ஆசியக் கிண்ண தோல்விக்கு நான் பலிகடாவா?’
- நீங்கள் விரும்பினால் ஓய்வு பெறுகிறேன்:
அஞ்சலோ மெத்திவ்ஸ் உருக்கமான கடிதம்



இலங்கை கிரிக்கெட் ஒரு நாள் மற்றும் ரி20 அணியின் தலைமைப் பொறுப்பிலிருந்து அஞ்சலோ மெத்திவ்ஸ் நீக்கப்பட்டுள்ளார்.
அவரது இடத்திற்கு, இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவராக செயற்பட்டு வரும் தினேஷ் சந்திமால் நியமிக்கப்பட்டுள்ளதாக, இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை அறிவித்துள்ளது.
அதன் அடிப்படையில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஆரம்பமாகவுள்ள, இங்கிலாந்து அணியுடனான போட்டிக்கு, தினேஷ் சந்திமால் தலைமை தாங்கவுள்ளதாக சபை மேலும் தெரிவித்துள்ளது.
ஆயினும் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள மெத்திவ்ஸ், கிரிக்கெட் தேர்வுக் குழுவின் தலைவர் கிரஹம் லெப்ரோய் உள்ளிட்ட தேர்வுக்குழு மற்றும் பயிற்சியாளர் சந்திக்க ஹத்துருசிங்க ஆகியோருடன் கடந்த வெள்ளிக்கிழமை (21) இடம்பெற்ற விசேட கூட்டத்தின்போது, அவர்கள் ஒரு நாள் மற்றும் ரி20 தலைமை பதவிகளிலிருந்து தன்னை விலகுமாறு அறிவுறுத்தியதாக தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள ஏஸ்லி டி சில்வாவிற்கு, இராஜினாமா கடிதத்தை எழுதியுள்ள மெத்திவ்ஸ். அதில் இவ்வாறு அறிவித்துள்ளார்.
அதில் மேலும் தெரிவித்துள்ள அவர்,
"கிரிகெட் தேர்வுக் குழுவின் தலைவர் கிரஹம் லெப்ரோய் உள்ளிட்ட தேர்வுக்குழு மற்றும் பயிற்சியாளர் சந்திக்க ஹத்துருசிங்க ஆகியோருடன் கடந்த வெள்ளிக்கிழமை (21) இடம்பெற்ற விசேட கூட்டத்தின்போது, அவர்கள் ஒரு நாள் மற்றும் ரி20 தலைமை பதவிகளிலிருந்து என்னை விலகுமாறு அறிவுறுத்தினர்.
எனக்கு அது ஆரம்பத்தில் அதிர்ச்சியாக இருந்தபோதும், ஆசிய கிண்ணப் போட்டிகளில் பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுடன் பெற்ற தோல்விகளுக்கு முழுப் பொறுப்பும் என் மீது சாட்டப்பட்டுள்ளதை உணர்ந்தேன். ஆயினும் நான் அதில் ஒரு பங்குதாரரே தவிர அதற்கான முழுப் பொறுப்பையும் என் மீது திணிப்பதை ஏற்க முடியாது.
அணி தொடர்பில் எடுக்கப்பட்ட முடிவுகள் அனைத்தும், தெரிவாளர்கள் மற்றும் தலைமை பயிற்சியாளர் ஆகியோர் இணைந்து எடுத்த முடிவாகும் என்பதோடு, அணியின் தோல்வி தொடர்பிலான முழு பொறுப்பும் என் மீது சாட்டப்பட்டுள்ளமையை ஏற்க முடியாது.
ஆயினும் தன்னை பதவியிலிருந்து விலகுமாறு, கிரிகெட் தேர்வுக் குழுவும் தலைமைப் பயிற்சியாளரும் விடுத்துள்ள கோரிக்கைக்கு தலை சாய்க்கிறேன்.
நான் 5 வருடங்கள், இலங்கை அணியின் அனைத்து வகையான போட்டிகளுக்கும் தலைமைத்துவம் வழங்கி, கடந்த 2017 ஜூலையில் எனது பதவியை இராஜினாமா செய்தேன். அக்காலப் பகுதியில், பல்வேறு வெற்றிகளை பெற்றுக் கொடுத்தேன், அதில், இங்கிலாந்து அணியுடனான தொடரை  வெற்றி கொண்டமை, அவுஸ்திரேலியாவை 3-0 என முழுமையாக வெற்றி கொண்டமை, 2014 ஆசிய கிண்ணத்தை கைப்பற்றியமை முக்கியமான தருணங்களாகும் என்பதை நான் நினைவூட்ட விரும்புகிறேன்.
ஆயினும், அணிக்கு புதிய தலைமைத்துவமொன்று தேவையென உணரப்பட்டதால், 2017 ஜூலை மாதம் நானாக முன்வந்து எனது பதவியை இராஜினாமா செய்தேன்.
