சாய்ந்தமருதில் ஹக்கீமின் வருகை
பொதுமக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது.
சாய்ந்தமருதில்
2017.12.24 - ஞாயிற்றுக்கிழமை நடைபெற ஏற்பாடாகி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீம் கலந்து கொள்ளவிருந்த இரு நிகழ்வுகள் பொதுமக்களின் பாரிய எதிர்ப்பின் காரணமாக கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சாய்ந்தமருதில் நடைபெறும் தோணா அபிவிருத்தியை பார்வையிடுவதுடன், கல்முனை மாநகர சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் சாய்ந்தமருதைச் சேர்ந்த வேட்பாளரின் தேர்தல் பணிமனை திறப்புவிழா நிகழ்விலும் மு.கா தலைவர் றவூப் ஹக்கீம் கலந்துகொள்ளவுள்ளார் என்ற செய்தி வேகமாகப் பரவியது.
இதனை அறிந்த சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட பொதுமக்களும் இளைஞர்களும் சாய்ந்தமருது மக்கள் பணிமனை முன்றலில் அணிதிரண்டனர். அங்கு குழுமிய பொதுமக்கள் சாய்ந்தமருது பிரகடத்தை மீறி நடைபெற ஏற்பாடாகும் குறித்த இரு நிகழ்வுகளையும் தடுத்து நிறுத்த வேண்டுமென மிகுந்த ஆக்ரோஷத்துடன் காணப்பட்டனர்.
மேற்படி பதற்ற நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவும் நிலமையை சுமுகமானதாக ஆக்கவும் பல பிரமுகர்கள் தலையீடு செய்தபோதும் பொதுமக்களின் எதிர்ப்பை கட்டுப்படுத்த முடியாது போனது. பொதுமக்கள் பட்டாசுகளை கொழுத்தி வீதிகளில் போட்டதுடன் கறுப்பு கொடிகளையும் ஏந்தியவண்ணம் தமது எதிர்ப்பினை வெளியிட்டனர்.
இதன் பின்னர், அங்கு மேலும் பல பொதுமக்களும் இளைஞர்களும் வந்து சேர்ந்ததால் நிலமை இன்னும் மோசமடைந்தது. இவர்கள் அனைவரும் கால்நடையாகவு ம் மோட்டார் பைசிகள் மற்றும் துவிச்சக்கர வண்டிகளில் பேரணியாக நிகழ்வு நடைபெறவிருந்த தோணா பகுதியை நோக்கி விரைந்து சென்றனர்.
தோணாவுக்கு செல்லும் வீதியிலேயே குறித்த தேர்தல் காரியாலயம் திறப்பதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்றுக் கொண்டிருந்தன. இந்த காரியாலத்திற்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்ததையும் அவதானிக்க முடிந்தது.
குறித்த காரியாலயத்தை அடைந்த பொதுமக்கள் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியதுடன் பட்டாசுகளை கொழுத்தியும் கறுப்புக் கொடிகளை காட்டியும் கோஷங்களை எழுப்பியவாறும் நின்று அந்த நிகழ்வில் சாய்ந்தமருதுக்கு துரோகம் செய்த அரசியல்வாதிகள் சாய்ந்தமருதுக்குள் நுழையக் கூடாது என உரத்த குரலில் கோஷமிட்டனர். இதன்போது பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே சிறு முறுகல் நிலையும் காணப்பட்டது.
பின்னர், தோணா பகுதிக்கு விரைந்த பொதுமக்கள் அந்த இடத்தில் குழுமி நின்றவாறு எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். சுமார் ஒரு மணித்தியாலயம் அங்கு கூடி நின்ற பொதுமக்கள் சாய்ந்தமருது மண்ணையும் மக்களையும் பள்ளிவாசல் நிருவாகத்தையும் ஏமாற்றிய தலைமையும் அந்த கட்சியின் அரசியல்வாதிகளும் எமது ஊருக்குள் வர ஒருபோதூம் அனுமதிக்கப் போவதில்லை என்று சபதம் எடுத்துக் கொண்டனர்.
இந்த தோணா பகுதியில் பொதுமக்களின் எதிர்ப்பு நடவடிக்கையை எதிர்கொள்ளும் பொருட்டு பொலிஸ் குழுவொன்று களமிறக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டிருந்ததை அவதானிக்க கூடியதாகவிருந்தது.
இந்த மக்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளை வீடியோ பண்ணுவதற்காக அந்த இடத்திற்கு வந்த மு.கா வின் முகநூல் எழுத்தாளர் ஒருவரை பொதுமக்கள் விரட்டியடித்ததையும் காண முடிந்தது.
இறுதியாக முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் சிலரது வீடுகளுக்குச் சென்ற பொதுமக்கள் அவர்களை சாய்ந்தமருது பிரகடணத்தை மீறும் வகையில் செயற்பட வேண்டாம் அறிவுறுத்தியதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
- மக்கள் சக்தி
0 comments:
Post a Comment