ஜனாதிபதியின் செயல் எவ்வளவு
 அரசியல் நாகரீகமானது?
எல்லோருக்கும் பிரமிப்பாகவும் உள்ளது!
அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு


பிரதமர் பதவிக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை நியமித்தமை எவ்வளவு அரசியல் நாகரீகமானது என்ற கேள்வி எழுகின்றது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்த அமைச்சர் ஹக்கீம், இந்திய ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு நேற்று பதிலளித்த போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறுகையில்,

பிரதமர் பதவியில் மஹிந்தவை ஜனாதிபதி நியமித்துள்ளார் எனினும் நாடாளுமன்ற பெரும்பான்மை பலத்தை மஹிந்த நிரூபிக்க வேண்டும்.

அவ்வாறு செய்வதற்கான ஆதாரங்கள் எதுவும் இதுவரையில் எமக்கு கிடைக்கவில்லை.

பிரதமராக நியமிக்கப்பட்டாலும் நாடாளுமன்றில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கும் வரையில் அந்தப் பதவி அதிகாரபூர்வமானதல்ல.

இவ்வாறான ஓர் அதிர்ச்சி வைத்தியத்தை ஜனாதிபதி செய்திருக்கின்றார் என்பது எல்லோருக்கும் பிரமிப்பாக உள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் இது எவ்வளவு அரசியல் நாகரீகம் வாய்ந்த விசயம் என்ற கேள்வியும் எழுவதற்கு வாய்ப்பு உண்டு.

இன்றிரவே நாடு திரும்பி கட்சியின் மேலிடம் கூடி தீவிரவமாக விவாதித்து தீர்மானம் எடுப்போம்.

இவ்வாறான ஓர் நிலைமை ஏற்பட்டது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

இந்த ஜனாதிபதியை வெல்ல வைப்பதில் ஐக்கிய தேசியக் கட்சியின் பங்கு, ரணில்விக்ரமசிங்கவின் பங்கு அபாரமானது.

அதனை புறந்தள்ளி இவ்வாறான ஓர் அவசர முடிவினை ஜனாதிபதி எடுத்திருக்கிறார் என்பது இனி வரும் நாட்களில் அரசியலிலே தீவிரமாக அலசப்படும்.

இவ்வாறான ஓர் மாற்றம் தேவையா இல்லையா என்பதனை தீர்மானிக்கும் சக்தி எங்கள் கைகளிலும் இருக்கின்றது நாடு திரும்பியதும் இது குறித்து தீர்க்கமாக ஆலோசனை செய்து தீர்மானம் எடுப்போம்.

இந்த ஆட்சி மாற்றத்தில் இந்தியாவின் தலையீடு உண்டு என நான் கருதவில்லை என ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top