சிறைத்தண்டனை அனுபவித்து வரும்
ஞானசார தேரரின் மேன்முறையீட்டு மனு தள்ளுபடி

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கலகொட அத்தே ஞானசார தேரர் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுக்காது தள்ளுபடி செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயர் நீதிமன்றத்தின் ஈவா வனசுந்தர, பிரசன்ன ஜயவர்தன, நளின் பெரோ ஆகிய நீதியரசர்கள் அமர்வு, கலகொட அத்தே ஞானசார தேரரின் மனுவை தள்ளுபடி செய்ய இன்று உத்தரவிட்டுள்ளனர்.
எவ்வாறாயினும் தனது இந்த மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை முடியும் வரை தன்னை பிணையில் விடுதலை செய்ய வேண்டும் என ஞானசார தேரர் உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 8ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றம், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஞானசார தேரரை குற்றவாளி என அறிவித்து சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது.
இந்த தீர்ப்பை இரத்து செய்யுமாறு கோரியே அவர் இந்த மேன்முறையீட்டு மனுவை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
ஞானசார தேரர் கடந்த 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25ஆம் திகதி ஹோமாகம நீதவான் நீதிமன்றத்திற்குள் நடந்து கொண்ட விதம் நீதிமன்றத்தை அவமதிக்கு வகையில் இருந்ததாக கூறி, ஹோமாகம நீதவான் நேரடியாக தேரருக்கு எதிரான மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த முறைப்பாடு தொடர்பான வழக்கை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் ஞானசார தேரருக்கு 6 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top