மூன்று சகாப்த அரசியல்
கற்று தந்த பாடங்கள்!!

  -Maryam Naleemudeen
தொடர் - 2
மனித நாகரீகம் நதியில், நதியில் பிரிந்தோடும் ஆற்றின் கரைகளிலேயே ஆரம்பமாகிறது. மனிதன் முதலில் குடியேறியதும் பயிர் செய்ய ஆரம்பிக்கிறான். மனிதனின் முதல் தேடலே உணவு தானே. எம்மக்களின் பயிர் வேளாண்மை.அது விளையும் இடம் வயல். வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம். மருதத்தை சார்ந்து மக்கள் வாழ்ந்த அவ்விடம் சார்ந்த மருதம் என அழைக்கப்பட்டது. காலப்போக்கில் திரிவுபட்டு சாய்ந்தமருது என்றானது.
நீரின் கொடை
மூன்று மாதம்
நிலத்தின் கொடை
நான்கு மாதம் என்பார்கள்
ஆனால்
கிழக்கின் கடலும்
மேற்கின் வரப்பும்
வருடம் பூராவும்
வழங்கும் ஊர்
சாய்ந்தமருது !
ஆங்கிலேய ஆட்சிக்கு முன் வாழ்ந்த இலங்கை முஸ்லிம்கள் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்க மன்னன் காலத்தில் கிழக்கை நோக்கி குடியமர்த்தப்பட்டார்கள். ராஜசிங்க மன்னன் தன்னுடைய அரச சபையில் இருந்த முக்கியமான முஸ்லிம் பிரதிநிதிகளை குழுத் தலைவர்களாக்கி ஒவ்வொரு பிரதேசத்திற்கும் அனுப்பி வைத்தார். இதில் காரியப்பரின் முன்னோரின் தலைமையில் வந்த மக்கள் சாய்ந்தமருதில் குடியேறியதாக வரலாறு சொல்கிறது. இதைப்போலவே அக்கரைப்பற்று, மட்டக்களப்பு, திருகோணமலை, புத்தளம் போன்ற இடங்களிலும் முஸ்லிம்களின் குடியேற்றம் ஆரம்பமானது. காலப்போக்கில் மக்கள் தொகை பெருகியது ஆனால் நிலச் சுவாந்தர்களாக ஒரு சிலரே இருந்தனர். அவர்கள் பிரபுக்களாக மதிக்கப்பட்டனர். சமூகத்தில், கல்வியில், செல்வத்தில் இவர்கள் உயர்ந்து காணப்பட்டனர். இப்படியான ஒரு தனவந்த தலைமைத்துவக் குடும்பமாக இந்த காரியப்பர் குடும்பம் திகழ்ந்தது.
காரியப்பர் தமிழ் பெயரா, முஸ்லிம் பெயரா அல்லது பரம்பரை பெயரா, எந்த மொழியில் இருந்து இப்பெயர் வந்தது என்று நிறைய குழப்பங்கள் எம்முள் தோன்றியதுண்டு. எமது நாட்டில் வாழும் மூவின சமூகங்களுக்குள்ளும் இப்பெயர் காணப்படுகின்றது.அப்படி என்றால் இதன் ஆதி எங்கே என தேடிப்போக வேண்டும். ஆங்கிலேயர் இலங்கையை தனது பூரண கட்டுப்பாட்டில் கொண்டு வந்த பின்பு, இந்தியாவில் இருந்த குறு நில மன்னர்களைப் போல இலங்கையில் ஒவ்வொரு பிரதேசத்துக்கும் அன்றைய கால கட்டத்தில் புத்தி ஜீவிகளாக, சமூகத்தில் பிரபல்யம் வாய்ந்தவர்களாக இருந்தவர்களை பிரதேசவாரியாக தலைவர்களாக நியமித்து இருந்தார்கள். காலத்துக்கு காலம் இவர்களில் திறமையானவர்களை தெரிவு செய்து "காரியப்பர்" என்ற பட்டம் வழங்கி கௌரவித்தனர். இந்த கௌரவம் பெற்ற முதல் முஸ்லிம் கண்ணியவான் நெய்னா மரைக்கார் என்பவர் ஆவார். இது நம் கிழக்கு மண்ணிற்கு, குறிப்பாக முஸ்லிம்களுக்கு கிடைத்த ஒரு வரலாற்றுப் பெருமை என்றால் மிகையாகாது. அவரின் பெயரோடு காரியப்பர் பட்டம் ஒட்டிக் கொண்டு நெய்னா மரைக்கார் காரியப்பர் என்றாகி அதிலிருந்து வழி வழியாய் வந்த குடும்பமே, காரியப்பர் குடும்பம் என்று அழைக்கப்படுகிறது. இப் பெயர் தந்தை வழிப் பரம்பரை ஊடாகவே நிலைத்து நிற்கிறது. நெய்னா மரைக்கார் காரியப்பரின் மகன் வழிப் பேரனே இப்ராலெப்பை காரியப்பர் ஆவார்.
