.நா.சபையின் 73 ஆவது பொதுச்சபை அமர்வில்
ஜனாதிபதி ஆற்றிய உரை



ஐக்கிய நாடுகள் சபையின் 73 ஆவது பொதுச்சபை அமர்வில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று ஆற்றிய உரை பின்வருமாறு,

கௌரவ தலைவர் அவர்களே,
கௌரவ பொதுச் செயலாளர் அவர்களே,
மதிப்புக்குரிய அரச தவைர்களே,
மதிப்புக்குரிய இராஜதந்தரிகளே,
நண்பர்களே,
உங்கள் அனைவருக்கும் மும்மணிகளின் ஆசிகள்,
ஐக்கிய நாடுகள் சபையின் 73 ஆவது பொதுச்சபை அமர்வில் இலங்கையின் பிரதிநிதி என்ற வகையில் நான்காவது தடவையாகவும் பங்குபற்ற கிடைத்தமையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்.
இலங்கை, ஐநா சபையின் ஒரு அங்கத்துவ நாடு என்ற வகையில் இங்கே காணப்படுகின்ற அனைத்துவித இணக்கப்பாடுகளையும் உடன்படிக்கைகளையும் முற்றுமுழுதாக பின்பற்றுவதற்கும் அவற்றை செயற்படுத்துவதற்கும் முழுமையாக இணங்கியிருக்கின்றது.
கடந்த மூன்றரை வருடங்களுக்கு மேலாக இலங்கையின் அரச தலைவராக செயற்பட்டுவரும் என்னால், நாடும் அரசாங்கமும் அடைந்திருக்கும் முன்னேற்றத்தை பற்றி மிகவும் மகிழ்ச்சியடையக் கூடியதாக உள்ளது. 2015 ஜனவரி 08 ஆம் திகதி மக்களின் வாக்குகளினால் தெரிவுசெய்யப்பட்டு இலங்கையின் அரச தலைவராக பொறுப்பேற்றபோது, எனது நாட்டில் தற்போது நான் வகிக்கும் பதவிக்காக வழங்கப்பட்டிருந்த எல்லையற்ற நிறைவேற்று அதிகாரங்கள், அதாவது ஒரு அரசனுக்கும் அப்பால் பேரரசனுக்கான அதிகாரங்களுக்கு சமமாக இருந்த எல்லையற்ற அதிகாரங்களை, இந்த காலகட்டத்தில், அப்பதவியை ஏற்கின்ற ஒரு அரச தலைவன் என்ற வகையிலும் ஒரு மனிதன் என்ற வகையிலும் முன்னெடுக்க வேண்டிய மிக முக்கியமான வரலாற்று கடமையாக இருந்த, எனக்கு கிடைத்திருந்த அந்த எல்லையற்ற அதிகாரங்களை குறைத்து அவற்றை இலங்கையின் பாராளுமன்றத்திற்கு கையளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டேன் என்பதை இங்கே தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
கடந்த மூன்றரை வருடங்களில் ஜனநாயக உரிமைகள் பலப்படுத்தப்பட்டிருக்கின்றது. மனித உரிமைகள் பலப்படுத்தப்பட்டிருக்கின்றது. மனிதர்களின் சுதந்திரம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஊடக சுகந்திரம் பரந்தளவில் பலப்படுத்தப்பட்டிருக்கின்றது. நீதித்துறையின் சுயாதீனம் உறுதிப்படுத்தப் பட்டிருக்கின்றது. ஆகையினால் இலங்கையில் மூன்றரை வருடங்களுக்கு முன்பிருந்த நிலை இல்லாமல், முன்னேற்றமடைந்த, மனிதநேயம் மிக்க, ஒரு பரிபூரணமான சமூகத்தில் வாழும் நிலைமையே தற்போது காணப்படுகின்றது என்பதை இங்கு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
ஐநாவின் அங்கத்தவர்கள் என்ற ரீதியில் எமக்கிடையில் இருக்கின்ற கடமைகள் மற்றும் பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கு, சர்வதேச ரீதியில் ஏற்படும் அரசியல் மாற்றங்கள், பொருளாதார ரீதியில் ஏற்படுகின்ற மாற்றங்கள், மானிடத்திற்கு சவாலாக அமைகின்ற விடயங்கள் ஆகியவற்றை மிக ஆழமாக ஆராய்ந்து பார்த்து அவற்றிற்கு முகம்கொடுக்க வேண்டிய தேவை ஏற்படுகின்றது.
