ராஜிவ் காந்தியை பொறியில் சிக்க வைத்த ஜே.ஆர்
நடந்ததை விபரிக்கிறார்
இந்தியாவின் முன்னாள் அமைச்சர் நட்வர் சிங்


இலங்கையின் ஜனாதிபதியாக  இருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் வற்புறுத்தலான கோரிக்கையை அடுத்தே, இந்தியப் பிரதமராக இருந்த ராஜிவ் காந்தி, 1987 ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் திகதி, இந்தியப் படையினரை இலங்கைக்கு அனுப்பினார் என்று, அப்போது இந்தியாவின் முன்னாள் அமைச்சர் கே.நட்வர்சிங் தெரிவித்துள்ளார்.
ராஜிவ் காந்தி அமைச்சரவையில், வெளிவிவகார இணை அமைச்சராக இருந்த நட்வர் சிங், அண்மையில் புதுடெல்லிக்குச் சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி ஹிந்த ராஜபக்வுக்கு,  கடந்த வியாழக்கிழமை சுப்ரமணியன் சுவாமி அளித்த இராப்போசன விருந்தில் பங்கேற்றிருந்தார்.
அந்தச் சந்தர்ப்பத்திலேயே, ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் கோரிக்கையின் பேரிலேயே, இந்தியப் படைகளை ராஜிவ் காந்தி இலங்கைக்கு அனுப்பினார் என்று நட்வர் சிங் புதுடெல்லி ஊடகவியலாளர் வெங்கட் நாராயனிடம், இதனை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்தியா தனது படைகளை தீய நோக்கங்களுடன் தான் சிறிலங்காவுக்கு அனுப்பியது என்று சிறிலங்காவில் குறிப்பிட்ட ஒரு பகுதியினரிடம் இன்னமும் உள்ள சந்தேகத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்றும் நட்வர் சிங் இதன்போது தெரிவித்துள்ளார்.
ராஜிவ் காந்தி, நரசிம்மராவ், மற்றும் அதிகாரிகளுடன், நட்வர் சிங்கும் அப்போது கொழும்பில் இருந்தார். ராஜிவ் காந்தியின் குழுவுடன் விமானத்தில் ஊடகவியலாளர் வெங்கட் நாராயனும், அந்த நேரத்தில் கொழும்புக்குப் பயணித்திருந்தார்.
அவர் இதுபற்றி கொழும்பு ஆங்கில நாளிதழில் வெளியிட்டுள்ள குறிப்பு ஒன்றில், இதுபற்றி விபரித்துள்ளார்.
ராஜிவ் காந்தியின் விமானம் கொழும்பில் தரையிறங்கிய போது, நிலைமைகள் பதற்றமாக இருந்தன. கொழும்பு எரிந்து கொண்டிருந்தது.
ராஜிவ் காந்தியின் குழுவில் இருந்த அனைவரும், ஹெலிகொப்டர்  மூலம், காலிமுகத்திடலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, தாஜ் சமுத்ரா விடுதியில் தங்க வைக்கப்பட்டனர்.
இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தியும், இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவும்,  இந்திய- இலங்கை உடன்பாட்டில் கையெழுத்திட்ட நிகழ்வை, இலங்கை அமைச்சரவையில் இருந்த பாதிப்பேர் புறக்கணித்தனர்.
அப்போது தான், இந்தியப் படையினர் யாழ்ப்பாணத்துக்கு செல்வது பற்றி நட்வர் சிங் முதன் முதலாக கேள்விப்பட்டார். அது அவருக்கு ஆச்சரியமாக இருந்தது.
அவர் உடனடியாக, தமது மூத்த அமைச்சரானநரசிம்ம ராவிடம், இலங்கைக்கு படைகளை அனுப்புவது பற்றி அமைச்சரவையில் ராஜிவ் காந்தி விவாதித்தாரா என்று கேட்டார்.
அப்போது நரசிம்மராவ், இல்லை என்று பதிலளித்தார். உடனடியாக நட்வர் சிங்  அதுபற்றி ராஜிவ் காந்தியிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு ராஜிவ் காந்தி தனக்கு அளித்த பதிலை நட்வர் சிங் நினைவு கூர்ந்தார்.
உடன்பாடு கையெழுத்திட்டவுடன், ஜெயவர்த்தன என்னை அணுகினார். முற்றிலும் அச்சமும், பீதியும் நிறைந்த குரலில் அவர், இன்றிரவு ஒரு சதிப்புரட்சி நடக்கப் போகிறது.
எனக்கு உங்களின் உதவி தேவைப்படுகிறது. உடனடியாக உதவிக்கு வராவிட்டால், நிலைமைகள் கையை மீறிப் போய் விடும்என்று ஜேஆர் கூறினார் என ராஜிவ் காந்தி தெரிவித்தார்.
அப்போது, புதுடெல்லியில் இருந்த பாதுகாப்பு அமைச்சரை அழைத்து, யாழ்ப்பாணத்துக்கு இந்தியப் படையினரை விரைந்து அனுப்புமாறு கேட்கும் படி என்னிடம் ராஜிவ் காந்தி கூறினார்என்று நட்வர் சிங் நினைவுபடுத்தினார்.
அப்போது அமைச்சரவையில் விவாதிக்க நேரம் இருக்கவில்லை. இந்தியப் படைகளை சண்டையிடும் ஒரு இராணுவ நடவடிக்கைக்கு ராஜிவ் காந்தியை ஈடுபடுத்துவதற்கு, இந்திய- இலங்கை உடன்பாட்டின் ஒரு விதியைப் ஜே.ஆர்.ஜெயவர்த்தன பயன்படுத்திக் கொண்டார்.
இதற்கமைய, தமிழ் போராளிக் குழுக்களின் ஆயுதங்களைக் களையும் நோக்கில், 1987 ஜூலை 30ஆம் திகதி அதிகாலையில் இந்திய அமைதிப்படை என்ற பெயரில், இந்தியத் துருப்புக்கள் யாழ்ப்பாணத்தில் காலடி எடுத்து வைத்தன. என்று புதுடெல்லி ஊடகவியலாளர் வெங்கட் நாராணன் தனது செய்திக் குறிப்பில் கூறியுள்ளார்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top