”நாமலுக்கு வயது போதாது
என்று இந்தியாவில் கூறவில்லை”
– குத்துக்கரணம் அடித்த மஹிந்த
ஜனாதிபதித் தேர்தலில் தனது மகன் நாமல் ராஜபக்ஸ போட்டியிடுவதற்கு வயது போதவில்லை என்று, இந்திய ஊடகங்களுக்கு தாம் கூறியதாக இலங்கை ஊடங்கள் பொய்யான செய்தியை வெளியிட்டதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கூறியிருக்கிறார்.
அண்மைய இந்தியப் பயணம் தொடர்பாக, கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதுபற்றி கூறியுள்ளார்.
நாமல் ராஜபக்ஸ ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு, வயது போதாது என்று மஹிந்த ராஜபக்ஸ கூறியிருந்த கருத்தை முன்வைத்து, வயது போதுமானதாக இருந்திருந்தால், அவரே ஜனாதிபதித் வேட்பாளர் என்று கூற முற்படுகிறீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.
அதற்குப் பதிலளித்துள்ள மஹிந்த ராஜபக்ஸ, ”நாமலுக்கு 35 வயது பூர்த்தியாகாததால், அவர் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்க முடியாது என்று நான் இந்திய ஊடகங்களிடம் கூறியதாக இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அது முற்றிலும் பொய்.
உங்களின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடுவாரா என்று இந்திய ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
எனது சகோதரர்கள் போட்டியிடுவதற்கு எந்தத் தடையும் இல்லை என்று நான் பதிலளித்திருந்தேன். கட்டாயமாக எனது சகோதரர்களைக் களமிறக்குவேன் என்று நான் ஒருபோதும் கூறவில்லை. இந்திய ஊடகங்களிடம் நான் கூறிய கருத்து இங்குள்ள சில ஊடகங்களும், சமூக ஊடகங்களும், திரித்து வெளியிட்டுள்ளன” என்று குறிப்பிட்டுள்ளார்.
எனினும், மஹிந்த ராஜபக்ஸ ‘தி ஹிந்து’ நாளிதழுக்கு அளித்திருந்த செவ்வியின் கடைசி கேள்விக்குப் பதிலளித்த போது,
“எனது மகன் ( நாமல் ராஜபக்ஸ) ஜனாதிபதி வேட்பாளராக முடியாது. அவர்கள் குறைந்தபட்ச வயதெல்லையை, 30 இல் இருந்து இப்போது 35 ஆக அதிகரித்திருக்கிறார்கள். எனவே 2019இல் அவரைக் கருத்தில் கொள்ள முடியாது.
எனது சகோதரர் நிச்சயம் ஒரு போட்டியாளராக இருப்பார். ஆனால், கட்சி மற்றும் கூட்டணி தான் யார் என்பதை முடிவு செய்யும்” என்று மஹிந்த ராஜபக்ஸ கூறியிருந்தார்.
மஹிந்த ராஜபக்ஸவின் நெருங்கிய நண்பரான சுப்ரமணியன் சுவாமியின் மகளான சுஹாசினி ஹைதரே, மஹிந்த ராஜபக்ஸவை ‘தி ஹிந்து’ நாளிதழுக்காக செவ்வி கண்டிருந்தார் என்பதும், அந்தச் செவ்விக்கு அவர் மறுப்புத் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மஹிந்த ராஜபக்ஸவிடம் எழுப்பப்பட்ட கேள்வியும் அவர் அதற்கு அளித்த பதிலும், கீழ் தரப்பட்டுள்ளது.
Will it be a member of
your family, or would you consider someone outside it?
My son [Namal Rajapaksa] can’t be a
presidential candidate since they have now raised the minimum age to 35 years,
instead of 30, so he can’t be considered in 2019. My brother is certainly a
contender, but the party and the coalition will have to decide who the people
want.
– (The Hindu)
0 comments:
Post a Comment