குறிப்பாக சர்வதேச அரசியலில் புதிதாக ஏற்படுகின்ற முனைப்புக்களை பற்றி கதைக்கின்றபோது, இன்று உலகெங்கும் பெருந்தொகையான அகதிகள் காணப்படுகின்றனர். அத்தோடு அந்த அகதிகளின் பிரச்சினை மிகப் பரந்தவொரு பிரச்சினை என்பதையும் நாம் அறிவோம். ஆகவே அதற்கு ஐநா சபையும் அதன் உறுப்பு நாடுகளும் அதனோடு இணைந்த அமைப்புக்களும் மேற்கொண்டு வருகின்ற பணிகள் தற்போது உள்ளதை விட மேலும் பலமானதாகவும், பரந்துபட்ட ரீதியிலும் அமைய வேண்டும் என்பதே எனது கருத்தாகும்.
எமது நாடு வெளிநாட்டுக் கொள்கையில் நடுநிலையான கொள்கையினையே பின்பற்றி வருகின்றது. அத்தோடு இலங்கை அணிசேரா நாடுகளின் அமைப்பில் மிகவும் மூத்த உறுப்பு நாடொன்றாகும். 1976 ஆம் ஆண்டு இலங்கையில் மிக நேர்த்தியாக அணிசேரா நாடுகளின் உச்சி மாநாடு நடத்தப்பட்டது என்பதையும் இங்கு தெரிவித்துக் கொள்கிறேன். நடுநிலையான வெளிநாட்டுக் கொள்கையின் கீழ் உலகின் அனைத்து நாடுகளையும் இனங்களையும், நேச நாடுகளாகவும் நேச இனங்களாகவும் கருதியே நாம் எமது தொடர்புகளை பேணி வருகிறோம். நான் அறிந்த வகையில், இத்தருணத்தில் இலங்கையாகிய எமது நாட்டுக்கு உலகில் எந்தவொரு எதிரியும் இல்லையென்பதையும் இங்கு நான் கூறிவிரும்புவதுடன், அந்த நிலைமை ஏற்பட்டிருப்பதையிட்டும் மகிழ்ச்சியடைகிறேன்.
சர்வதேச அரசியலில் ஏற்படுகின்ற மாற்றங்களைப் பற்றி கதைக்கின்றபோது, குறிப்பாக பலஸ்தீன மக்களின் பிரச்சினை பற்றி கதைக்கின்ற போது, ஐநா சபையும் உலக பலசாலிகளும் தற்போது பின்பற்றும் கொள்கையில், அதைவிட புரிந்துணர்வுடன் கூடிய பரந்துபட்ட நோக்குடன் செயற்பட வேண்டுமென்பதே எனது நம்பிக்கையாகும். பலஸ்தீன மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு இலங்கை என்றும் ஆதரவளித்து வந்தது என்பதையும் இங்கே நான் குறிப்பிட்டு கூற விரும்புகிறேன். ஆகவே பலஸ்தீனம் தொடர்பில் ஏற்படுகின்ற பல்வேறு மனிதநேயமற்ற செயற்பாடுகளை கருத்திற்கொண்டு பலஸ்தீன மக்களின் உரிமைக்காக குரல் கொடுப்பதற்கு ஐநா சபையும் அனைத்து உறுப்பு நாடுகளும் மனிதநேயம் மிக்க பாரிய செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.
தற்போது உலகில் காணப்படுகின்ற பிரச்சினைகளுள் வறுமையே மிக முக்கிய பிரச்சினையாக காணப்படுகின்றது. ஆகையால் ஐநா சபை வறுமையொழிப்பு தொடர்பில் உலக மக்களுக்காக இப்போது முன்னெடுப்பதைவிட மிகப் பரந்ததொரு வேலைத்திட்டத்தினை முன்னெடுக்க வேண்டுமென்பதை இங்கு கூறிக்கொள்ள விரும்புகிறேன். வறுமை தொடர்பில் நோக்கும் போது உலக சனத்தொகையில் பல கோடி மக்கள் பட்டினியால் வாடுகின்றனர். வானிலை மற்றும் காலநிலை மாற்றங்கள், வருமானம் ஈட்டுதலில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் அரச செயற்பாடுகளில் சாதாரண பொதுமக்கள் மீது கவனம் செலுத்துவதில் காணப்படுகின்ற குறைபாடுகளுமே இந்த வறுமையில் பெரும் தாக்கம் செலுத்துகின்றன.
