சட்டவிதிகளை மீறி 7 ஊர்வலங்கள்

தடுத்து நிறுத்தாதது ஏன்?

பொலிஸாரிடம் விளக்கம் கோருகிறார்

தேர்தலுக்கான பிரதி பொலிஸ் மா அதிபர்


தேர்தல் சட்ட விதிகளை மீறி கடந்த வியாழக்கிழமை நடத்தப்பட்ட ஏழு ஊர்வலங்களுக்கெதிராக சட்டத்தை அமுல்படுத்தாததற்கான உரிய விளக்கங்களை வழங்குமாறு தேர்தல்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சீ.டி விக்கிரமரட்ன சம்பந்தப்பட்ட ஏனைய பிரதி பொலிஸ் மா அதிபர்களிடம் விளக்கம் கோரியிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர நேற்று தெரிவித்துள்ளார்.
அத்துடன் தேர்தல் சட்ட விதிகளை மீறி நடத்தப்படும் ஊர்வலங்களுக்கெதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு ஏற்கனவே பணிப்புரை விடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொலிஸாருக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்குமிடையில் நேற்று காலை இடம்பெற்ற இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தையையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இச்சந்திப்பில் தேர்தல்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் , பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உள்ளிட்ட மேலும் பல சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள் கலந்து கொண்டனர்.

தேர்தல் கடமையில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக ஊழியர்களை அமர்த்துவதற்கென டிசம்பர் 31 ஆம் திகதி வரை 30 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் கூறினார்.
இதற்கு மேலதிகமாக ஜனவரி முதலாம் திகதி முதல் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவடையும் வரையான காலப்பகுதிக்கு அவசியமான நிதி பின்னர் வழங்கப்படுமென்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலான முறைப்பாடுகளை பெற்றுக் கொள்வதற்காக சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தில் விசேட தொலைபேசி இலக்கமொன்று நிறுவப்படுமென தெரிவித்த அவர், விரைவில் இத்தொலைபேசி இலக்கம் ஊடகங்களுக்கு அறிவிக்கப்படுமென்றும் கூறினார்.
"வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் வீட்டுக்கு வீடு சென்று முன்னெடுக்கும் தேர்தல் பிரசாரம் காரணமாகவே பாரிய வன்முறைகள் இடம்பெறுகின்றன. அதனை கட்டுப்படுத்துவதற்கு சட்டத்தில் இடமில்லை. அவ்வாறான சந்தர்ப்பத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் என்ற வகையில் பொலிஸாருக்கு முன்வைக்கப்படும் அறிவுறுத்தல்களை பொலிஸார் பின்பற்ற முடியும்.
இதற்காக தேர்தல்கள் ஆணையாளர் கட்சி தலைவர்களுடனான சந்திப்பின் பின்னர் பிரசாரத்துக்காக வீட்டுக்கு வீடு செல்லும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை தீர்மானிக்க முடியும்." என்றும் அவர் விளக்கமளித்தார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்ட விதிகளுக்கமைய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமையவே அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டியிருப்பதனால் தேர்தல் நடவடிக்கைகளை கையாள்வதற்காக விசேட சட்டத்தரணியொருவரை நியமிக்குமாறும் தலைவர் மஹிந்த தேசப்பிரிய சட்டமா அதிபரை கோரியிருப்பதாக தெரிவித்த பொலிஸ் பேச்சாளர் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்த முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதற்கு பொலிஸார் இச்சந்தர்ப்பத்தில் இணக்கம் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார்.

கடந்த வியாழக்கிழமை ஊர்வலங்கள் நடத்தப்பட்ட போதிலும் பொலிஸார் தமக்கான அதிகாரங்களை பயன்படுத்தி அவற்றைக் கட்டுப்படுத்தியுள்ளனர். எனினும் முறையாக நடவடிக்கை எடுக்கப்படாத ஏழு ஊர்வலங்கள் தொடர்பில் தேர்தல்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.


0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top