‘ஜனாதிபதி தேர்தலில் என் சகோதரர்
நிச்சயம் போட்டியாளராக இருப்பார்’
– ‘தி ஹிந்து’ஆங்கில நாளிதழுக்கு
மஹிந்த வழங்கிய முழுமையான
செவ்வி
2019 ஜனாதிபதி தேர்தலில் தனது சகோதரர் நிச்சயமாகப் போட்டியாளராக
இருப்பார் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
‘தி ஹிந்து’ஆங்கில நாளிதழுக்கு அவர் வழங்கிய செவ்வியில்
முழுமையான விபரம்.
கேள்வி : இந்தியாவுடன் கடினமான உறவுகளைப் பேணி வந்தீர்கள். உங்களுடைய
இந்தப் பயணம் 2015ஆம் ஆண்டின் பின்னர், மோடி
அரசாங்கத்துடனான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான சமிக்ஞையா?
பதில் : தேர்தலுக்கு முன்னரும் அதன் பின்னரும் (2015), எமக்கிடையில்
பல்வேறு தவறான புரிதல்கள் காணப்பட்டன. தற்பொழுது கூட, காலம் தானாக கடக்க வேண்டும் எனக்
கருதுகின்றேன்.
கேள்வி : 2015 மார்ச்சில், தி ஹிந்து நாளிதழுக்கு வழங்கிய செவ்வியில்
உங்களைத் தோற்கடித்து எதிர்த்தரப்பினரை ஆட்சிக்குக் கொண்டுவர ‘றோ’ உதவியிருப்பதாக கூறியிருந்தீர்கள். இலங்கை அரசியலில் இந்தியா தலையிடக் கூடாது
என சில வாரங்களுக்கு முன்னரும் நீங்கள் கூறியிருந்தீர்கள். அப்படி நடப்பதாக நீங்கள்
கவலையடைகின்றீர்களா?
பதில் : இந்தியா மாத்திரமல்ல, இந்தியாவை மட்டும் நான் குறிப்பிடவில்லை.
எந்தவொரு வெளித் தரப்பினரும் மற்றுமொரு நாட்டின் தேர்தல்களில் தலையிடக் கூடாது என்பதே
எனது கருத்தாக அமைந்தது.
யாரை அதிகாரத்துக்குக் கொண்டுவர வேண்டும் என்பதை அந்நாட்டு மக்களே
தீர்மானிக்க வேண்டும். இது அந்த நாட்டின் உள்விவகாரமாகும் என்பது எனது மனதில் எப்போதும்
உள்ளது.
அந்த நேரத்தில் அவர்கள் என்ன செய்தார்கள்? எதில் பிழை ஏற்பட்டது
என்பது தற்பொழுது அவர்களுக்குப் புரிந்திருக்கும். எனவே நாம் கடந்த காலத்தை மறக்க வேண்டும். முன்னோக்கிச்
செல்வதற்கான காலம் கனிந்துள்ளது.
கேள்வி : உங்கள் பரப்புரை பணிகளுக்கு சீன நிறுவனங்களிடம் இருந்து
நிதி உதவிகளை பெற்றுக் கொண்டதாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றனவே?
பதில் : அவர்கள் எனக்குப் பணம் வழங்கவில்லை. எம்மீது வேறு எந்தக்
குறையையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதால் அவர்கள் (மைத்திரிபால சிறிசேன) எம்மீது
இந்தக் குற்றச்சாட்டை சுமத்துகின்றனர்.
அவர்கள் ஆட்சிக்கு வரும்போது எனது 18 பில்லியன் அமெரிக்க டொலர்
நிதியைத் தேடிக் கொண்டு வந்தனர். அமெரிக்கா உள்ளிட்ட ஏனைய நாடுகளின் உதவிகள் இருக்கின்ற
போதும் அவர்களால் இன்னமும் இதனைக் கண்டுபிடிக்க முடியாதுள்ளது. ஒரு டொலரைக் கூட அவர்கள்
கண்டுபிடிக்கவில்லை.
கேள்வி : சீனா வழங்கிய பாரிய கடன்கள் மீதே அனைவரின் பார்வையும் உள்ளது. அம்பாந்தோட்டை மற்றும் கொழும்பு
துறைமுக திட்டங்கள் தொடர்பான திட்டங்கள் வித்தியாசமானவை என நீங்கள் கருதுகின்றீர்களா?
பதில் : நாம் பெற்ற கடன்களை இலங்கையினால் மீளச் செலுத்த முடியும்.
எனினும் இவர்கள் (சிறிசேன அரசாங்கம்) சகல விடயங்களையும் ஒன்றுடன் ஒன்று குழப்பிக் கொள்கின்றனர்.
கொழும்பு துறைமுக நகரத் திட்டத்துக்கு நாம் எந்தக் கொடுப்பனவையும்
வழங்கவில்லை. இது ஒப்பந்தத்தை பகிர்ந்து கொள்ளும் முறையிலான திட்டமாகும். அவர்கள் நிலத்தின்
ஒருபகுதியைப் பெற்று அவற்றில் அவர்கள் அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கு இணங்கப்பட்டது.