வானிலை மற்றும் காலநிலையில் ஏற்படுகின்ற சீர்குலைவு காரணமாக உலகளாவிய ரீதியில் ஏற்படுகின்ற பாரிய பிரச்சினைகள், குறிப்பாக பொருளாதாரத்தில் ஏற்படுகின்ற சரிவுகளும் வறுமை நிலை வளர்வதற்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கின்றன. ஆகையால் வறுமையை பற்றி பேசுகின்ற போது, வானிலை மற்றும் காலநிலையில் ஏற்படும் சீர்குலைவுகள் மிகப் பாரியளவில் ஏற்படுகின்ற நாடுகளில், அதனால் பாதிப்படைகின்ற அந்நாட்டு மக்களின் இயல்பு நிலையை கட்டியெழுப்புவதற்கு உதவி, ஒத்தாசை வழங்க வேண்டியது மிகவும் அவசியமான ஒரு விடயமாகும்.
இன்று சர்வதேச ரீதியில் இந்த வறுமையென்பது பாரிய பிரச்சினையாக இருந்துவரும் அதேவேளை, ஆயுத விற்பனை, போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோத ஒளடத வியாபாரம் ஆகியனவும் மானிட சமூகத்திற்கு பாரிய அச்சுறுத்தலாக இருந்து வருகின்றன. ஆகையால் இந்த அனைத்து பிரச்சினைகள் பற்றியும் கவனம் செலுத்துகின்ற போது, குறிப்பாக நேற்று காலையில் ஐநாவின் அனுசரணையில், அமெரிக்க ஜனாதிபதி கௌரவ டொனால்ட் ட்ரம்ப் அவர்களின் தலைமையில், சட்டவிரோத போதைப்பொருட்கள் தொடர்பில் பின்பற்ற வேண்டிய செயற்பாடுகள் பற்றி உலகளாவிய ரீதியில் ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாடு தொடர்பில் நாம் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றோம். அத்தோடு போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் உலகின் அனைத்து நாடுகளும் ஐநா சபையின் ஒத்துழைப்பில் இப்போது செயற்படுத்தி வருவதைவிட மிகப் பாரிய செயற்திட்டங்களை முன்னிலைப்படுத்தி முன்னெடுக்க வேண்டுமென்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
அத்தோடு ஐநா சபையின் பன்முக வேலைத்திட்டங்களின் கீழ் அதன் அங்கத்துவ நாடுகளினதும் ஒட்டுமொத்த உலகத்தினதும் மேம்பாட்டினை கருத்திற்கொண்டு, ஆறு, குளம், செடி, கொடிகள், விலங்கினங்கள், சூரிய ஒளி உள்ளிட்ட இயற்கையை கருத்திற்கொண்டும், ஐநாவின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் செயற்படுத்தப்பட்டுவந்த வானிலை, காலநிலை மாற்றங்கள் பற்றிய பாரிஸ் மாநாட்டில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகளையும் உடன்படிக்கைகளையும் செயற்படுத்துவதற்கு நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இதன்போது இலங்கை ஒரு அங்கத்துவ நாடு என்றவகையில் இத்துறையில் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது என்பதையும் இங்கு கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
எனது அன்புக்குரிய தாய்நாட்டின் உள்ளக நிலைமைகளைப் பற்றி கவனத்தில் கொள்ளும்போது நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல் ஜனநாயகம், மனித உரிமைகள், அடிப்படை உரிமைகள், ஊடக சுதந்திரம் ஆகிய இவ்வனைத்து துறைகளும் பரந்தளவில் பலப்படுத்தப்பட்டிருக்கின்ற அதேநேரம், இன்றைக்கு 40 வருடங்களுக்கு முன்னர் நாடு இருந்த நிலைமை தொடர்பிலும் மூன்று தசாப்தங்களுக்கும் மேலான நீண்டகால பயங்கரவாத யுத்தத்தை பற்றி கவனம் செலுத்துகின்றபோதும் எல்ரீரீஈ பயங்கரவாத யுத்தம் முடிவுக்கு வந்து 10 வருடங்களாகின்றன. இந்த 10 வருடங்களில் நாம் பல்வேறு பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறோம். குறிப்பாக எமது அரசாங்கம் கடந்த மூன்றரை வருடங்களில், குறிப்பாக யுத்தத்தின் பின்னரான காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்பாடுகளை பரந்தளவில் நிறைவேற்றியிருக்கிறோம். குறிப்பாக தேசிய ஒற்றுமை, நல்லிணக்கம், மீண்டுமொரு யுத்தம் ஏற்படாது தடுத்தல் ஆகியவற்றை நோக்கமாக கொண்ட செயற்பாடுகளை நிறைவேற்றியிருப்பதுடன், நிறைவேற்ற வேண்டிய விடயங்களை சிறந்த முறையில் முன்னெடுத்து வருகின்றோம். ஆகையால் மனித உரிமைகள் பற்றிய விடயத்தில் நாம் எமது கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் மிகச்சிறந்த முறையிலும் பரந்தளவிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற ஒரு நாடு என்ற வகையில், எமக்கு அனைத்து நாடுகளினதும் ஐநா சபையினதும் ஒத்துழைப்புக்கள் மென்மேலும் கிடைக்கப்பெற வேண்டுமென நான் மிகவும் கௌரவமாக கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.
