ஆசியக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டி
பங்களாதேஷ் அணி 137 ஓட்டங்களால் அபார வெற்றி

ஆசியக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் முதலாவது போட்டி பங்களாதேஷ் வசமாகியது. பங்களாதேஷ் அணி 137 ஓட்டங்களால் அமோக வெற்றியீட்டியது.
நேற்று டுபாயில் ஆரம்பமாகிய போட்டித் தொடரில் இலங்கைபங்களாதேஷ் அணிகள்  மோதிக் கொண்டன.  நேற்றைய போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 261 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 35.2 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 124 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது.    
முதல் ஓவரில் தொடக்க ஆட்டக்காரர்களை வெளியேற்றி வங்காளதேசத்தினருக்கு அதிர்ச்சி அளித்தார் மலிங்கா. முதல் ஓவரின் 5-ம் பந்தில் லிடன் தாஸ், கடைசி பந்தில் சகிப் அல் அசன் ஆகியோரை அவுட்டாக்கினார்.
லக்மல் வீசிய இரண்டாவது ஓவரின் கடைசி பந்து தமிம் இக்பாலின் இடது கையை பதம் பார்த்ததால், வலியில் துடித்த அவர் (2 ஓட்டங்கள்) ரிட்டையர்டு ஹர்ட் முறையில் பெவிலியன் திரும்பினார்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த முஷ்பிகுர் ரஹிம், மொகமது மிதுன் ஆகியோர் 133 ஓட்டங்கள் சேர்த்தனர். மிதுன் (63), மகமதுல்லா (1), உசைன் (1), மிராஜ் (15), மோர்தாசா (11), ருபேல் (2), ரஹ்மான் (10) ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். ரஹீம் 4 சிக்சர்கள், 11 பவுண்டரிகள் அடித்து 144 ஓட்டங்களை குவித்து இறுதியில் ஆட்டமிழந்தார்.
தமிம் இக்பால் (2) ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இறுதியில் வங்காளதேச அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 261 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
இலங்கை அணி சார்பில் மலிங்கா 4 விக்கெட்டும், தனஞ்செயா டி சில்வா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதைத்தொடர்ந்து, 262 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக உபுல் தரங்காவும், குசால் மெண்டிசும் இறங்கினர்.
வங்காளதேச அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி இலங்கை அணி வீரர்களை விரைவில் பெவிலியனுக்கு அனுப்பி வைத்தனர்.
உபுல் தரங்கா 27 ஓட்டங்களிலும், குசால் பெராரா 11 ஓட்டங்களிலும், ஏஞ்சலோ மேத்யூஸ் 16 ஓட்டங்களிலும் அவுட்டாகினர். மற்றவர்கள் ஒற்றை இலக்க எண்ணில் அவுட்டாகினர். 19வது ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 69 ஓட்டங்கள் எடுத்து இலங்கை அணி தத்தளித்தது.
இறுதியில், கடைநிலை வீரர்கள் ஓரளவு போராடினர். தில்ருவான் பெராரா 29 ஓட்டங்களிலும், சுரங்கா லக்மல் 20 ஓட்டங்களிலும் அவுட்டாகினர்.
இறுதியில், இலங்கை அணி 35.2 ஓவரில் 124 ஓட்டங்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் வங்காளதேசம் 137 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
வங்காளதேசம் அணி சார்பில் மோர்டசா, முஸ்தபிசுர் ரகுமான், மெஹிதி ஹசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top