பத்திரிகையாளர் கசோக்கியின் உடல் பாகங்கள்
சவூதி தூதரக அதிகாரி வீட்டு கிணற்றில் கண்டுபிடிப்பு
பிரிட்டன் நாட்டு தொலைக்காட்சி
 செய்தி வெளியிட்டுள்ளது
   


துருக்கியில் உள்ள சவூதி தூதரகத்தில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் ஜமால் கசோக்கியின் உடல் பாகங்கள் தூதரக அதிகாரியின் வீட்டு தோட்டத்தில் உள்ள கிணற்றில் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் கட்டுரைகள் எழுதி வந்த சவூதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி (வயது 59), துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவூதி அரேபிய துணை தூதரகத்துக்கு கடந்த 2-ம் திகதி சென்றார். பின்னர் அவர் அங்கிருந்து திரும்பவில்லை.
அவர் அந்த தூதரகத்துக்குள் வைத்து சவூதி அரேபிய ஏஜெண்டுகளால் கொல்லப்பட்டு விட்டார் என்று பல தரப்பிலும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முதலில் இதனை மறுத்த சவூதி அரேபியா, பின்னர் தூதரகத்தில் ஜமால் கசோக்கி கொல்லப்பட்டதை உறுதி செய்தது. சவூதி மன்னராட்சியையும் பட்டத்து இளவரசரையும் கடுமையாக விமர்சித்து வந்த ஜமால் கசோக்கி கொல்லப்பட்டது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் துருக்கி பாராளுமன்றத்தில் ஜனாதிபதி எர்டோகன் நேற்று பேசினார். அப்போது அவர் கசோக்கி படுகொலை திட்டமிட்ட சதி என குற்றம்சாட்டினார்.

கசோக்கி படுகொலை செய்யப்படுவதற்கு சில மணி நேரத்திற்கு முன்னதாக, அங்கிருந்த சிசிடிவி கமராக்களை நீக்கி உள்ளனர். சவூதி அரேபிய தூதரகம் அருகேயுள்ள காட்டினை சவூதி அரேபிய ஏஜெண்டுகள் பார்வையிட்டிருக்கிறார்கள். இந்த காட்டில்தான் கசோக்கியின் உடல் வீசப்பட்டிருக்கலாம் என கருதி துருக்கி அதிகாரிகள் தேடுதல் வேட்டை நடத்தினர்.

இது கொடூரமான திட்டமிட்ட படுகொலை. இதை மறைக்க முடியாது. எனவே, கசோக்கி உடல் எங்கு இருக்கிறது? என்பது உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் சவூதி அரேபியா வெளியிட வேண்டும். இந்த கொலையின் பின்னணியில் உள்ள உண்மைகளை நிச்சயம் வெளிக்கொண்டு வருவோம்என்று தெரிவித்தார் எர்டோகன்.

இதற்கிடையே கசோக்கியின் உடல் பாகங்கள் சவூதி அரேபிய தூதரக அதிகாரியின் வீட்டில் கிடைத்து இருப்பதாக பிரிட்டன் நாட்டு செய்தி தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. 

கசோக்கியின் உடல் பாகங்கள் சவூதி தூதரக அதிகாரியின் வீட்டு தோட்டத்தில் உள்ள கிணற்றில் கண்டுபிடிக்கப்பட்டதாக எதிர்க்கட்சி தலைவர் டோகு பெரின்செக் கூறியதாக துருக்கி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. கசோக்கியின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டும், முகம் சிதைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக மற்றொரு தகவலும் வெளியாகியிருக்கிறது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top