16 வருடங்களுக்கு முன்..

தனித் தலைமைத்துவத்திற்காக

ஆக்ரோஷமாக தோளில் சுமந்த சாய்ந்தமருது மக்கள்

பத்திரிகையில் செய்தி பிரசுரிப்பதற்கு முன்னரே

கேட்டறிந்து சந்தோஷப்பட்ட  ஹக்கீம்



அமைச்சு அதிகாரத்தில் சமநிலையில் அன்று இருந்து கொண்டிருந்த பேரியல் அஷ்ரப் அவர்கள் அவரின் ஆதரவாளர்களுடனும் பாதுகாப்புப் பிரிவினரின் பலத்த பாதுகாப்புடனும் 2001 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசலுக்கு முன் அமைக்கப்பட்டிருந்த மேடையில்  அமர்த்திருந்து கூட்டம் நடத்திக் கொண்டிருந்தபோது முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களை சாய்ந்தமருது மக்கள் மாளிகைக்காடு சந்தியிலிருந்து சாய்ந்தமருது பிரதான வீதியினூடாக ஹக்கீம் அவர்களுக்கு ஆதரவான கோஷங்களை ஆக்ரோசமாக  எழுப்பியவர்களாக lதோளில் சுமந்து வந்து அந்த மேடையில் அமர்த்தி மு.கா. கட்சியின் தனித் தலைமைத்துவமாக பிரகடனப்படுத்திய சம்பவம் 17 வருடங்கள் கடந்துள்ளபோதிலும்  இன்றும் இப்பிரதேச மக்களுக்கு நினவிருக்கும்.
இக்கூட்டம் சம்மந்தமான தகவல் ஒன்றை  முதன்முறையாக 16 வருடங்களுக்குப் பின்  உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.
அந்தக் காலத்தில் தேசிய பத்திரிகை ஒன்றின் செய்தியாளராக நான் இருந்துகொண்டிருந்தேன். சாய்ந்தமருதில் ஹக்கீம் அவர்களை இணைத் தலைமைத்துவத்திலிருந்து தனித் தலைமைத்துவமாக மக்கள் பிரகடணப்படுத்திய கூட்டம் குறித்த செய்தியை விரிவாக எழுதி அன்றே பத்திரிகைக் காரியாலயத்திற்கு அனுப்பியிருந்தேன்.
அந்த சந்தர்ப்பத்தில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் இணைப்பாளர்களில் ஒருவராக இருந்த பொத்துவில் ஜவ்பர் ( அவர் சுற்று லாத்துறையில் உயர் அதிகாரியாகக் கடமையாற்றுகின்றார்) என்னோடு தொலைபேசி மூலமாக அடிக்கடி தொடர்பில் இருந்து வந்துள்ளார்.
அவர் கூட்டம் இடம்பெற்ற அன்று இரவு என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். ரவூப் ஹக்கீம் ,பேரியல் அஷ்ரப் ஆகியோர் கலந்து கொண்ட  சாய்ந்தமருது கூட்டத்திற்குச் சென்றீர்களா? அது குறித்த செய்தியை எழுதி அனுப்பி விட்டீர்களா என என்னிடம் கேட்டார். ஆம் என   அவரிடம் தெரிவித்தேன். அதை வாசித்துக் காட்டுவீர்களா எனக் கேட்டார். சரி எனக் கூறிவிட்டு வாசித்துக் காட்டினேன். நன்றாக எழுதியுள்ளீர்கள் எனக்கூறிவிட்டு வேறு விடயங்களைப் பேசிவிட்டு போனை வைத்துவிட்டார்..
அன்று இரவு 10.30 மணியிருக்கும் எனது வீட்டு தொலைபேசி ஒலித்தது. இந்த இரவு நேரத்தில் யாராக இருக்கும் என தொலைபேசியைத் தூக்கினேன். எனது பெயரைச் சொல்லி பேசுகின்றிர்கள்? எனக் கேட்டுவிட்டு சலாம் சொன்னவராக நான் ரவூப் ஹக்கீம் பேசுகின்றேன். சாய்ந்தமருதுக் கூட்டத்திற்கு வந்தீர்களா? என்று கேட்டார். ஆம் வந்தேன் என்று அவருக்கு கூறினேன். செய்தியை எழுதிவிட்டீர்களா என்று கேட்டார். ஆம் எழுதி அனுப்பிவிட்டேன் பெரும்பாலும் நாளை பத்திரிகையில் வெளிவரலாம் என்றும் கூறினேன்.
ஹக்கீம் அவர்கள் அந்தச் செய்தியை எனக்கு வாசித்துக் காட்டுவீர்களா? என என்னிடம் கேட்டார். ஆம் எனக் கூறி என்னால் எழுதப்பட்டு பத்திரிகைக்கு அனுப்பி வைக்கப்பட்ட  விரிவான அந்தச் செய்தியை அவருக்கு வாசித்துக் காட்டினேன்..
ஹக்கீம் அவர்கள் சந்தோஷப்பட்டவராக எனது பெயரைச் சொல்லி நன்றாக எழுதியுள்ளீர்கள். மிச்ச உபகாரம் உங்கள் ஊருக்கு வரும்போது உங்களைக் கட்டாயம் சந்திப்பேன் எனக் கூறிவிட்டு பேச்சை முடித்து போனை வைத்துவிட்டார்.
என்னால் எழுதப்பட்ட அந்தச் செய்தி அடுத்த நாள் பத்திரிகையில் முன் பக்கத்தில் பிரதான தலைப்புச் செய்தியாக படத்துடன் விரிவாக பிரசுரிக்கப்பட்டிருந்தது.
இன்று 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி இதை பதிவேற்றும் போது 16 வருடங்கள் 10 மாதங்கள் 23 நாட்கள் கடந்துவிட்டன. ஆனால், ஹக்கீம் அவர்கள் எமது பகுதிக்கு பலமுறை வந்தார். ஊருக்கு வரும்போது உங்களைக் கட்டாயம் சந்திப்பேன் என்று அன்று கூறியவர் இதுவரை என்னை நேரடியாகச் சந்திக்கவும் இல்லை என்னுடன் எந்தப் பேச்சும் பேசவில்லை. இது ஊடகவியலாளராக இருந்த எனக்கு நடந்த சம்பவம் இது வேறு விடயம்.