அந்த நேரம் அம்பாந்தோட்டை துறைமுகத்தை அமைக்க சீனாவிடமிருந்து
பெற்றுக் கொண்ட கடனானது, அமெரிக்கா உள்ளிட்ட ஏனைய நாடுகளிலிருந்து பெற்ற கடனைவிடக்
குறைவானது. அரசாங்கம் சரியான முறையில் முகாமைத்துவம் செய்யாமையாலேயே இப்பிரச்சினை மோசமாகியுள்ளது. அப்படியான சூழலில் எம்மை எப்படி குற்றஞ்சாட்ட முடியும்?
கேள்வி : இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான தற்போதைய உறவுகளை
எவ்வாறு பார்க்கின்றீர்கள். இந்தியாவுக்கு நெருக்கமாக இருக்கின்றோம் என இலங்கை தலைமைகள்
கூறினாலும் எட்கா உள்ளிட்ட ஒப்பந்தம், திருகோணமலை எண்ணெய் தாங்கி விவகாரம், மத்தல விமான
நிலைய விவகாரம் என்பன இன்னமும் கிடப்பில் உள்ளன?
பதில் : முன்னரைவிட தற்பொழுது இரு நாடுகளுக்கும் இடையில் நெருக்கமான
உறவுகள் இருப்பதாகக் கூறுகின்றனர். எனினும், இது எமது தரப்பிலிருந்து மாத்திரமே இதனைக்
கதைக்க வேண்டும். வெளிநாட்டில் இருக்கும்போது எமது அரசாங்கத்தை விமர்சிக்க நான் விரும்பவில்லை.
அவர்கள் இதுவரை நடத்திய சந்திப்புக்களை பாராட்டுகின்றேன். இருந்தாலும்
இலங்கைக்கு எந்த முதலீடுகளும் வரவில்லை. அரசாங்கம் நிலையானதாக இல்லை. இந்தியாவின் பாதுகாப்பு,
இலங்கையின் உறுதித் தன்மையிலேயே தங்கியுள்ளது. பலவீனமான அரசாங்கத்தினால் பாதுகாப்புக்கான
உறுதிமொழியை வழங்க முடியாது.
கேள்வி : உங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் இந்தியாவுடன் எந்த
விடயத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்?
பதில் : முதலீடுகளுக்கே முன்னுரிமை அளிப்பேன். அத்துடன் சிறப்பான
தொடர்பாடல்கள் மேற்கொள்ளப்படும். போர்க்காலத்தில் பொறிமுறையொன்று பின்பற்றப்பட்டது.
இரு தரப்பிலிருந்தும் மூன்று அதிகாரிகள் சந்தித்து இரு தரப்பு
விடயங்களை கலந்துரையாடுவர். பொருளாதார விடயங்களும் கலந்துரையாடப்பட்டன. அதுபோன்றதொரு
பொறிமுறையொன்றை மீண்டும் கொண்டுவர வேண்டும். இரு நாடுகளுக்கும் இடையில் தற்பொழுது காணப்படும்
சகல விடயங்களையும் இதன்மூலம் கலந்துரையாட முடியும்.
கேள்வி : நம்பிக்கையில்லா பிரேரணை என பல்வேறு சவால்கள் இருந்தபோதும்
சிறிலங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து இருக்கின்றன. மைத்திரிபால
சிறிசேன மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இணைந்து மீண்டும் தேர்தலுக்குச் செல்வார்கள்
என நீங்கள் கருதுகின்றீர்களா?
பதில் : அது எனக்கு சந்தேகமாகவே உள்ளது. அவர்கள் இணைந்திருந்தாலும்
வெற்றிபெற முடியாது.
கேள்வி : உங்கள் பழைய கட்சியான சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினரான சிறிசேனவுடன்
மீண்டும் இணைந்து பணியாற்ற விரும்புகின்றீர்களா?
பதில் : துரதிஷ்டவசமாக அவர் என்னுடன் இணைந்து பணியாற்றத் தயாராகவில்லை.
எமக்குத் தற்பொழுது சிறிலங்கா பொதுஜன முன்னணி என்ற கட்சியுள்ளது. இதன் தலைவர் ஜி.எல்.பீரிஸ்.
மும்முனைப் போட்டியில் 45 வீத வாக்குகளை நாம் பெற்றுள்ள நிலையில் அவரே எம்மை நாடவேண்டும்.
கேள்வி : 2015ஆம் ஆண்டில் எதிர்க்கட்சிகள் மாத்திரம் உங்களுக்கு
எதிராக ஒன்று சேரவில்லை. தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தினர் உங்கள் ஆட்சியில் ஓரங்கட்டப்பட்டதாக
உணர்ந்தனர். அப்படியான நிலையில் அவர்கள் ஏன் உங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என நினைக்கின்றீர்கள்?
பதில் : இந்த அரசாங்கம் இழைத்த தவறை அவர்கள் தற்பொழுது உணர்ந்திருப்பதாக
நான் நினைக்கின்றேன்.
