எரிமலை சீறினாலும்
திருமணத்தை தொடர்ந்த ஜோடி
 - வைரலாக பரவும் புகைப்படம்
  
பிலிப்பைன்ஸ் நாட்டில் எரிமலை குமுறிய போதிலும் திருமணத்தை நிறுத்தாமல் தொடர்ந்த ஜோடி இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.

பிலிப்பைன்ஸ் நாட்டில், பல எரிமலைகள் உள்ளன. அதில் குறிப்பிடத்தக்க பெரிய எரிமலைகளில் லூசன் தீவில் உள்ள தால் எரிமலை. தலைநகர் மணிலாவில் இருந்து தெற்கே 66 கி.மீ. தொலைவில் ஏரியின் நடுவே அமைந்துள்ள அந்த எரிமலை நேற்று முன் தினம்  குமுறத் தொடங்கியது.

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த எரிமலையை சுற்றி அமைந்துள்ள 8 ஆயிரம் கிராமங்களில் வசிக்கும் 50 ஆயிரம் மக்களை உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அரசு தெரிவித்தது.

இந்நிலையில், பின்னால் எரிமலை குமுறிய போதிலும் திருமணத்தை நிறுத்தாமல் தொடர்ந்த ஜோடி இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.

பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள் சினோ வால்பர் மற்றும் கேட். இருவரும் 8 ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் விரும்பி வந்தனர். இதையடுத்து அவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அந்நாட்டின் எஸ்பரன்சா இளயா பகுதியில் உள்ள பண்ணை நிலத்தில் நேற்று முன் தினம் மாலை 5.30 மணியளவில் சினோ மற்றும் கேட்டின் திருமண நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்றது.

நிகழ்வு தொடங்கிய சில நிமிடங்களில் அங்கிருந்து சிறிது தொலைவில் உள்ள தால் எரிமலை குமுற தொடங்கியது. அதில் இருந்து லார்வா குழம்புகள் வெளியேறியதால், ஏற்பட்ட கரும்புகை வானுயர எழுந்தது. ஆனாலும் திருமண நிகழ்ச்சி நிறுத்தப்படாமல் தொடர்ந்து நடைபெற்றது.

இதுகுறித்து அந்த திருமணத்தின் புகைப்பட கலைஞர் கூறுகையில், ‘சினோ-கேட் திருமண நிகழ்ச்சி ஆரம்பிக்கும்போது சூழ்நிலை மிகவும் அமைதியாக இருந்தது. ஆனால் சிறிது நேரத்தில் எரிமலை குமுறி லாவாவை உமிழ்ந்தது. ஆனால் சினோ-கேட் திருமணத்தை நிறுத்தவில்லை. திருமணத்தில் கலந்து கொண்டவர்களும் அங்கிருந்து வெளியேறவில்லை.

எரிமலையிலிருந்து வரும் புகை, வெள்ளை, மஞ்சள், இளஞ்சிவப்பு மற்றும் இறுதியாக சாம்பல் நிறமாக மாறும் ஒரு பொழுதுபோக்கு பின்னணியாகவும், சற்று வேடிக்கையாகவும் இருந்தது. இது அவர்களுக்கு ஒரு சிறப்புமிக்க நாளாக இருக்கும், நிகழ்ச்சியில் பங்குபெற்ற அனைவருக்கும் இவர்களது திருமணம் மறக்க முடியாத ஒன்றாகவே இருக்கும்என தெரிவித்துள்ளார்.

இந்த திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தால் எரிமலை சில மணிநேரத்தில் அல்லது சில நாட்களில் வெடித்து சிதறலாம் என்று அந்த நாடு அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.






0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top