உலகத்தின் மிகவும் பலம்வாய்ந்த ஒரு பயங்கரவாத அமைப்பே இலங்கையின் பாதுகாப்பு படையினரால் தோற்கடிக்கப்பட்டது. ஆகையால்தான் இன்று இலங்கை பிரிக்கப்படாத, சிதைவடையாத, நிலையான சமாதானத்தைக் கொண்ட ஒரு நாடாக இருந்து வருகின்றது. ஆகையால் இலங்கையில் நிலையான சமாதானத்தையும் ஐக்கியத்தையும் மேலும் உறுதிப்படுத்துவதற்கு எமது பாதுகாப்பு படைகள், பலம்மிக்க பயங்கரவாத அமைப்பொன்றினை தோல்வியடையச் செய்த வரலாற்றுக் கடமையை மிகுந்த கௌரவத்துடன் ஞாபகப்படுத்துவதுடன், நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு அவர்கள் மேற்கொண்ட அந்த பாரிய அர்ப்பணிப்புக்கு எனது நன்றியினையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
அந்த யுத்தம் முடிவுக்கு வந்து 10 ஆண்டுகள் முடிவடையும் இந்த சந்தர்ப்பத்தில் இலங்கை மீது மதிப்பை கொண்டிருக்கும் அனைத்து உலக நாடுகளிடமும், எனது தாய்நாட்டை புதிய எண்ணத்துடனும் புதிய கண்ணோட்டத்துடனும் நோக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். ஒரு பாரிய யுத்தம் முடிவுக்கு வந்து சமாதானம் நிலைத்துவரும், தேசிய நல்லிணக்கமும் ஒற்றுமையும் பலப்படுத்தப்பட்டிருக்கும் ஒரு நாட்டில் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படுவதை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டிருக்கும் ஒரு நாட்டில், மனித உரிமைகளை பரந்தளவில் பலப்படுத்தியிருக்கும் நாடென்ற வகையில், எதிர்கால பொருளாதார சுபீட்சத்தை ஏற்படுத்துவதற்கு உகந்ததாக எனது நாட்டை பரந்த நல்லெண்ணத்துடன் நோக்குவதுடன் எமக்கு உங்கள் ஒத்துழைப்பை வழங்குங்கள் எனவும் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.
ஒரு நாட்டின் இறையாண்மையும் சுயாதீனத்தன்மையும் முக்கியமானதாகும். எனவே அதனைப் பாதுகாத்தவாறு எம்மால் முன்னெடுக்கப்படும் மனிதநேய செயற்பாடுகள், ஜனநாயகத்தை பலப்படுத்தும் செயற்பாடுகள் உள்ளிட்ட பரந்த பணிகளை செயற்படுத்த உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பை கேட்டுக் கொள்கிறேன். எமது பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்கு எம்மால் முன்னெடுக்கப்பட்டிருக்கும் முயற்சிகளும் அர்ப்பணிப்புக்களும் மிக முக்கியமானவையாகும். எந்தவொரு வெளிநாட்டு தலையீட்டையும் அச்சுறுத்தல்களையும் ஒரு சுயாதீன நாடென்ற வகையில் ஏற்க நாம் தயாராக இல்லை. அனைத்து வகையிலும் பலமான நாடு என்ற வகையில் நான் உங்களிடம் கேட்டு நிற்பது, எமது பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்கும், ஒரு சுயாதீன நாடு என்ற வகையில் எமது உரிமைகளை உறுதிப்படுத்தியவாறு முன்னோக்கிச் செல்வதற்கும் எமக்கு இடமளியுங்கள் எனக் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.
