சாய்ந்தமருது பெரிய பள்ளிவாயலுக்குச் சொந்தமான காணியில்

நிந்தவூர் பொலிஸ் நிலையம் அமைப்பதற்கு
காரைதீவு பிரதேச செயலாளரினால் சிபாரிசு?

சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலுக்கு சொந்தமான காரைதீவு முச்சந்தியில் அமைந்துள்ள காணியில் நிந்தவூர் பொலிஸ் நிலையம் அமைக்க காரைதீவு பிரதேச செயலாளர் சிவ ஜெகராஜன் சிபாரிசு செய்துள்ளதாகவும் இந்த சிபாரிசு மாவட்ட செயலாளர் நீல் டி அல்விஸிற்கு காரைதீவு பிரதேச செயலாளரினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும்  நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளன.
 சாய்ந்தமருது பள்ளிவாசலுக்கு சொந்தமான சுமார் 140 வருடங்கள் பழமை வாய்ந்த இக்காணி காரைதீவு முச்சந்தியிலுள்ள புத்தர் சிலை அருகாமையில் பிரதான வீதியில் உள்ளது.
குறித்த காணியை அளவீடு செய்து எல்லை வைப்பதற்கு  பள்ளிவாசல் நிருவாகத்தினர் காணி இருக்கும் இடத்திற்கு இன்று 5 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை  சென்ற போது அங்கு பதட்டமான சூழ்நிலை ஒன்று உருவாக்கப்பட்டதாக அறிவிக்கப்படுகின்றது.
முன்னதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையில் இக்காணி தொடர்பாக  பலசுற்று பேர்ச்சுவாத்தைகள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள் மாவட்ட செயலாளரை சந்தித்து இக் காணி  தொடர்பில் விளக்கமளித்தும் உள்ளனர்.


