இனத்துவ அரசியலை புறந்தள்ளி,
தேசிய அரசியல் நீரோட்டத்தில் இணைவோம்
முன்னாள் பிரதியமைச்சர்
மயோன் முஸ்தபா வேண்டுகோள்




முஸ்லிம் தலைமைகளினால் பிழையாக வழிநடாத்தப்பட்டு, நடுத்தெருவில் கைவிடப்பட்டுள்ள எமது முஸ்லிம் சகோதரர்கள் அனைவரும் இனத்துவ அரசியல் கட்சிகளை புறந்தள்ளி, தேசிய அரசியல் நீரோட்டத்தில் இணைந்து கொள்ள முன்வர வேண்டும் என்று முன்னாள் உயர் கல்வி பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அமோக வெற்றியைத் தொடர்ந்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மலர்ந்துள்ள புதிய தலைமைத்துவம் நல்லிணக்கத்தை பலப்படுத்தி, எதிர்கால சந்ததிகளின் நல்வாழ்வுக்கும் சுபீட்சமான இலங்கையை கட்டியெழுப்பவும் காத்திரமான பங்களிப்பினை மேற்கொள்ளும் என்பதில் யாரும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

"இந்நாட்டு மக்கள் ஒரு சிறந்த தலைவனை தேர்ந்தெடுத்துள்ளனர். இந்நாட்டை முன்னேற்றப்பாதையில் இட்டுச்செல்லும் சக்தி மிக்க தலைமையாக சிங்கள பெரும்பான்மை மக்களின் இந்த தெரிவு காணப்படுகிறது. மறுபுறத்தில் முஸ்லிம் மக்களை பிழையாக வழிநடத்தி பெரும்பான்மை மக்களிடம் இருந்து முழு முஸ்லிம் சமூகத்தையும் குறிப்பாக வடக்கு, கிழக்கு முஸ்லிம் மக்களை துருவப்படுத்தும் மிகப்பெரும் துரோகத்தனத்தை முஸ்லிம் அரசியல் தலைமைகள் இருவரும் முன்னெடுத்தனர்.

இது எமது சமூகத்துக்கு மிகவும் ஆபத்தான செயற்பாடாகும் என எமது தேர்தல் பிரச்சாரத்தின்போது பல தடவை கூறினோம். அது இன்று உண்மையாகியுள்ளது. மொத்தத்தில் மக்களை பலிக்கடாவாக்கி நடுத்தெருவுக்கு கொண்டு வந்துள்ளனர். இதனை சீர்செய்தாக வேண்டும். அதற்கான பொறுப்பை ஏற்று மிகவும் நிதானமாக செயல்பட்டு முஸ்லிம் சமூகத்தின் மீதான கறைகளை போக்க வேண்டும்.

கடந்த காலங்களில் எமது தலைவர்கள் என்று சொல்லப்படுபவர்களினாலே முஸ்லிம்கள் வழிகெடுக்கப்பட்டுள்ளோம். இதிலிருந்து மீள வேண்டும். இனத்துவ அடையாளத்ததுடன் காணப்படும் கட்சிகளை புறந்தள்ளுங்கள். தேசிய அரசிய நீரோட்டத்தில் இணையுங்கள். அதற்காக மஹிந்த ராஜபக்ச தலைமையிலான சிறி லங்கா பொதுஜன பெரமுனவோடு எனது அரசியல் பயணத்தில் இணைந்து கொள்ளுமாறு அறைகூவல் விடுக்கிறேன். இதன் மூலம் இனவாதத்தினை முற்றாக களைவோம்.

இந்த நாட்டில் உள்ள முஸ்லிம்கள் உண்மை பேசும் சமூகத்தினர் என்கிற எண்ணப்பாட்டை பிற சமூகத்தினர் மத்தியில் உருவாக்க வேண்டும். நாட்டுப்பற்று மிக்க முஸ்லிம்களின் மகிமை கட்டியெழுப்பப்பட வேண்டும், அதற்காக இளைஞர்கள் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும் என அழைப்பு விடுக்கிறேன். அதற்கான சிறந்த வழிகாட்டலாக எனது அரசியல் பாதை எதிர்காலத்தில் அமையும் எனவும் உறுதியளிக்கிறேன்.

அதேவேளை சிறந்ததொரு அபிவிருத்தி பாதைக்கு கல்முனை மக்களை கொண்டு செல்வதே எனது தூரநோக்காகும். அதற்குரிய பாரிய திட்டங்கள் என்னிடம் உள்ளது. புதிய கல்முனை நகரத் திட்டத்தை முன்னெடுக்க வேண்டியுள்ளது. இனங்களிடையே நல்லுறவை கட்டியெயெழுப்ப வேண்டும். அவ்வாறே சாய்ந்தமருதின் நியாயமான நீண்டகால கோரிக்கை நிச்சயம் நிறைவேறும். அதேபோன்று கல்முனை பிரச்சினைக்கும் சுமூகமாக தீர்வு காணப்படும்.

இந்த தேர்தலின்போது எனது மீள் வருகையினால் பல விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டேன். இவை அத்தனையையும் முறியடித்து இன்று பெரு வெற்றி பெறப்பட்டுள்ளது. இன்று இதனை கொண்டாடுகின்றோம். குறுகிய எண்ணம் கொண்டு மக்களை பிழையான வழிக்கு ஒருபோதும் நான் கொண்டு செல்ல மாட்டேன். எப்போதும் நேர்மையாக அரசியல் செய்பவன், இனவாதம் என்னிடம் கிடையாது, பிரதேசவாதம் என்பது என்னிடம் அறவே இல்லை.

இத்தேர்தலில் கல்முனை தொகுதியில் சுமார் 7500 வாக்குகள் பொதுஜன பெரமுனவுக்கு கிடைத்துள்ளன. அதனை நான்கு மடங்காக்கும் வேலைத்திட்டம் என்னிடம் உள்ளது. இதற்காக இளைஞர் சக்தியினை ஒன்று திரட்டி பயணிக்க திட்டமிட்டுள்ளேன்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.


0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top