பிணை முறி அறிக்கை ஜனாதிபதியிடம்
உத்தியோகபூர்வமாக கையளிப்பு
இலங்கை மத்திய வங்கி பிணை முறி விநியோகத்தில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் விசாரணை அறிக்கை இன்று (30) ஜனாதிபதியிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
இதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை, ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஆணைக்குழுவின் தலைவர் உச்ச நீதிமன்ற நீதிபதி கே.ரீ. சித்ரசிறியினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டது.
1,000 இற்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட குறித்த அறிக்கையை கையளிக்கும் நிகழ்வில், ஆணைக்குழுவின் செயலாளர், உடுகமசூரிய மற்றும் அதன் உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
மத்திய வங்கி முறி விநியோகத்தில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் விசாரிப்பதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், இவ்வாண்டு ஜனவரி 27 ம் திகதி, ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டது
கடந்த ஏப்ரல் வரையான 3 மாத கால எல்லை வழங்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட குறித்த ஆணைக்குழுவின் கால எல்லை, 3 முறை நீடிக்கப்பட்டு, இறுதியாக கடந்த டிசம்பர் 08 ஆம் திகதி அதன் கால எல்லை நிறைவடைய இருந்த நிலையில், விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கும் பொருட்டு நாளை (31) வரை மேலும் நீடிக்கப்பட்டது.
கடந்த 11 மாதங்களாக இடம்பெற்ற குறித்த ஆணைக்குழுவின் விசாரணையில், முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரன் மற்றும் அவரது மருமகனான பேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவன தலைவர் அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட அரச அதிகாரிகள் மற்றும் பல்வேறு நபர்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்டனர்.
இறுதியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தனது விருப்பத்தின் பேரில் குறித்த ஆணைக்குழுவில் ஆஜராகி வாக்குமூலம் வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, பிணை முறி விடயம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை தொடர்பான சட்ட நடவடிக்கைகளுக்காக, சட்ட மா அதிபரின் ஆலோசனையை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment