ஈரான் மீதான பொருளாதாரத் தடையை
அமெரிக்கா நீக்க வேண்டும்:
சர்வதேச நீதிமன்றம் உத்தரவு


ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளை மனிதாபிமான அடிப்படையில் அமெரிக்கா நீக்க  வேண்டும் என்று சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்கா விதித்திருந்த பொருளாதாரத் தடைகளை ரத்து செய்யக் கோரி சர்வதேச நீதிமன்றத்தில் ஈரான் வேண்டுகோள் விடுத்திருந்தது. இது தொடர்பான விசாரணை நெதர்லாந்திலுள்ள சர்வதேச நீதிமன்றத்தில் நடத்தது. இதில் அமெரிக்கா மற்றும் ஈரான் சார்பில் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
ஈரான் மீதான அமெரிக்காவின் தொடர் பொருளாதாரத் தடைகள் குறித்த சர்வதேச நீதிமன்றத் தீர்ப்பில், ''மருந்துப் பொருட்கள், உணவு, விவசாயப் பொருட்கள் மற்றும் அடிப்படைப் பொருட்களின் ஏற்றுமதி மீதான பொருளாதாரத் தடைகள் அந்நாட்டு மக்களின் அடிப்படை தேவைகளைப் பாதிக்கும். எனவே இதனைக் கவனத்தில் கொண்டு ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா நீக்க வேண்டும்'' என்று கூறியுள்ளது.
சர்வதேச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பின்பற்றுகிறாரா? அல்லது இந்த வழக்கில் அமெரிக்கா மேல்முறையீடு செய்கிறதா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
சர்வதேச  நீதிமன்றத்தில் ஈரானுக்குச் சார்பாக வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பை, அந்நாட்டின் ஊடகங்கள் சர்வதேச நீதிமன்றத்தால் ஈரானுக்கு கிடைத்த வெற்றி என்று கொண்டாடி வருகின்றனர்.
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறிப்பேன் என்றும் ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தம் பைத்தியக்காரத்தனமானது என்றும் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்து வந்தார்.
இந்த நிலையில் ஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது. ஆனால் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்த பிற நாடுகள் ஈரானுக்கு ஆதரவு தெரிவித்தன.
ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியவுடன் அந்த நாட்டின் மீது  பொருளாதரத் தடைகளை அமெரிக்கா விதித்து வருகிறது.
இந்த நிலையில் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் நவம்பர் மாதத்துக்குள் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா மிரட்டல் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top