அதன் பின்னர், ஜூலை 2017 முதல் டிசம்பர் 2017 காலப்பகுதியில் உபுல் தரங்க, திசர பெரேரா, சாமர கபுகெதர, லசித் மாலிங்க, தினேஷ் சந்திமால் ஆகியோர் ஒரு நாள் மற்றும் ரி20 தலைவர்களாக இருந்த வேளையில், இலங்கை அணி பல்வேறு பாரிய தோல்விகளைச் சந்தித்தது.
இவ்வேளையிலேயே, சந்திக ஹத்துருசிங்க, தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அவர் என்னை தனிப்பட்ட முறையில் சந்தித்து, எதிர்வரும் 2018 உலகக் கிண்ணம் வரும் வரை, அணிக்கு மீண்டும் தலைமைத்துவம் வழங்குவது தொடர்பில் கருத்திலெடுக்குமாறு தெரிவித்தார்.
ஆயினும் நான் உள்ளிட்ட எனது குடும்பத்தினர், நண்பர்கள் அதனை ஏற்க வேண்டாம் என கூறிய நிலையில், ஹத்துருசிங்க மீது கொண்டுள்ள நம்பிக்கை மற்றும் இலங்கை அணியின் சிறந்த செயல்திறனை வெளிக்கொணரும் அவரது திட்டம் மற்றும் எனது நாட்டிற்காக, உலகக் கிண்ணம் வரை நான் அப்பொறுப்பை ஏற்க முடிவு செய்தேன்.
இலங்கை அணி, ஆசிய கிண்ணத்தில் எதிர்பார்க்க முடியாத பாரிய தோல்வியைச் சந்தித்தபோதிலும், நான் ஒரு விடயத்தை பதிவு செய்ய கமைப்பட்டுள்ளேன். நாம் ஏற்கனவே இவ்வாறான பல தோல்விகளைச் சந்தித்திருந்த வேளையில், தென்னாபிரிக்க அணிக்கு எதிரான தொடரில் நாம் ஓரளவு திறமையாக விளையாடியிருந்தோம்.
ஆயினும் உலகக் கிண்ணம் ஆரம்பிப்பதற்கு இன்னும் ஒரு சில போட்டிகளே எஞ்சியுள்ள நிலையில், இவ்வாறான விடயங்கள், பிரச்சினைகளைக் கண்டு ஓடி ஒழியும் எண்ணம் என்னிடம் இருக்கவில்லை.
நான் அனைத்து வழிகளிலும் மிக கடின உழைப்புடன் தொடர்ந்தும் செயற்படுவேன் என்பதோடு, எனது நாட்டிற்காக முழு ஒத்துழைப்புடன் செயற்பட தயாராக இருக்கிறேன்.
ஒரு நாள் மற்றும் ரி20 போட்டிகளில், நான் விளையாடுவதற்கான தகுதியற்றவன் என, தேர்வாளர்களும், பயிற்சியாளரும் கருதுவார்களாயின், நான் ஓய்வு பெறுவதற்கும் பின்னிற்கமாட்டேன் என்பதோடு, அணிக்கு சுமையாக இருக்கமாட்டேன் என்பதையும் தெரிவிக்க விரும்புகிறேன்.
எனது மனச்சாட்சியின் அடிப்படையில் நான் எப்போதும் எனது முழுத் திறமையையும் வெளிக்காட்டி விளையாடியுள்ளேன். போட்டிகளில் விளையாடுவதற்கான தகுதியை கொண்டுள்ளேன் என்பதோடு, சிறப்பாக விளையாடி ஒரு குறிப்பிட்ட காலமாக அணிக்கான எனது இடத்தையும் தக்கவைத்துள்ளேன்.
தென்னாபிரிக்கா அணியுடனான தொடரில், இரு அணி வீரர்களுடன் ஒப்பிடுகையில், நானே அதிக ஓட்டங்களை பெற்றுள்ளேன்.
ஆயினும், தேர்வாளர் குழு மற்றும் தலைமை பயிற்சியாளரின் வேண்டுகோளுக்கிணங்க, உடனடியாக அமுலாகும் வகையில், இலங்கை கிரிக்கெட் ஒருநாள் (ODI) ரி20 (T20) அணிகளின் தலைமைப் பொறுப்பிலிருந்து நான் இராஜினாமா செய்கிறேன்.
அந்த வகையில், என்னுடன் கலந்துரையாடி, ஆசிய கிண்ணம் தொடர்பில், உங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டு என்னை இவ்வாறு பதவி விலகுவதற்கு வாய்ப்பளித்த, தேர்வாளர்கள் மற்றும் பயிற்சியாளருக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தேசிய கிரிக்கெட் அணியின் வெற்றிக்கு எனது வாழ்த்துகள் உரித்தாகட்டும்.
வாழ்த்துகள்
அஞ்சலோ மெத்திவ்ஸ்



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top