ஐஎஸ் அடிமையாக இருந்து நோபல் பரிசு வென்ற
ஈராக்கைச் சேர்ந்த இளம் பெண் நாடியா முராத்
அமைதிக்கான நோபல் பரிசு நார்வே தலைநகர் ஆஸ்லோவில் அறிவிக்கப்பட்டது. அமைதிக்கான நோபல் பரிசை இந்த ஆண்டு இரு நபர்கள் பெறுகிறார்கள். காங்கோவை சேர்ந்த மருத்துவர் டெனிஸ் முக்வேஜாவும், ஈராக்கைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலரான நாடியா முராத்தும் பெறுவுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடியா முராத் (வயது 25) ஈராக்கைச் சேர்ந்த இளம் குர்து மனித உரிமை ஆர்வலர். போரில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் பெண்களுக்கு எதிராக குரல் கொடுத்தவர். குறிப்பாக அந்நாட்டில் சிறுபான்மையினராக உள்ள யாசிதி பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் குறித்து தீவிரமாக குரல் கொடுத்தவர்.
ஈராக்கில் சிரியா எல்லையில் உள்ள சிஞ்சார் கிராமத்தில் அமைதியாக தான் முராத்தின் வாழ்க்கை சென்று கொண்டு இருந்தது. ஈராக் மற்றும் சிரியாவை ஐஎஸ் தீவிரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த நேரம் அது. 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முராத் வசித்த கிராமத்துக்குள் நுழைந்த ஐஎஸ் தீவிரவாதிகள் குர்திஷ் இன மக்களை குறி வைத்து தாக்கினர்.
யாசிதி ஆண்கள் அனைவரையும் கொன்று குவித்த ஐஎஸ் தீவிரவாதிகள், யாசிதி பெண்களை பாலியல் அடிமைகளாக இழுத்துச் சென்றனர். முராத்தும் அவர்கள் கைகளில் சிக்கியதால் அவரது வாழ்க்கையும் தலைகீழானது.
செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் நாடியா முராத் தனக்கு நேர்ந்த கொடுமைகளை அவரே விவரித்துள்ளார். அவர் கூறுகையில் ‘‘எங்கள் கிராமத்துக்குள் நுழைந்த ஐஎஸ் தீவிரவாதிகளின் அடாவடி இன்னமும் என் கண்ணை விட்டு அகலவில்லை. மூன்று மாதம் அவர்கள் பிடியில் சிக்கி கொடுமைகளை அனுபவித்தேன். நான் உட்பட யாசிதி பெண்களை பிடித்துச் சென்ற ஐஎஸ் தீவிரவாதிகள் மொசூல் நகருக்கு இழுத்துச் சென்றனர்.
மூன்று மாதம் என்னை அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்தனர். கொடூரமாக தாக்கினர். அடித்து துன்புறுத்தினர். செக்ஸ் அடிமைகளாக நடத்தப்பட்ட பெண்களை விற்க அவர்கள் சந்தையையும் நடத்தினர். யாசிதி இனப் பெண்கள் கட்டாயப்படுத்தி ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டனர். இந்த கொடுமை எல்லாம் என் வாழ்நாளில் மறக்க முடியாத ரணத்தை ஏற்படுத்தி விட்டது’’ எனக் கூறியுள்ளார்.
ஐஎஸ் தீவிரவாதிகளால் அடைத்து வைக்கப்பட்டிருந்த முராத் 2016-ம் ஆண்டு மொசூலில் இருந்து தப்பிச் சென்றார். அங்கிருந்து பல கிலோ மீட்டர் தொலைவு நடந்து யாசிதி மக்களுக்காக ஐநா அமைதிருந்த முகாமுக்கு வந்து சேர்ந்தார். அவரது 6 சகோதரர்களும், தாயும் ஐஎஸ் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர்.
உறவுகளை இழந்த பின்னரும் தன்னம்பிக்கையை கைவிடாமல், அங்கிருந்தபடியே யாசிதி பெண்களை ஐஎஸ் தீவிரவாதிகளிடம் இருந்து விடுவிக்கும் பணிகளை ஒருங்கிணைத்தார். அவரது முயற்சியால் நூற்றுக்காண பெண்கள் விடுவிக்கப்பட்டனர்.
அதன் பின்னர் அவர்களுக்கான மறுவாழ்வு பணிகளையம் அவர் மேற்கொண்டு வருகிறார். ஐநா சபை கூட்டத்தில் கலந்து கொண்டு முராத் தனக்கு நேர்ந்த கொடூரத்தை முதன் முதலாக சொன்னபோது உலகமே அதிர்ந்தது.
ஐஎஸ் தீவிரவாதிகளிடம் இருந்து பெண்களை மீட்கும் அவரது பணியை பாராட்டி ஐரோப்பிய யூனியன் உள்ளிட்டவை விருது வழங்கி கெளரவித்துள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தலை தடுக்கும் ஐநா அமைப்பின் தூதராகவும் முராத் பணியாற்றி வருகிறார். தற்போது நோபல் அமைப்பு அமைதிக்கான பரிசு வழங்கி முராத்தை பாராட்டியுள்ளது.
0 comments:
Post a Comment