ஒலுவில் துறைமுகத்தை மூடுங்கள்
அல்லது அதை மீனவத் துறைமுகமாக மாற்றுங்கள்
பிரதி அமைச்சர் பைசல் காசீம் அரசிடம் அவசர கோரிக்கை
ஒலுவில் கடலரிப்பால் அப்பகுதி மக்களுக்கு பாரிய தேசம் ஏற்பட்டிருப்பதால் ஒலுவில் துறைமுகத்தை அகற்றுவதற்கு அல்லது அதை மீனவத் துறைமுகமாக மாற்றுவதற்கு அரசு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசீம் அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் தெளிவுபடுத்துவதற்காக பிரதி அமைச்சர் இன்று அவரது அமைச்சின் அலுவலகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தினார்.இச்சந்தின்போதே மேற்கண்டவாறு கூறினார்.
பிரதி அமைச்சர் பைசல் காசீம் அங்கு தொடர்ந்து கூறுகையில்;
அம்பாறை மாவட்ட கரையோர கிராமங்களும் மீனவர்களும் இன்று கடலரிப்பு காரணமாக பாரிய ஆபத்தை எதிர்நோக்கி இருக்கின்றனர் .ஒலுவில் துறைமுகமே இதற்கு முழுக் காரணம்.
மறைந்த முன்னாள் அமைச்சரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவருமான எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களால் இந்தத் துறைமுகத்தை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் நிர்மாணத்துக்காக டென்மார்க்கினால் 43 மில்லியன் யூரோ நிதி வட்டியில்லாக் கடனாக வழங்கப்பட்டது.
அஷ்ரபின் காலத்தில் துறைமுகத்துக்கான வெளிச்ச வீடு மாத்திரமே அமைக்கப்பட்டது.அஷ்ரபின் மரணத்துக்கு பின் தற்போதைய தலைவர் ரவூப் ஹக்கீம் இந்த நடவடிக்கையை முன்னெடுத்தபோதும் எதுவும் நடக்கவில்லை.
மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சியில் சமல் ராஜபக்ஸ துறைமுக அமைச்சராக இருந்தபோதே இந்தத் துறைமுகம் நிர்மாணித்து முடிக்கப்பட்டது.
இதன் நிர்மாணப் பணிக்காக மக்கள் காணிகளை இழந்தது ஒருபுறமிருக்க அவர்களை மேலும் துன்பத்துக்கு உள்ளாக்கும் வகையில் இப்போது ஆயிரக் கணக்கான மீனவர்களின் வாழ்வும் பாதிக்கப்பட்டுள்ளது.கரைவலை மூலம் மீன் பிடித்து வாழ்வை நடத்தி வந்த இம்மக்களின் வாழ்வு இன்று கேள்விக்குறியாகியுள்ளது.
இந்தத் துறைமுக நிர்மாணத்தின்போது கடலினுள் பாரிய கருங்கற்களால் தடை அமைக்கப்பட்டது.இந்தத் தடை ஏற்படுத்தப்பட்ட நாள் முதல் ஒலுவில்,நிந்தவூர்,பாலமுனை,சாய்ந்தமருது,காரைதீவு,மாளிகைக்காடு போன்ற ஊர்களில் கரைவலை மீன்பிடி கிட்டத்தட்ட இல்லாமலேயே போயுள்ளது.
இயற்கையாக இடம்பெற்று வந்த கரை நீரோட்டம் பாதிக்கப்பட்டதனால் கரையோரத்தின் சமநிலை பாதிக்கப்பட்டுள்ளது.வடக்கில் இருந்து தெற்கு நோக்கி ஓடும் கடல்நீர் துறைமுக வாயிலை அடைப்பதுடன் துறைமுக்கத்தின் தென்பக்கம் மணலைக் கொண்டு வந்து சேர்க்கின்றது.துறைமுக வாயில் அடைபடுவதனால் துறைமுகத்தினுள் மீன்பிடி படகுகள் நுழைய முடியாமல் உள்ளன.
இதனால் துறைமுகத்தின் வடக்கு திசை பாரிய கடலரிப்புக்கு உள்ளாகியுள்ளது.இதனால் வெளிச்ச வீடு மற்றும் துறைமுக அதிகார சபைக்குச் சொந்தமான சுற்றுலா விடுதிகள் போன்றவை பாதிக்கப்பட்டதால் இவற்றைப் பாதுகாப்பதற்காக அதிகாரசபை கடலினுள் வடக்கு தெற்காக அலைத்தடுப்பு வேலி ஒன்றினை அமைத்தது.
