மட்டக்களப்பு பொதுநூலக கட்டட நிர்மாணப்
பணிகளைப் பூர்த்தி செய்வதற்கு
169.97 மில்லியன் ரூபா நிதி
பிரதமர் சமர்ப்பித்த ஆவணத்துக்கு
அமைச்சரவை அங்கீகாரம்
கல்முனை பொது நூலகத்திற்கு
இந்தப் பாக்கியம் இல்லையா?
கல்முனை மக்கள் ஏக்கம்

முன்னாள் வர்த்தக,வாணிபத்துறை அமைச்சர் .ஆர்.மன்சூர் அவர்களின் முயற்சியின் காரணமாக 1981 ஆம் ஆண்டு மார்ச் மாதம் திறந்து வைக்கப்பட்ட இப் பொது நூலகம் இன்று வரை குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய எந்த அபிவிருத்தியும் இன்றி பல குறைபாடுகளுடன் பாழடைந்த ஒரு இடத்தில் உள்ளது போன்று இப்பொது நூலகம் இயங்கிவருகின்றது என வாசகர்களால் குறை தெரிவிக்கப்படுகின்றது.
இப்பொது நூலக வளவின் முன் பகுதிக்கு எல்லையிட்டு  மதில் சுவர் எதுவும் அமைக்கப்படவில்லை. பஸ்கள், ஆட்டோக்கள் என்பன நூலக வளவிற்குள் இரைச்சலுடன் சென்றுதான் திருப்பி  எடுக்கப்படுகின்றன. இதன்போது எழுப்பப்படும் ஹார்ன் சப்தங்களால் நிம்மதியாக வாசிக்க முடிவதில்லை எனவும் வாசகர்கள் குறை தெரிவிக்கின்றனர்.
கல்முனையில் பொது நூலகம் எங்கு இருக்கின்றது என்பதை அறிந்து கொள்வதற்கு இதற்கென பெயர் பலகை  நடப்படவில்லை. வாசகர்களின் மோட்டார் சைக்கிள்கள், துவிச்சக்கர வண்டிகள் என்பனவற்றை பாதுகாப்பாக நிறுத்தி வைப்பதற்கு வாகனத் தரிப்பிடம் முறையாக அமைத்துக் கொடுக்கப்படவில்லை.
இப்பிரதேசத்தில் அன்றிருந்த மறைந்த டாக்டர் முருகேசுப்பிள்ளை, டாக்டர் ஜெகநாதன், கல்விமான் சங்கைக்குரிய  சகோதரர் எஸ். . . மத்தியூ, போன்றோர் உட்பட சாய்ந்தமருது, கல்முனைக்குடி, மருதமுனை, நற்பிட்டிமுனை போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த கல்விமான்கள் கொண்ட ஆலோசனைக் குழுவொன்றை அமைத்து அவர்களின் வழிகாட்டல்களையும் பெற்றுக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட இப் பொது நூலகத்தின் நிலை இன்று பரிதாபத்திலும் பரிதாபகமாகக் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், மட்டக்களப்பில் செயற்பட்டுவரும் பொதுநூலக கட்டடத்திற்கு பதிலாக புதிய கட்டடம் ஒன்றுக்கான நிர்மாணப் பணிகள் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தக் கட்டடத்தின் நிர்மாணப் பணிகளை பூர்த்தி செய்வதற்கு மேலும் தேவைப்படும் 169.97 மில்லியன் ரூபா நிதி 2019 ஆம் ஆண்டின் வரவு செலவு திட்டத்தின் மூலம் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.
இதற்காக தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்தப் பாக்கியம் கல்முனை பொது நூலகத்திற்கு கிடைப்பது எப்போது என கல்முனைப் பிரதேச மக்கள் ஏங்குகின்றனர்.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top