1901 ஆம் ஆண்டு மே மாதம் 27ஆம் திகதி இப்றாலெப்பை காரியப்பர் தம்பதிகளுக்கு வாரிசாக ஒரு ஆண் குழந்தை பிறந்தது. கொள்ளை அழகுடன் செக்கச் செவேலென துறுதுறுத்த கண்களும், வட்ட முகமும், குழி விழும் கன்னங்களும் கொண்டு தொட்டிலில் கிடந்த அப்பிள்ளைக்கு வல்லோனின் ரசூலின் பெயரோடு சம்சுதீன் என்ற பெயரையும் இணைத்து முகம்மத் சம்சுதீன் என்ற பெயர் சூட்டி பெற்றோர் மகிழ்ந்தனர்.
1900 இன் ஆரம்ப காலத்தில் கல்வி என்பது முஸ்லிம்களுக்கு எட்டாக் கனியாகவே இருந்தது. வரலாறு இதற்கு இரண்டு காரணங்கள் சொல்கிறது. முஸ்லிம்கள் விவசாயத்தையும், வர்த்தகத்தையும் நம்பிய குழுக்களாகவே வாழ்ந்ததும், ஆங்கிலேய ஆட்சியில் அன்றிருந்த ஆங்கிலக் கல்வி முறை , கிறிஸ்தவ மதத்தை எம்முள் புகுத்தி விடுமோ என்ற பயமும் தான். இதற்கு அன்றிருந்த மார்க்க அறிஞர்களும் ஆங்கிலத்தில் கல்வி கற்பது கூடாது என தடை விதித்து இருந்ததும் ஒரு காரணம்.
சிறு வயதில் இவருக்கு கல்வியில் இருந்த அக்கறை, ஈடுபாடு, எல்லாத் தடைகளையும் மீறி இவரது பெற்றோர் இவரை கல்முனை லீஸ் உயர் தர பாடசாலையில் (தற்போதைய கல்முனை உவெஸ்லி உயர்தர கல்லூரி) யில் சேர்த்து விட்டனர். அங்கு எல்லாத் துறைகளிலும் முதல் மாணவராகத் திகழ்ந்தார். இவரது திறமையைக் கண்ட தமிழ் ஆசிரியர்கள் அனைவரும் வியந்து நின்றனர். இவரதும் அறிவுக்கும் திறமைக்கும் ஆங்கில புலமைக்கும், இவர் இங்கே இருக்க வேண்டியவர் அல்ல. தலை நகரில் படித்தால் நாளை இன் நாட்டின் ஒரு தலை மகனாய் வருவார் என்று இவருக்கு கற்பித்த ஆசிரியர்கள் வற்புறுத்த, சிரேஷ்ட படிப்புக்காய் இவரை பெற்றோர் கொழும்பு வெஸ்லி கல்லூரியில் சேர்த்து விட்டனர். அங்கே தனது படிப்பைத் தொடர்ந்தார். இறுதியில் பிரித்தானிய அரசாங்கத்தினால் நடாத்தப்பட்ட "மெட்ரிகுலேஷன்" பரீட்சையில் அதி திறமை சித்தி பெற்றார். அக் கால கட்டத்தில் ஒரு வருடத்துக்கு இருபத்தி ஐந்துக்கும் குறைவான மாணவர்களே கொழும்பு மருத்துவக் கல்லூரிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். (ஆங்கிலேயர்களின் பிள்ளைகள் உட்பட) இவரின் பெறுபேறுகளின் அடிப்படையில் இலகுவாக கொழும்பு மருத்துவ பீடத்துக்கு தெரிவு செய்யப்பட்டு, அவரது பெற்றோர் தங்களது மகன் நாளை ஒரு டாக்டராக வருவார் என்ற கனவுகளோடு காத்திருக்க, அவர் மருத்துவ பீடம் நுழைந்தார். இவர் டாக்டரா........???

தொடரும் ................................

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top