நாடாளுமன்றம், உடன் கலைக்கப்படுமாயின்
69 எம்பிகளுக்கு ஏற்படும் பரிதாப நிலை!



நாடாளுமன்றம் உடனே கலைக்கப்படுமாயின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 69 பேர் தமது ஓய்வூதியத்தை இழக்க நேரிடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.




2015ம் ஆண்டு ஓகஸ்ட் 17ம் திகதி இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் முதன்முறையாக நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கே இந்தநிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த வருடம் மைத்திரிபால சிறிசேன சடுதியாக நாடாளுமன்றத்தைக் கலைத்திருந்த சந்தர்ப்பத்திலும் இவ்விவகாரம் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியிருந்து.

எனினும், நாடாளுமன்றக் கலைப்பு செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையடுத்து கலங்கிப் போயிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

தற்போது அந்த விவகாரம் மீண்டும் பேசு பொருளாகியுள்ளது. 2015ம் ஆண்டு நாடாளுமன்றத்திற்குத் தெரிவான புதியவர்களில் 69 பேர் ஓய்வூதிய உரித்தை இழப்பார்கள்.

புதிய ஜனாதிபதியின் கீழ் கட்சித் தலைவர்களின் விருப்பப்படி நாடாளுமன்றம் உடனடியாகக் கலைக்கப்படுமாயின் 69 பேரின் கதி அதோகதியாகி விடும் என்றும் கூறப்படுகிறது.

புதிய ஜனாதிபதியின் அமோக வெற்றியுடன், நாடாளுமன்றத் தேர்தலுக்குச் செல்வோம் என்று எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ச ஏற்கெனவே அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு அடிப்படைச் சம்பளமாக மாதாந்தம் 54 ஆயிரத்து 265 ரூபாய் வழங்கப்படுகின்றது. அதனடிப்படையில் ஓய்வூதியமாக அவர்களது அடிப்படைச் சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கான 18,095 ரூபாய் கிடைக்கும்.

அதேவேளை, சம்பளத்தை விட பல்வேறு சாதாரண, விசேட கொடுப்பனவுகளும், சலுகைகளும், சௌபாக்கியங்களும் நாடாமன்ற உறுப்பினர்களுக்குக் கிடைக்கின்றன.

அவற்றைச் சேர்த்துக் கணக்கிட்டால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதாந்தம் 5 இலட்சத்துக்குக் குறையாமல் வருமானத்தை ஈட்டுவர் என்று அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.

அரசியல் யாப்பின்படி நாடாளுமன்றத்தின் பதவிக் காலத்தை நான்கரை வருடங்கள் முடிந்த பின்னர் கலைக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது.

அவ்வாறாயின் தற்போதைய நாடாளுமன்றத்தை நான்கரை வருடங்கள் கழித்து கலைக்கக் கூடிய அதிகாரபூர்வ காலம் 2020 பெப்ரவரி 17ம் திகதியாகும்.

அதேவேளை தற்போதைய நாடாளுமன்றத்தின் 5 வருடப் பதவிக் காலம் 2020 ஓகஸ்ட் 17ஆம் திகதியோடு நிறைவு பெறுகின்றது.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top