அம்பாறை மாவட்டமும்  முஸ்லிம் காங்கிரஸும்

முஸ்லிம் அரசியல் அரங்கில் அம்பாறை மாவட்டத் தேர்தல் களம் முக்கியமானது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மாவட்டங்களில் அம்பாறை மாவட்டம் முதன்மையானது.  
முஸ்லிம் சமூகத்தில் பிரதான அரசியல் கட்சியாகவுள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தளம் என அறியப்படுவதும் அம்பாறை மாவட்டமாகும்.
எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் அனைத்து முஸ்லிம் கட்சிகளும் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுகின்றன. ஐக்கிய மக்கள் கூட்டணி எனும் பெயரில் பஷீர் சேகுதாவூத் மற்றும் ஹசன் அலி ஆகியோரின் ஐக்கிய சமாதான கூட்டணியுடன் இணைந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அந்தக் கட்சியின் மயில் சின்னத்தில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுகிறது.  
முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸும் அதன் குதிரைச் சின்னத்தில் அங்கு போட்டியிடுகிறது. ஆனால், முஸ்லிம் சமூகத்தில் பிரதான கட்சி எனக் கூறப்படுகின்ற முஸ்லிம் காங்கிரஸின் மரச்சின்னம் இம்முறை அம்பாறை மாவட்ட தேர்தல் களத்தில் இல்லை என்பது, அந்தக் கட்சியின் ஆதரவாளர்களுக்கு கசப்பான செய்தியாக இருந்து கொண்டிருக்கிறது.
அம்பாறை மாவட்டத்தின் அனைத்து உள்ளூராட்சி சபைகளிலும், ஐக்கிய தேசியக் கட்சியியுடன் இணைந்து, யானைச் சின்னத்தில்தான் முஸ்லிம் காங்கிரஸின் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அம்பாறை மாவட்டத்தில், முஸ்லிம் காங்கிரஸ் தனித்து, அதன் மரச்சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்று, கட்சியின் உள்ளூர் மட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட போதிலும், யானைச் சின்னத்தில் போட்டியிடும் தீர்மானத்திலிருந்து மு.கா தலைமை விலகவில்லை.  

மு.காவின் கோட்டை என்று கூறப்படும் அம்பாறை மாவட்டத்தில், ஒரு குட்டித் தேர்தலில் அந்தக் கட்சியால் தனித்துக் களமிறங்க முடியாமல் போனமை சிந்திக்க வேண்டிய விடயமாகும்.
முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து போட்டியிடும் ஐக்கிய தேசியக் கட்சி குறித்து அம்பாறை மாவட்ட முஸ்லிம்களிடம், கசப்பானதோர் அபிப்பிராயம் உள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் இறக்காமம் பிரதேசத்திலுள்ள மாயக்கல்லி மலைப் பகுதியில், புத்தர் சிலையைக்  கொண்டு வந்து வைத்ததன் பின்னணியில், ஐக்கிய தேசியக் கட்சியின் அம்பாறை மாவட்ட அமைச்சர் தயா கமகே இருந்தார் என்று கூறப்படுவதை, முஸ்லிம் மக்கள் மிக நன்கு அறிவர்.
 “மாயக்கல்லி மலையில் வைக்கப்பட்டிருக்கும் சிலையை அரசாங்கம் அகற்றினால், எனது அமைச்சுப் பதவியை இராஜினாமாச் செய்வேன்என்று, அமைச்சர் தயாகமகே பகிரங்கமாகக் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.  

அதனால்தான், மாயக்கல்வி மலையில் புத்தர் சிலையை வைத்ததற்கும், அதனை அகற்றாமல் இருப்பதற்கும் காரணமாக இருப்பது ஐக்கிய தேசியக் கட்சிதான் என்கிற முடிவுக்கு இங்குள்ள முஸ்லிம் மக்கள் வந்தனர். அதன் காரணமாகத்தான், ஐக்கிய தேசியக் கட்சியை அண்மைக்காலமாக விரோதத்துடன் முஸ்லிம் மக்கள்  பார்க்கத் தொடங்கினர்.  

இந்த ஈரம் காய்வதற்குள்தான் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கைகோர்த்துக் கொண்டு, உள்ளூராட்சித் தேர்தலில் களமிறங்கும் முடிவை முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் எடுத்துள்ளார்.   

