நவாஸ் ஷெரீப் பதவி விலக இராணுவ தளபதி வலியுறுத்தல்

நேரில் சந்தித்தும் பேசினார்

பிரதமர் பதவியில் இருந்து நவாஸ் ஷெரீப் பதவி விலகும்படி பாகிஸ்தான் இராணுவ தளபதி நேரில் சந்தித்து வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த ஆண்டு பாகிஸ்தானில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் நவாஸ் ஷெரீப் தில்லுமுல்லு செய்து வெற்றி பெற்றதாகவும், இதனால் அவர் பிரதமர் பதவியில் இருந்து விலகி தேர்தலை சந்திக்க வலியுறுத்தியும் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் தெஹ்ரீக் இன்சாப் கட்சியும், மதகுரு தாஹிர் உல் காத்ரியின் பாகிஸ்தான் அவாமி தெஹ்ரீக் கட்சியும் இணைந்து தீவிர போராட்டத்தில் குதித்துள்ளன.
இக்கட்சிகளின் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் தங்களது தலைவர்களின் முன்னிலையில் கடந்த 2 வாரங்களாக தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள பாராளுமன்ற கட்டிடத்தை முற்றுகையிட்டு போராடி வந்தனர்.
எனினும், நவாஸ் ஷெரீப் பதவி விலகப்போவதில்லை என்று திட்டவட்டமாக கூறி பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்த வருமாறு இம்ரான்கானுக்கு அழைப்பு விடுத்தார்.
இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை இம்ரான்கான், தாஹிர் உல் காத்ரியின் உத்தரவின் பேரில் தொண்டர்கள் நவாஸ் ஷெரீப்பின் வீட்டை முற்றுகையிடுவதற்காக இஸ்லாமாபாத்தில் உள்ள அவரது அதிகாரபூர்வ இல்லத்தை நோக்கி பேரணியாக புறப்பட்டனர். அப்போது ஊர்வலத்தில் வந்தவர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 8 பேர் பலியானார்கள். 500–க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த பதற்றம் தணிவதற்குள் நேற்று காலை தாஹிர் உல் காத்ரியின் கட்சியின் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் இஸ்லாமாபாத்தில் உள்ள அரசு தொலைக்காட்சியான பி.டி.வி. ஒளிபரப்பு அலுவலகத்திற்குள் புகுந்தனர். அங்கு வேலை செய்து கொண்டிருந்த ஊழியர்களை பணி செய்ய விடாமல் தாக்கினர். மேலும் டி.வி. ஒளிபரப்பையும் தடை செய்தனர். அந்த அலுவலகத்தை அவர்கள் சூறையாடினார்கள்.
இதையறிந்த மதகுரு தாஹிர் உல் காத்ரி தனது தொண்டர்களை டி.வி. அலுவலகத்தில் இருந்து உடனடியாக வெளியேறும்படி உத்தரவிட்டார்.
இதனிடையே, அங்கு விரைந்த இராணுவத்தினர் ஆர்ப்பாட்டக்காரர்களை உடனடியாக விரட்டியடித்து அவர்களின் பிடியில் இருந்து பி.டி.வி. ஒளிபரப்பு அலுவலகத்தை மீட்டனர்.
இந்த நிலையில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நவாஸ் ஷெரீப் விடுத்திருந்த அழைப்பை இம்ரான்கான் ஏற்க மறுத்துவிட்டார்.
போராட்டம் நடைபெறும் இடமான பிரதமர் இல்லத்திற்கு வெளியே தொண்டர்கள் மத்தியில் நேற்று இம்ரான்கான் பேசினார்.
அப்போது, ‘‘நவாஸ் ஷெரீப் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும். கட்சி தொண்டர்கள் போராட்டத்தின்போது அமைதி காக்கவேண்டும். நீங்கள் எந்த வன்முறைச் செயல்களிலும் ஈடுபடக்கூடாது. நவாஸ் ஷெரீப்பின் ஆட்சி முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது. எனவே, இதில் இராணுவம் தலையிடவோ, சமரசம் செய்யவோ வேண்டாம்’’ என்று அவர் கேட்டுக்கொண்டார்.
எனினும், நவாஸ் ஷெரீப்பின் இல்லத்தை முற்றுகையிட்டிருந்த இரு கட்சி தொண்டர்களும் நேற்று மதியம் மீண்டும் வன்முறையில் ஈடுபட்டனர்.
அப்போது, அவர்கள் அங்கு குவிக்கப்பட்டிருந்த பொலிஸாரை நோக்கி கற்களை வீசினர். தடிகளாலும் பொலிஸாரை தாக்கினர். இதையடுத்து அவர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை அவர்கள் மீது வீசினர்.