ஆகையால் இங்குள்ள நிலைமைகளைக் கருத்திற்கொண்டு, இலங்கையர் என்ற வகையில் தீர்த்துக் கொள்ளவேண்டிய பிரச்சினைகளை நாமே தீர்த்துக் கொள்வோம் என்பதுடன், அதற்கு உங்களது ஒத்துழைப்பினை பெற்றுத்தருமாறு கேட்டுக் கொள்வதுடன், எனது தாய்நாட்டில் வாழும் அனைத்து மக்களினதும் சந்தேகம், பீதி, அவநம்பிக்கை ஆகியவற்றை இல்லாதொழித்து அனைத்து இனங்கள் மத்தியிலும் பலமான நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசு என்ற வகையில் நாம் முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு உங்களது ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அத்தோடு நான் ஏற்கனவே கூறியதைப் போன்று இலங்கையிலும் ஏனைய உலக நாடுகளிலும் வறுமையுடன் வாழ்ந்துவரும் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நாம் முக்கியத்துவத்தை கொடுக்க வேண்டும். புதிய தலைமுறையினரின் புதிய கருத்துக்களை செவிமடுத்து, அவர்களின் பிரச்சினைகளை தீர்த்துவைக்க வேண்டும்.
ஆகையால் இவ்வனைத்து விடயங்களையும் கருத்திற்கொண்டு இலங்கையென்ற வகையில், புத்தபகவான் போதித்த பௌத்த சிந்தனைக்கமைய திரிபீடக நூலில் சங்யுத்த நிகாயவில் 36 – 6 ஆம் அத்தியாயத்தில் சல்லசூத்திரத்தில் கூறப்பட்டிருக்கின்ற 'ஒருவரின் உடலில் ஒரு முள் பாய்ந்திருப்பின், அதனால் ஏற்படும் வேதனையைப் போலவே, அந்த முள் பாய்ந்ததனால் வேதனை ஏற்பட்டது என்ற சிந்தனையும் ஞாபகமும் கூட வேதனையை ஏற்படுத்தும்' அந்தவகையில் அவை இரண்டு வகையான வேதனைகளாகும். அதாவது முள் பாய்ந்ததால் ஏற்பட்ட ஒரு வேதனையும் அதன் ஞாபகம் ஏற்படுத்தும் வேதனையுமென அமைகின்றன. ஆகையால் அவ்வனைத்து வேதனைகளையும் முள் பாய்ந்தவனாலேயே உணர முடியும்.
அந்த வகையில் இலங்கையும் நீண்டகால யுத்தத்திற்கு முகம்கொடுக்க நேர்ந்ததால் ஏற்பட்ட பிரச்சினைகளும் அதன் துர்ப்பாக்கியமான நிலைமைகளும் மேற்குறிப்பிட்ட இருவகையான வேதனைகளையும் இலங்கையருக்கே ஏற்படுத்தியிருக்கின்றது. ஆதலால் அந்த வேதனைகள் வேறொரு பிரிவினருக்கன்றி, எமது நாட்டு மக்களுக்கே ஏற்பட்டிருக்கின்றன. ஆகையால் அந்த வேதனைகளை தணித்துக் கொள்வதற்கு நியாயமான, நீதிமிக்க, மனிதநேயம்மிக்க சமூகத்தில், ஜனநாயக ரீதியிலான வரலாற்று கடமைகளை நிறைவேற்றிவரும் நாடென்ற வகையிலும் பொருளாதார ரீதியில் சுபீட்சமிக்க ஒரு நாடாக திகழ்வதற்கும் நாம் எடுத்துவரும் அனைத்து முயற்சிகளுக்கும் ஒத்துழைப்பை பெற்றுத்தருமாறு மிகுந்த அன்புடனும் கௌரவத்துடனும் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி, வணக்கம்



0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top