அதனால்தான், உள்ளூராட்சித் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் அதன் மரச்சின்னத்தில் போட்டியிட வேண்டுமென்று, அந்தக் கட்சியின் அட்டாளைச்சேனை மத்திய குழுவினர் தீர்மாமொன்றை எடுத்து, அதைக் கட்சித் தலைவருக்கும் அறிவித்திருந்தனர்.
அம்பாறை மாவட்டத்தில், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து, அதன் யானைச் சின்னத்தில் மு.கா போட்டியிடுவது குறித்து, முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட ஆதரவாளர்களிடையே அதிருப்தி உள்ளமை குறித்து, கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீமும் மிக நன்கு அறிந்து வைத்துள்ளார்.    
அதனால்தான், “ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து நாங்கள் போட்டியிட்டாலும், யானையின் பாகனாகத்தான் நாங்கள் இருப்போம்என்று மு.கா தலைவர், புத்தளத்தில் வைத்துக் கூற நேர்ந்துள்ளது.
அதாவது, ‘.தே.கட்சியுடன் இணைந்து நாங்கள் போட்டியிட்டாலும், அந்தக் கட்சியைக் கட்டுப்படுத்தும் வல்லமை எங்களிடம்தான் உள்ளதுஎன்று, மு.கா தலைவர் கூறியுள்ளார்ஆனால், மு.கா தலைவர் சொல்வதில் எந்தளவு உண்மை உள்ளது என்பதை, மு.கா தலைவரே மிக நன்றாக அறிவார்..    
 .தே. எனும் யானையின் நிஜ பாகனான ரணில் விக்ரமசிங்கவின் கையில் அங்குசம் இருக்கும் போதே, இடைக்கிடையே யானை விரண்டமை குறித்து ஊரே அறியும்.  
இந்த நிலையில், வெறுங்கையுடன் யானையை அடக்கப் போவதாகக் கூறிக் கொண்டு, பாகன் வேலை பார்க்கப் புறப்பட்டிருக்கும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின்  நிலை பரிதாபத்துக்குரியதாகும்.  
அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் மூக்கணாங்கயிறு அந்த மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் தயாகமகேயின் கைகளில்தான் உள்ளது.