மேலும், போராட்டக்காரர்களை ஒடுக்க இராணுவமும் அங்கு வரவழைக்கப்பட்டது. இராணுவத்தினர் விரைந்து சென்று ஆர்ப்பாட்டக்காரர்களை பிரதமரின் இல்லத்துக்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தினர்.
இந்த நிலையில் பாகிஸ்தானில், எப்போதுமே தனி அதிகாரத்தை செலுத்தி வரும் இராணுவம், நேற்று ராவல்பிண்டி நகரில் உள்ள இராணுவ தலைமையகத்தில் அதிகாரிகளின் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தியது. கூட்டத்திற்கு இராணுவ தளபதி ரஹீல் ஷெரீப் தலைமை தாங்கினார்.
இதில் கமாண்டர்கள் அளவிலான அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதன் பிறகு இஸ்லாமாபாத்தில் நடந்து வரும் போராட்டங்களை சுட்டிக்காண்பித்து இராணுவ தரப்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது:–
சனிக்கிழமை இரவு நடந்த வன்முறை அதிருப்தி அளிப்பதாக உள்ளது. இந்த வன்முறையால் பலர் இறந்துள்ளனர். ஏராளமானவர்கள் படுகாயமடைந்து இருக்கிறார்கள். இந்த சம்பவங்களும், நாட்டில் உள்ள தற்போதைய அரசியல் நெருக்கடியும் மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது. இராணுவம் எப்போதுமே நாட்டில் ஜனநாயகத்துக்கு தனது ஆதரவை தெரிவிப்பதில் உறுதியாக இருக்கிறது.
எனினும், போராட்டக்காரர்களுக்கு எதிராக படைகளை பயன்படுத்துவது, இப்பிரச்சினையை மேலும் தீவிரமாக்குவதாக அமைந்து விடும். எனவே மீண்டும் வன்முறைக்கு இடம் கொடுக்காத வகையில், இந்த பிரச்சினைக்கு உடனடியாக அரசியல் ரீதியாக தீர்வுகாண வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக பாகிஸ்தான் இராணுவ தளபதி ரஹீல் ஷெரீப் நேற்று மாலை பிரதமர் நவாஸ் ஷெரீப்பை இஸ்லாமாபாத்தில் சந்தித்து பேசினார்.

அப்போது, நவாஸ் ஷெரீப் தற்காலிகமாக 3 மாத காலம் பதவியில் இருந்து விலகி இருக்கும்படியும், இந்த கால கட்டத்தில் போராட்டக்காரர்களின் கோரிக்கைகளை ஏற்று தேர்தல் தில்லுமுல்லு குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தலாம் என்று அவர் யோசனை தெரிவித்ததாகவும் பாகிஸ்தான் டி.வி.சேனல்கள் பரபரப்பு செய்தி வெளியிட்டன.
எனினும் இதை பாகிஸ்தான் அரசும், இராணுவமும் தனித்தனியே மறுத்தன. இது அடிப்படை ஆதாரமற்ற செய்தி என்று இரு தரப்பும் விளக்கம் அளித்தன.
இந்த நிலையில் இம்ரான்கான், மதகுரு தாஹிரி உல் காத்ரி கட்சி தொண்டர்களின் போராட்டம் மேலும் வலுத்து வன்முறை மீண்டும் வெடித்தால் ஊரடங்கு உத்தரவையோ, இராணுவ சட்டத்தையோ இராணுவம் அமுல்படுத்தும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ஒருவேளை நவாஸ் ஷெரீப் பதவி விலகினால், இடைக்கால அரசை நிறுவி பாராளுமன்றத்துக்கு உடனடியாக தேர்தல் நடத்தி புதிய அரசை அமைக்கவும் வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.
எனினும் பாகிஸ்தான் அரசியல் நோக்கர்களில் சிலர் இப்படி நடைபெற வாய்ப்பில்லை என்கிறார்கள். அரசியலில் நிலவும் இதுபோன்ற குழப்பமான நிலைமையை சாதகமாக பயன்படுத்தி பாகிஸ்தானில் இராணுவம் மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என்றே அவர்கள் கருதுகிறார்கள்.
இதுவரை பொறுமை காத்து வந்த இராணுவம் நவாஸ் ஷெரீப் அரசுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுக்கும் விதமாக கடுமையாக அறிக்கை விடுத்திருப்பதை இதற்கு ஆதாரமாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த நிலையில் பாகிஸ்தானின் அரசியல் நிலவரம் குறித்து பிரதமர் நவாஸ் ஷெரீப் இன்று (செவ்வாய்க்கிழமை) பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் பேசுகிறார். தனது கட்டுப்பாட்டில் ஆட்சி இருப்பதாக காட்டுவதற்கு பாராளுமன்றத்தை அவர் கூட்டினாலும், தற்போது நவாஸ் ஷெரீப் அரசியல் ரீதியாக பலவீனம் அடைந்திருப்பதாகவே பாகிஸ்தான் அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.







0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top