உதாரணமாக 2014ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைக்கு
காரணமாக இருந்த அமைச்சர் தற்போதைய அரசாங்கத்திலும் அமைச்சராகவுள்ளார். நாம் ஆட்சியில்
இருக்கும்போது சேதமாக்கப்பட்ட வீடுகளை மீண்டும் கட்டிக்கொடுத்தோம்.
கேள்வி : விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் மனித உரிமை மீறல்கள்
தொடர்பில் உங்கள் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. ஊடகவியலாளர் ஒருவர் சித்திரவதைக்கு
உட்படுத்தப்பட்டமை தொடர்பில் நீங்கள் கூட விசாரிக்கப்பட்டீர்கள். இவ்வாறான குற்றச்சாட்டுக்கள்
எந்தளவுக்கு உண்மையானவை?
பதில் : அவை பாரிய பிரச்சினையாக இருக்கும் என நான் நினைக்கவில்லை.
எமக்குத் தொல்லை கொடுப்பதற்கே இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன என்பது
மக்களுக்கு நன்கு தெரியும். ஏன் எனில் இந்த வழக்குகள் யாவும் ராஜபக்ஸ குடும்பத்துக்கும்
அதற்கு ஆதரவானவர்களுக்கும் எதிரானவையே.
எனது அரசாங்கத்தில் அங்கம் வகித்து தற்போது இந்த அரசாங்கத்தில்
இருப்பவர்களுக்கு என்ன நடந்தது? மறைப்பதற்கு எம்மிடம் எதுவும் இல்லை.
பயங்கரவாத அமைப்பான விடுதலைப் புலிகளை நாம் ஒழித்தோம். எமக்காக
இதனைச் செய்யவில்லை. அவர்கள் எமது நாட்டில் மாத்திரமன்றி அயல் நாடுகளிலும் பயங்கரவாத
செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தனர். ராஜிவ் காந்தியைக் கொலை செய்திருந்தனர்.
உலகத்துக்கே தற்கொலை அங்கிகளை அறிமுகப்படுத்தியிருந்தனர். அப்படியான
அமைப்பை தோற்கடித்தது ஏனைய நாடுகளுக்கும் உதவுவதாகவே அமைந்தது.
கேள்வி : ராஜிவ் காந்தி படுகொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட
ஏழு பேரையும் விடுதலை செய்யுமாறு தமிழ்நாடு அமைச்சரவை பரிந்துரைத்துள்ளது. இது தொடர்பில்
உங்கள் நிலைப்பாடு என்ன?
பதில் : இது தொடர்பில் எனக்கு எந்த நிலைப்பாடும் இல்லை. இது
இந்திய அரசாங்கத்தைப் பொறுத்தது என்பதுடன் இந்தியாவின் உள்விவகாரமாகும். இதுவே இலங்கையாக
இருந்தால் வேறு நிலைப்பாட்டை எடுத்திருப்போம். இந்தியா என்பதால் என்னால் எதனையும் கூற
முடியாது.
கேள்வி : நீங்கள் ஏற்கனவே இரண்டு தடவைகள் ஜனாதிபதியாகப் பதவி வகித்திருந்தீர்கள். 19ஆவது திருத்தத்தின்
கீழ் ஜனாதிபதியாவதற்கு வரையறையொன்று போடப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் 2019ஆம் ஆண்டு
தேர்தலில் சிறிலங்கா பொதுஜன முன்னணியில் யார் தலைமைத்துவம் வகிக்கப் போகின்றார்?
பதில் : சிறிலங்கா பொதுஜன முன்னணிக்கு நான் தலைமை தாங்குவேன். திருத்தம் மேற்கொள்ளப்பட்டாலும்
நீதிமன்றத்தில் அதற்கு எதிராக போராட முடியும் என்ற கருத்தும் உள்ளது. அவ்வாறான சவாலை
எதிர்கொள்வதா இல்லையா என்பதை நான் தீர்மானிக்க வேண்டியுள்ளது. இல்லாவிட்டால் அனைவராலும்
ஏற்றுக் கொள்ளக் கூடிய வேட்பாளர் ஒருவரை அறிவிக்க வேண்டும்.
கேள்வி: அப்படி அறிவிக்கும் நபர் உங்கள் குடும்ப உறுப்பினராக
இருப்பாரா அல்லது வெளிநபர் ஒருவர் பற்றி கவனம் செலுத்துவீர்களா?
பதில் : எனது மகன் (நாமல் ராஜபக்ஸ) ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க
முடியாது. ஏனெனில் ஜனாதிபதி வேட்பாளராவதற்கு
ஆகக் குறைந்த வயது 35 ஆகும். எனவே 2019 தேர்தலில் அவரை கவனத்தில் கொள்ள முடியாது.
எனது சகோதரர் நிச்சயமாக போட்டியாளராக இருப்பார். ஆனால் கட்சி
மற்றும் பங்காளிக் கட்சிகளே யார் வேண்டும் என்பதைத் தீர்மானிப்பவர்களாக இருப்பர்.
0 comments:
Post a Comment