கட்சியின் தனித் தலைமைத்துவத்திற்கு ஹக்கீம் அவர்களைக் கொண்டு வருவதற்கு உறுதுணையாக இருந்த  இந்த சாய்ந்தமருதில்தான் இங்குள்ள மக்களின் முடிவுக்கு மாற்றமாக அம்மக்களின் நியாயமான தனியான உள்ளூராட்சி மன்றக் கோரிக்கை தொடர்பான போராட்டத்தில் பங்கு கொள்ளாதவர்களை வேட்பாளர்களாக நிறுத்தி இம்மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக தேர்தல் பிரச்சாரங்களுக்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது என்பது சாய்ந்தமருது மக்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் செயலாக அமைந்துள்ளதாக மக்கள் கருதுகின்றனர்.
சாய்ந்தமருதில் நேரடியாக வேட்பாளர்களை நிறுத்தியிருப்பது சாய்ந்தமருது மக்களின்  கோரிக்கையை மழுங்கடிப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ் துணை போயுள்ளதா என  மக்கள் கேள்வி எழுப்பி ஆத்திரம் அடைந்துள்ளதுடன் இக்கட்சிமீது வெறுப்பையும் வெளிப்படுத்தி வருகின்றார்கள்.
சாய்ந்தமருது மக்கள் தனியான உள்ளூராட்சி மன்றக் கோரிக்கை தொடர்பில் ஏமாற்றப்பட்டு இவ்வூர் மக்களை ஏமாளிகள்போல் நினைத்து கட்சியின் சார்பாக வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்.
சாய்ந்தமருது மக்கள் தமது நியாயமான கோரிக்கையை வென்றெடுப்பதற்கு தங்களது போராட்டத்தின் இன்னுமொரு வடிவமாக, நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சுயேட்சை குழுவொன்றை களமிறக்கியுள்ளனர். இவர்களின் இந்த முடிவு மிகவும் நியாயமானதும், அவசியமானதும் என்பதை நியாயமாகச் சிந்திப்பவர்கள் எவராலும் மறுக்கமுடியாது.
சாய்ந்தமருது மக்கள் குறிப்பாக இளைஞர்கள் வீதிகளில்  இறங்கிப் போராடிய போதும் சாய்ந்தமருதிலுள்ள வர்த்தகர்கள் மூன்று நாட்களாக தமது வர்த்தக நிலையங்களை மூடி ஒத்தாசை வழங்கியிருந்த போதிலும் , அது தொடர்பில் கவனம் செலுத்தாத ஹக்கீம் தலைமையிலான மு.கா மக்கள் பிரதிநிதிகள், தற்போது சாய்ந்தமருது மக்களிடம் வாக்குகளைப் பெறுவதற்காக தமது கட்சி சார்பாக வேட்பாளர்களை நிறுத்தியிருப்பது என்பது தவறான நடவடிக்கையாகும் எனக் கூறி இவ்வூர் மக்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்துகின்றனர்..
சாய்ந்தமருது ஆறு வட்டாரங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தியிருக்கும் மு.கா. செயல்பாடானது சாய்ந்தமருது  மக்களை ஏமாளி மக்களாகவும் எளிதில் ஏமாற்றக்கூடிய மக்களாகவும் சகலவற்றையும் மறந்து ஆதவன் எழும்பி வந்தான் என்ற பாட்டைக் கேட்டு கட்சிக்காக வாக்களிப்பவர்கள் என்றும் ஹக்கீம் தலைமையிலான மு.கா கட்சியினர் நம்பி செயல்படுகின்றனரா என்றும் சாய்ந்தமருது மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
கட்சியின் தலைவரான ஹக்கீமுக்கும் மு.கா கட்சியின் வளர்ச்சிக்கும் மிகப் பங்களிப்புச் செய்த  சாய்ந்தமருது மக்களின் நியாயமான கோரிக்கை தொடர்பிலான போராட்டங்களுக்கு மு. கா. ஒரு அங்கமாகவே இம்மக்களுடன் இணைந்து செயற்பட்டிருக்க வேண்டும்.
குறைந்தது சாய்ந்தமருதில் நடைபெறவிருக்கும் உள்ளூராட்சித் தேர்தலில்  நேரடி அரசியல் செயற்பாடுகளை விட்டும் விலகியிருந்து இம்மக்களின் கோரிக்கை நிறைவேற உதவியிருக்க வேண்டும். அதைவிடுத்து இந்த மக்களின் விருப்பதை நிறைவேற்றாத இவர்கள் இம்மக்களிடம் வாக்கு கேட்பது என்ன நியாயம் என்றும் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
2001 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களை கட்சியின் தனித்தலைவராக சாய்ந்தமருது மக்கள் சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசலுக்கு முன் பிரகடணப்படுத்தினார்கள்.
2018 ஆம் ஆண்டு அதே பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி அதாவது 17 வருடங்களுக்குப் பின் சாய்ந்தமருது மக்கள் பள்ளிவாசல் தலைமையில் என்ன தீர்ப்பை வழங்கி பாடம் புகட்டப் போகின்றார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.
.எல்.ஜுனைதீன்,


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top