்.

தமிழ் மக்களுக்கு சில பௌத்த துறவிகளை கண்டால் பயம். அவர்கள் பயங்கரமானவர்கள், அவர் வந்தால் பயங்கரமான வேளைகளை தான் செய்வார்களென்று. அப்படி இல்லை நாங்களும் உங்களைப் போன்ற சாதாரண மனிதர்கள்.

தமிழ் மக்கள் சங்கரத்ன தேரர் ஆகிய என்னை நம்புகின்றனர். நான் தான் தமிழ் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்திக் கொடுக்கும் வரை தமிழ் மக்களோடு தோள்கொடுத்து நிற்பேன்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து மக்களின் வாக்குகளை பெற கல்முனைப் பிரதேசத்திற்கு யார் வந்தாலும் நான் எதிர்த்து நிற்பேன்.

பலர் நாங்கள் தான் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துவோம் என கூறிக்கொண்டு திரிகின்றனர். அவர்களுக்கு நான் செருப்பால் தான் பதில் சொல்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top