இந்த வேலி அமைக்கப்பட்டதன் பின் வடக்கில் இருக்கும் கிராமங்களானஅட்டப்பள்ளம்,நிந்தவூர்,காரைதீவு,மாளிகைக்காடு மற்றும் சாய்ந்தமருது போன்ற ஊர்கள் பாரிய கடலரிப்புப் பிரச்சினைக்கு உள்ளாகிவிட்டன.இதனால் இவ்வூர்கள் பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றன.
15 ஆயிரம் கரைவலை குடும்பங்கள் பாதிப்பு,கடல் தாவரங்கள் அழிவு,கரையோரத்தில் இருந்த வயற்காணிகள் மற்றும் தென்னந்தோப்பு உள்ளிட்ட ஐம்பதுக்கு மேற்பட்ட ஏக்கர் காணி கடலுக்குள் உள்ளீர்ப்பு,கடல் ஆமைகளின் இணைப்பெருக்கம் பாதிப்பு,கடற்பாறைகள் வெளித்தள்ளப்பட்டு மீனவர்களின் வேலைகளுக்கு பாதிப்பு போன்ற பல பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
இது தொடர்பில் நான் கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர,துறைமுக அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த சமரசிங்க மற்றும் கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகியோரை அழைத்துச் சென்று காண்பித்துள்ளேன்.இருப்பினும்,நிரந்தரத் தீர்வுகள் எவையும் முன்வைப்படவில்லை.
கடந்த வாரம் நாடாளுமன்றில் இடம்பெற்ற வடக்கு-கிழக்கு அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதி செயலணிக் கூட்டத்தில் கலந்துகொண்டு ஜனாதிபதியிடம் இதை எடுத்துக் கூறினேன். குழுவொன்றை அமைத்து இது தொடர்பில் ஆராய்ந்து பார்த்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.இதற்கு முன்பும் ஜனாதிபதியைச் சந்தித்துப் பேசி இருக்கின்றேன்.
நாம் பத்து வருடங்களாக இது தொடர்பில் பேசி வருகின்றோம்.மஹிந்தவின் ஆட்சியிலும் பேசினோம்.எதுவும் நடக்கவில்லை.இந்த ஆட்சியிலாவது இந்தப் பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றே நாம் போராடுகிறோம்.ஜனாதிபதி மேலும் தாமதப்படுத்தாமல் உடன் தீர்வை முன்வைக்க வேண்டும்.
ஒலுவில் துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டதில் இருந்து ஒரு கப்பல்கூட வரவில்லை.வருமானம் எதுவும் இல்லாமல் செலவை மட்டும் அரசு செய்துகொண்டு இருக்கின்றது.மக்களின் பணம் இவ்வாறு வீண் விரயம் செய்யப்படுவதை அனுமதிக்க முடியாது.
இந்தத் துறைமுகத்தை மூட வேண்டும் அல்லது அதை மீனவ துறைமுகமாக மாற்ற வேண்டும்.ஏற்கனவே ஒரு மீனவத் துறைமுகம் இருக்கின்றபோதிலும் அந்தத் துறைமுகத்தின் செயற்பாட்டுக்கு இந்த வர்த்தகத் துறைமுகம் தடையாக இருக்கின்றது.
மீனவப் படகுகள் வர்த்தகத் துறைமுகத்தின் வழியாகவே செல்ல வேண்டியுள்ளது.அந்தத் துறைமுகத்தில் மண் நிரம்பிக் கிடப்பதால் அவர்களின் படகுகள் பயணிப்பது மிகவும் சிரமமாகவுள்ளது.ஆகவே,இதை மூடுவதைத் தவிர வேறு வழியே இல்லை.
அப்பகுதி மக்கள் விவசாயத்தையும் மீன் பிடியையுமே நம்பி வாழ்கின்றனர்.ஆனால்,இந்தக் கடலரிப்பு மீன்பிடியை மாத்திரமன்றி விவசாயத்தையும் பாதித்துள்ளது.ஆயிரக் கணக்கான ஏக்கர் வயல் நிலங்களுக்குள் கடல் நீர் புகுந்து நிலத்தில் உப்புக் கலந்துள்ளதால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தத் துறைமுகத்தால் ஏற்படப் போகும் விளைவுகள் பற்றி சிந்திக்காமல் அரசியல் காரணங்களுக்காக சில அரசியல்வாதிகள் இதை நிர்மாணித்ததால் இன்று மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதியின் கையில்தான் இது தங்கியுள்ளது.இந்தப் பிரச்சினையை மேலும் நீடிக்க விடாது உடன் தீர்ப்பதற்கு அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-எனத் தெரிவித்தார்.
[பிரதி அமைச்சரின் ஊடகப் பிரிவு]
0 comments:
Post a Comment