இறுதிக்கட்ட போரில் விடுதலைப்புலிகளை வீழ்த்த
இந்திய அரசு உதவியது
மஹிந்த ‘தந்தி’ தொலைக்காட்சிக்கு சிறப்பு பேட்டி
(முழு பேட்டி இன்று (சனிக்கிழமை) இரவு 9.30 மணிக்கு)
இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின் போது விடுதலைப்புலிகளை வீழ்த்த இந்தியா உதவியதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கூறி உள்ளார்.
டெல்லி சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஸ ‘தந்தி’ தொலைக்காட்சிக்கு சிறப்பு பேட்டி அளித்தார்.
அப்போது இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போர் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளும், அவற்றுக்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- நீங்கள் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் வென்றது மிக பிரபலம். ஆனால் பிரபாகரன் இறந்துவிட்டார் என்பதை சில தமிழ் தலைவர்கள் நம்பவில்லையே?
பதில்:- அவர்களை இலங்கைக்கு வந்து பார்க்கச் சொல்லுங்கள். பிரபாகரன் இறந்த பிறகு எவ்வளவு வளர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது என்று பாருங்கள். அவர் இருந்திருந்தால், இலங்கையிலும், இந்தியாவிலும் மேலும் மரணங்கள் தான் நடந்திருக்கும். சில தலைவர்கள் கொல்லப்பட்டு இருப்பார்கள்.
கேள்வி:- பிரபாகரன் இப்போதும் உயிரோடு இருக்கிறார் என்று சில தலைவர்கள் சொல்கிறார்களே?
பதில்:- அது அவர்களுடைய அரசியலுக்காக செய்கிறார்கள்.
கேள்வி:- இறுதிப்போரில் உங்கள் யுக்தி என்னவாக இருந்தது?
பதில்:- விடுதலைப்புலிகள் 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களை பணயக்கைதிகளாக வைத்திருந்தார்கள். அரசு கட்டுப்பாட்டில் இருந்த பகுதிக்கு வர விரும்பியவர்களை சுட்டார்கள். அப்போது நடவடிக்கை எடுத்தே ஆகவேண்டும். இறுதியில் நாங்கள்தான் வென்றோம்.
கேள்வி:- விடுதலைப்புலிகள் அப்பாவி மக்களை சுட்டார்களா?
பதில்:- ஆம். தொலைக்காட்சிகளில் கூட காட்டப்பட்டதே. அரசு பகுதி நோக்கி மக்கள் ஓடி வந்த போது, துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள்.
கேள்வி:- பிரபாகரனின் கடைசி நிமிடங்கள் பற்றி சொல்ல முடியுமா?
பதில்:- அப்போது நான் அங்கு இல்லையே...
கேள்வி:- உங்கள் ராணுவ தளபதி சொல்லி இருப்பாரே?
பதில்:- ஆம், அந்த பகுதியில் இருந்த அதிகாரிகள் சொன்னார்கள். இரு தரப்பினரிடையே நடந்த சண்டையில் அவர் ராணுவத்தால் சுடப்பட்டார்.
கேள்வி:- அவருக்கு சரண் அடைய வாய்ப்பு வழங்கப்பட்டதா?
பதில்:- அவர் அதற்கு தயாராக இல்லை. பிரபாகரனை பற்றி தெரியுமே... அவர் சரண் அடையக்கூடியவர் அல்ல. அவர் சரணடைய தயாராக இருந்தால், கைது செய்திருப்போம். அதுபற்றி கேட்டுப்பார்த்தோம்..
கேள்வி:- சரண் அடைய சொல்லி நீங்கள் கேட்டீர்களா?
பதில்:- ஆம், வெளிப்படையாகவே அழைப்பு விடுக்கப்பட்டது.
கேள்வி:- அந்த அழைப்பு தூதுவர் மூலம் அனுப்பப்பட்டதா? அல்லது தொலைக்காட்சி மூலம் சொல்லப்பட்டதா?
பதில்:- போர் நடந்த பகுதியில் ராணுவத்தால் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டது.
கேள்வி:- பிரபாகரனின் எந்த யுக்தி அவரது தோல்விக்கு காரணமாக அமைந்தது?
பதில்:- அவர் அதீத நம்பிக்கையுடன் இருந்தார். அவர்களுடைய ராணுவ பலத்தை அதிகம் நம்பினார். இறுதியில், யாராவது வந்து அவரை காப்பாற்றிவிடுவார்கள் என்று நினைத்தார். அது நடக்கவில்லை.
கேள்வி:- இறுதிப்போரில் இந்திய அரசு உங்களுக்கு உதவியதா?