தயா கமகே, .தே.கட்சிக்கு நிதியுதவியளிக்கும் பெரும் வர்த்தகர் எனும் வகையிலும் .தே.கட்சியின் பிரதித் தலைவர் எனும் வகையிலும், அந்தக் கட்சி மீது அவரின் ஆதிக்கம் அதிகமாகவே இருக்கும் என்பதைப் புரிந்து கொள்வதற்கு அரசியல் தெரிந்தவர்கள் அதிகமாகச் சிரமப்படத் தேவையில்லை.  
அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்குக் கிடைக்கும் வெற்றிகள், அமைச்சர் தயா கமகேயின் கைகளை அவரின் கட்சிக்குள் மேலும் பலப்படுத்தும் என்பதும் உண்மையாகும். அதனால்தான், எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில், அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து மு.கா போட்டியிடக் கூடாது என்று, அம்பாறை மாவட்டத்திலுள்ள மு.கா முக்கியஸ்தர்கள் தீர்மானம் எடுத்திருந்தனர்.  
இவை அனைத்தையும் தாண்டி, அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து  முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடுவதற்கான தீர்மானத்தை ரவூப் ஹக்கீம் ஏன் எடுத்தார் என்கிற கேள்வியை எழுப்புவது இங்கு முக்கியமானதாகும்.  
அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளில்
.தே.கட்சிக்குப் பெரிதாக ஆதரவு இல்லை என்பதை, 2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற  உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் மூலம் விளங்கிக் கொள்ள முடியும்.  
அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்களின் வசமுள்ள எட்டு உள்ளூராட்சி சபைகளில், கல்முனை மாநகரசபையில் 2805 வாக்குகளை மாத்திரம் பெற்று, .தே.கட்சி சார்பாக ரு உறுப்பினரும் சம்மாந்துறை பிரதேச சபையில் 1,995 வாக்குகளைப் பெற்று ஐ.தே.கட்சி சார்பாக ஓரு உறுப்பினரும் என இருவர் தெரிவு செய்யப்பட்டிருந்தார்கள்.  
2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற  உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளின் படி சம்மாந்துறை பிரதேச சபையில் 1,995 வாக்குகளும் அக்கரைப்பற்று மாநகர சபையில் 98 வாக்குகளும் பொத்துவில் பிரதேச சபையில் 656 வாக்குகளும் அட்டாளைச்சேன பிரதேச சபையில் 584 வாக்குகளும் நிந்தவூர் பிரதேச சபையில் 467 வாக்குகளும் இறக்காமம் பிரதேச சபையில் 224 வாக்குகளும் அக்கரைப்பற்று பிரதேச சபையில் 07 வாக்குகளும் நாவிதன்வெளி பிரதேச சபையில் 327 வாக்குகளும் என  மொத்தமாக 4,368 வாக்குகள் மாத்திரமே ஐக்கிய தேசியக் கட்சிக்கு அளிக்கப்பட்டிருந்தன.
கல்முனை மாநகர சபையில் அளிக்கப்பட்ட 2,805 வாக்குகளையும் சேர்த்து மொத்தமாக 7,173 வாக்குகளை மாத்திரம் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்காளர்கள் வழங்கியிருந்தனர்.
எனவே, அம்பாறை மாவட்டத்திலுள்ள முஸ்லிம் பிரதேசங்களில் இவ்வாறானதொரு பலவீனமான வாக்கு வங்கியைக் கொண்டுள்ள ஒரு கட்சியுடன், கூட்டணி அமைத்து போட்டியிடுவதில் மு.காவுக்கு என்னதான் நன்மை இருந்துவிடப் போகிறது என்கிற கேள்வியைத் தட்டிக் கழித்து விடவும் முடியாது.  
.தே.கவுடன் இணைந்து மு.காங்கிரஸ் போட்டியிடுவதில், மு.கா ஆதரவாளர்களுக்கு அதிருப்தி உள்ளது என்பதை மு.கா தலைவரும் அறியாதவராக இல்லை. மு.காங்கிரஸின் முதலாவது பிரசாரக் கூட்டம் எங்கு நடத்தப்பட்டது என்பதை வைத்து, அதனை விளங்கிக் கொள்ள முடியும். அம்பாறை மாவட்டம்தான் மு.காங்கிரஸின் கோட்டையாகும்.  
நியாயப்படி அம்பாறை மாவட்டத்திலிருந்துதான் முஸ்லிம் காங்கிரஸின் பிரசாரக் கூட்டம் ஆரம்பித்திருக்க வேண்டும். ஆனால், மு.காவின் முதலாவது பிரசாரக் கூட்டம் புத்தளத்தில்தான் நடைபெற்றது. காரணம் என்ன? புத்தளம் நகரசபைக்கான தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் அதன் மரச்சின்னத்தில் போட்டியிடுகிறது.  

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது மரம், யானை, தராசு மற்றும் இரட்டை இலை ஆகிய நான்கு சின்னங்களில் எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தல்களில் போட்டியிடுகிறது.  
பிரிந்து கிடந்த முஸ்லிம் சமூகத்தை ஒற்றுமைப்படுத்துவதற்காகத்தான் முஸ்லிம் காங்கிரஸை மர்ஹும் எம்.எச்.எம் அஷ்ரப் உருவாக்கினார்.  
ஆனால், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைமையானது இன்று தனது நடவடிக்கைகளுக்கு எதிரானவர்களை பழிவாங்குவதற்காக எந்த பிசாசுடனும் கூட்டு வைத்துக்கொள்வேன் என்பதுபோல் வடக்கில் ஒன்றிலும் கிழக்கில் ஒன்றிலும்  கூட்டுச் சேர்வதுதான் வேதனையான செயல்பாடாகும்.
வடக்கில் கூட்டுச் சேர்வது போன்று அக்கட்சியுடன் கிழக்கிலும் சில இடங்களில் கூட்டுச் சேர்ந்திருந்தால் தமிழ் முஸ்லிம் உறவை வளர்ப்பதற்கு அத்திபாரம் இடுவதுபோல் இருந்திருக்கும்.
ஆனால், வடக்கில் குறிப்பாக வன்னியில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் முஸ்லிம் காங்கிரஸ் தேர்தல் கூட்டு வைத்துக் கொள்வதற்கு முயற்சிப்பதன்  நோக்கம் தனது எதிரியை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கமே தவிர இன ஒற்றுமையை வளர்க்க வேண்டும் என்ற நோக்கமல்ல  

முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் முடிவுகளால் பாதிக்கப்படப் போகின்றவர்கள் கிழக்கு மாகாண முஸ்லிம்கள் குறிப்பாக அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள்தான்.

நன்றி: தமிழ் மிரர் 








0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top