அம்பாறை மாவட்ட கடற்தொழிலாளர்கள் சம்மேளனம்
ஜனாதிபதிக்கு அனுப்பிய மகஜரை அடுத்து
ஜனாதிபதி நல்லிணக்க செயலாளர் ஒலுவில் விஜயம்
அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளை நேரில் கண்டறியும் பொருட்டு ஜனாதிபதியின் நல்லிணக்க கூட்டிணைப்புச் செயலாளர் டாக்டர் பர்ணாந்து இன்று 23 ஆம் திகதி ஒலுவில் மீன்பிடி துறைமுகத்திற்கு நேரடியாக விஜயம் செய்து நிலைமைகளைக் கண்டறிந்ததுடன் மீனவர்களுடனும் கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தார்.
அம்பாறை மாவட்ட கடற்தொழிலாளர்கள் சம்மேளனத்தினால் ஒலுவில் மீன்பிடி துறைமுக பிரச்சனை தொடர்பில் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்ட மகஜரை அடுத்து ஜனாதிபதியின் நல்லிணக்க கூட்டிணைப்புச் செயலாளர் ஒலுவிலுக்கான இவ்விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.
அம்பாறை மாவட்ட ஆழ்கடல் இயந்திரப் படகு உரிமையாளர் சங்கத்தின் தலைவர் எம்.எஸ். நஸீர் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் கல்முனை கரையோர மாவட்ட மீனவ கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம், அம்பாறை மாவட்ட ஆழ்கடல் இயந்திரப் படகு உரிமையாளர்கள் சங்கம், கல்முனை மாவட்ட கடற்றொழில் அமைப்பு போன்றவற்றின் முக்கியஸ்தர்கள் அங்கு பிரசன்னமாயிருந்தனர்.
மேற்படி மீன்பிடி துறைமுக செயற்பாட்டிழைப்பினால் 15 ஆயிரம் மீனவக் குடும்பங்கள் நிர்க்கதியாகி உள்ளனர். கடந்த ஒரு மாத காலமாக எந்தவித வருமான வழிகள் இன்றி ஜீவனோபாயத்துக்காக பெரும் போராட்டம் நடத்திவருகின்றோம் என அமைப்பின் தலைவர் எம்.எஸ். நஸீர் ஜனாதிபதியின் நல்லிணக்க கூட்டிணைப்புச் செயலாளரிடம் தெரிவித்தார்.
தொழில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ரூபா 75 ஆயிரம் வீதம் அரசாங்கம் இழப்பீடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதுடன் துறைமுக செயற்பாட்டினை துரிதமாக மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அமைப்பின் தலைவர் எம்.எஸ். நஸீர் கேட்டுக் கொண்டார்.
மேற்படி பிரச்சினைகளை கேட்டறிந்த ஜனாதிபதியின் நல்லிணக்க கூட்டிணைப்புச் செயலளர் கோல்டன் பர்ணாந்து அங்கு தெரிவிக்கையில்,
இது மீனவர்களின் பிரச்சினை மட்டுமல்லாது தேசிய பொருளாதாரத்துடன் சம்மந்தப்பட்ட விடயமாகையால் எக்காரணம் கொண்டும் ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தை மூடுவதற்கான நடவடிக்கையை ஜனாதிபதி ஒருபோதும் முன்னெடுக்கமாட்டார்.
இத்துறைமுகத்தை மூடிவிட்டு இங்குள்ள ஆயிரக் கணக்கான மீனவர்கள் எங்கே செல்வது. உங்களினதும், உங்கள் குடும்பங்களினதும் எதிர்காலம் எவ்வாறு அமையும் என்பதை பற்றி நான் நன்கு அறிந்து கொண்டேன். எனவே இது தொடர்பாக உண்மையான ஒரு அறிக்கையை ஜனாதிபதிக்கு சமர்ப்பித்து இப்பிரச்சனைக்கு தீர்வினை வழங்குவதற்கு துரிதமாக நடவடிக்கை எடுப்பேன் என்று மீனவர்களுக்கு உறுதி தெரிவித்தார்.
0 comments:
Post a Comment