பதில்:- இந்தியா மட்டுமல்ல, நிறைய நாடுகள் உதவினார்கள். அவர்கள் எங்களுக்கு எதிராக இருந்திருந்தாலோ, தடைகள் விதித்திருந்தாலோ, எங்களால் விடுதலைப்புலிகளை வீழ்த்தி இருக்க முடியாது. அவர்கள் தொடர்ந்து மக்களை கொன்றிருப்பார்கள்.
கேள்வி:- இந்திய அரசு எந்த அளவிற்கு உதவியது?
பதில்:- அப்போது இந்தியா செய்த உதவிகள் என்றும் பாராட்டுக்குரியது.
கேள்வி:- உயிரிழந்த அப்பாவி தமிழர்களின் சடலங் களை சர்வதேச தொலைக்காட்சிகளில் பார்க்கும் போது, உங்களுக்கு கலக்கமாக இருந்ததா?
பதில்:- ஆமாம். ஆனால் அதில் பல படங்கள் சித்தரிக்கப்பட்டவை. அவர்கள் வேண்டுமென்றே செய்தார்கள்.
கேள்வி:- போரில் கொல்லப்பட்ட அப்பாவி தமிழர்களுக்காக வருந்துகிறீர்களா?
பதில்:- ஆம். ஒரு போர் நடக்கும் போது, சில பாதிப்புகள் ஏற்படத்தான் செய்யும். எனக்கு வருத்தமாகத்தான் இருக்கிறது. ஆனால் அதை எங்களால் தவிர்க்க முடியவில்லை.
கேள்வி:- இன்று உலகமே, பல அப்பாவிகளின் உயிர் இழப்புக்கு நீங்கள்தான் பொறுப்பு என சொல்வது, உங்களுக்கு கவலை அளிக்கிறதா?
பதில்:- அது தவறானது. அதற்கு வேறு காரணங்கள் உள்ளன.
கேள்வி:- உங்கள் மீது தவறில்லை என்றால், சர்வதேச விசாரணை குழுவை ஏன் இலங்கைக்குள் அனுமதிக்கவில்லை?
பதில்:- இப்போதைய அரசு அனுமதி கொடுத்து இருக்கிறது. ஆனால் சர்வதேச சமூகம் இதுபற்றி ஏன் கவலைப்பட வேண்டும்? எங்கள் நாட்டிலேயே மனித உரிமை ஆணையம் இருக்கிறது. ஆர்வலர்கள் இருக்கிறார்கள். அவர்கள் விசாரிக்கலாம். இந்த விஷயத்தை சர்வதேச அளவிற்கு போகவிட்டதுதான் நாங்கள் செய்த தவறு. இது எங்களுடைய உள்நாட்டு விவகாரம்.
கேள்வி:- இறுதிபோர் உச்சத்தில் இருந்தபோது, தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியில் இருந்தது. அப்போது இந்திய அரசு மூலம் அவர்கள் கொடுத்த அழுத்தத்தை சமாளிப்பது கடினமாக இருந்ததா?
பதில்:- விடுதலைப்புலிகள் அகற்றப்படவேண்டும் என்பதை இந்திய அரசுக்கு புரியவைத்தோம். ஆனால் அவர்களுடைய கருத்துகளுக்கு எப்போதும் மதிப்பு கொடுத்தோம். இந்தியா கேட்டுக்கொண்டதால்தான், இறுதிக் கட்டத்தில் பயங்கர ஆயுதங் களை பயன்படுத்தவில்லை.
கேள்வி:- கடந்த தேர்தலில், இந்தியா உங்கள் அரசை தோற்கடித்ததா?
பதில்:- அதுபற்றி பேச விரும்பவில்லை.
கேள்வி:- தேர்தலில் இந்திய உளவுத்துறையின் பங்கு இருந்ததாக நீங்கள் குற்றம்சாட்டினீர்களே?
பதில்:- இப்போது அதெல்லாம் முடிந்துவிட்டது. ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கி இருக்கிறோம் இவ்வாறு. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கூறினார்.
இதுதவிர மீனவர்கள் பிரச்சினை, ராஜீவ் காந்தி கொலை கைதிகளை விடுதலை செய்யும் விவகாரம், ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரின் அரசியல் பிரவேசம் போன்றவை தொடர்பான கேள்விகளுக்கும் அவர் பதில் அளித்து இருக்கிறார்.
மஹிந்த ராஜபக்ஸவின் முழு பேட்டி, ‘தந்தி’ தொலைக்காட்சியில் இன்று (சனிக்கிழமை) இரவு 9.30 மணிக்கு ‘கேள்விக்கு என்ன பதில்?’ என்ற நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
0 comments:
Post a Comment