அமெரிக்க விமானத்தளங்கள் மீது
ஈரான் ஏவுகணை தாக்குதல்
  
ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகள் மீது ஈரான் 12க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா ஈரான் இடையேயான பிரச்சினைகள் ஏராளம். அணு ஆயுத தவிர்ப்பு விவகாரம், யூரேனியம் செறிவூட்டல், பொருளாதார தடைகள் போன்ற பல விவகாரங்கள் காரணமாக இரு நாடுகளிடையே அசாதாரண சூழல் நிலவி வருகிறது.

இதற்கிடையே கடந்த வெள்ளிக்கிழமை (ஜனவரி 3ம் திகதி) அமெரிக்கா நடத்திய வான்வழித்தாக்குதலில் ஈரானின் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். ஈரானில் உள்ள 52 முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்துவோம் என அமெரிக்கா சவால் விடுத்தது. அமெரிக்காவின் செயல்களுக்கு பழி தீர்ப்போம் என ஈரானும் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தது.

இந்நிலையில், ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகள் மீது ஈரான் 12க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.

ஈராக்கின் அல்-ஆசாத் மற்றும் இர்பில் பகுதிகளில் உள்ள அமெரிக்க விமானப்படைகள் முகாம் மற்றும் அதன் கூட்டணி படைகள் மீது ஈரான் 12க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. நேற்று மாலை 5.30 மணியளவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த ராணுவ தளங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது’, என பென்டகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்கு பதிலடியாக ஈரானும் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதால்,  மத்திய கிழக்கு நாடுகளில் உச்சகட்ட பதற்றம் நிலவுகிறது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை 4 சதவீதம் உயர்ந்துள்ளது.
இந்த தாக்குதலில் உயிரிழப்புகள் ஏற்பட்டதா என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை.

´´ஈராக்கில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது தாக்குதல் நடந்ததாக வரும் செய்திகள் குறித்து எங்களுக்கு தெரியும். இது குறித்த தகவல்கள் ஜனாதிபதி டிரம்புக்கு விவரிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழலை உன்னிப்பாக கண்காணித்து வரும் ஜனாதிபதி நாட்டின் தேசிய பாதுகாப்பு குழுவுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்´´ என்று வெள்ளை மாளிகையின் பெண் செய்தி தொடர்பாளரான ஸ்டாபானி கிரிஷம் ஓர் அறிக்கையில் இந்த தாக்குதல் குறித்து குறிப்பிட்டுள்ளார்.





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top