காரைதீவு முச்சந்தித் தைக்கா (சியாரம்) பற்றிய சில விபரங்கள்:-

அமைவிடம்
காரைதீவு முச்சந்தித் தைக்கா (சியாரம்)இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு பொத்துவில் பிரதான வீதியில் (A4) கல்முனையிலிருந்து 04 கிலோ மீட்டர் தொலைவில் காரைதீவு முச்சந்திக்கு அருகாமையில் மேற்குப்புறமாக அமைந்துள்ளது. இது அமைந்துள்ள காணியின் தற்கால விஸ்;தீரணம்: 1ஏக்கர் 28.3 பேர்ச் (1றூட் 08..5 பேர்ச் மேட்டு நிலம் 3 றூட் 19.8 பேர்ச் வயல்)
இச்சந்தியின் மேற்குப்புறமாகப் பிரிந்து செல்லும் பாதை சம்மாந்துறையூடாக அம்பாறை நோக்கிச் செல்கின்றது. இப்பாதை அமைக்கு முன்னரேயே இத் தைக்கா இங்கு அமைந்திருந்த காரணத்தினால் இச்சந்தி தைக்கா சந்தி என்று அழைக்கப்பட்டு வந்தது.
19ம் நூற்றாண்டுக்கு முன்னர் இத்தைக்கா அமைந்துள்ள பிரதேசம் பாவட்டந்தீவு என அழைக்கப்பட்டு வந்துள்ளது. தற்போதைய பிரதான பாதையுட்பட ஏனைய பாதைகள் அமைக்கப்படுவதற்கு முன்னர் இப்பிரதேசம் நீர் நிலைகளால் சூழப்பட்ட தீவாகக் காட்சியளித்தது. பாவட்டந்தீவின் கிழக்குப்புறமாக காரைதீவும் வடக்கே சாய்ந்தமருதும் தெற்கே நிந்தவூரும் மேற்கே மாவடிப்பள்ளியும்; காணப்பட்டது.
இப்பிரதேசத்தின் அயற் கிராமங்களான காரைதீவு, சாய்ந்தமருது, மாவடிப்பள்ளி கிராமங்களில் இருந்தும் இக்கிராமங்கள் ஊடாகவும் வயல் நிலங்களுக்கு செல்வோர் பாவட்டந்தீவை ஊடறுத்தும் அங்கு தங்கியும் செல்வது வழக்கமாக இருந்தது. இப்பிரதேசத்தில் போக்குவரத்து நீர் நிலைகளை அண்டிய நடை பாதைகளாலும் நீர் வழியாகவுமே மேற்கொள்ளப்பட்டது.
அக்காலத்தில் கப்பல்கள் தற்போதைய மட்டக்களப்பு, கல்லாறு வாவியூடாக வந்து முன்னர் மட்டக்களப்பு என அழைக்கப்பட்ட சம்மாந்துறைக்கும் சாய்ந்தமருதுக்கும் இடைப்பட்ட பகுதியில் பாவட்டந்தீவுக்கருகாமையிலேயே நங்கூரமிட்டுள்ளன. டச்சுத் தூதுவர் ஸ்பில் பேகனும் 1602இல் இங்கேயே தரையிறங்கி கண்டி மன்னனைச் சந்திக்கச் சென்றுள்ளான் என கொழும்பு டச்சு நூதன சாலையில் உள்ள படமொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்விதமே இந்தியாவில் இருந்து வந்த பெரியார்களும் இங்கு தரையிறங்கி அண்மையிலுள்ள பிரதேசங்களில் வாழ்ந்துள்ளனர்.
ஆங்கிலேயே ஆட்சியில் 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இப்பிரதேசத்தில் உள்ள பிரதான பாதைகள் போடப்பட்டதன் பின்னரே காரைதீவுக்கும் பாவட்டந் தீவுக்கும் நிலத் தொடர்பு ஏற்பட்டது. அத்துடன் 1930ஆம் ஆண்டின் பின்னர் கிராம சபை ஆட்சி முறை ஏற்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து பாவட்டந்தீவு காரைதீவுடன் இணைக்கப்பட்டது. ஆயினும் 1987ஆம் ஆண்டில் பாவட்டந்தீவு உட்பட குடாக்கரைப் பிரதேசம் அனைத்தும் கல்முனை பிரதேச சபைக்கும் 1998 இல் கல்முனை நகர சபைக்கும் 2001 இல் கல்முனை மாநகர சபைக்கும்;; உட்பட்ட பிரதேசமாக அரச வர்த்தமானிகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
கி.பி.19ம் நூற்றாண்டின் மத்திய காலப்பகுதியில் இந்தியாவில் இருந்து வந்த மெஹர்பான் அலிஸா கலீபா கலாபத் ஒலியுள்ளா என்பவர் பாவட்டந் தீவில் குடிசை அமைத்து வாழ்ந்து வந்துள்ளார். இவர் உயிர் வாழ்ந்த காலத்தில் இந்தியாவிலிருந்து வந்த பக்கீர் வம்சத்தினர் இவருடன் தொடர்பு வைத்திருந்தனர். மெஹர்பான் அலிஸா கலீபா சாய்ந்தமருது ஜும்ஆப்பள்ளிவாசலுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததோடு சாய்ந்தமருது, காரைதீவு, மாவடிப்பள்ளி மக்களுடனும் மிக அந்நியோன்யமாகப் பழகினார். இவர் பல அற்புதங்களையும் செய்து காட்டியதாக அறிய முடிகின்றது.
மெஹர்பான் அலிஸா கலிபா மரணித்த பின்னர் அவர் வாழ்ந்த வளவிலேயே அவர் ஜனாஸா அடக்கம் செய்யப்பட்டு சாய்ந்தமருது ஜும்ஆப்பள்ளிவாசல் உதவியுடன் ஒரு சியாரம் அமைக்கப்பட்டது. இதனைக் கவனிப்பதற்காக சாய்ந்தமருது ஜும்ஆப்பள்ளிவாசலால் பக்கீர்மார்கள் அமர்த்தப்பட்டார்கள். இவர்கள் வசிப்பதற்கு ஒர் வீடும் இங்கு கட்டப்பட்டது. பக்கீர்மார்களுக்கு ஜீவனோபாயமாக நெற்காணியும் வழங்கப்பட்டது. 1920ம் ஆண்டளவில் இவ்வளவில் சாய்ந்தமருதைச் சேர்ந்த சிலர் ஜும்ஆப்பள்ளிவாசலின் அனுமதியுடன் தற்காலிக தேனீர் கடைகள் கட்டி வியாபாரம் செய்தார்கள். இக்கடைகள் இரவு பகலாகாத் திறந்திருந்து போக்குவரத்து செய்வர்களுக்கு உதவியது. 1940ம் ஆண்டளவில் சாய்ந்தமருது ஜும்ப்பள்ளிவாசல் ஆறு கடைகளை நிரந்தரமாகக் கட்டி வாடகைக்குக் கொடுத்தது.
இந்த சியாரத்தில் வருடம் தோறும் கொடியேற்றுதல், கந்தூரி கொடுத்தல் என்பன நடைபெற்று வந்தன. காரைதீவு, சாய்ந்தமருது மக்கள் இவ்வைபவத்தில் பங்கெடுத்து வந்தார்கள். இது இம்மக்களிடையே இன நல்லுறவைப் பலப்படுத்தியது.
போக்குவரத்து செய்பவர்கள் சில சந்தர்ப்பங்களில் இங்கு தொழுதுவிட்டுச் செல்வதுமுண்டு. இதன் காரணமாகவே இதனை தைக்கா (சிறு பள்ளிவாசல்) என அழைக்கப்பட்டது.
இப்பிரதேசம் காரைதீவு கிராம சபையின் ஆட்சிக்குள் வந்தபின்னர் சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் இவ்விடத்திற்கான சோலை வரியை காரைதீவு கிராம சபைக்குச் செலுத்தி பற்றுச்சீட்டுகள் பெற்றுள்ளது.
1957இல் ஏற்பட்ட பெரு வெள்ளம், 1978இல் ஏற்பட்ட சூறாவளி, என்பனவற்றால் கடைகள், வீடு, வேலிகள் என்பன பலத்த சேதத்திற்குள்ளானது ஆயினும் சியாரம் பாதிக்கப்படவில்லை இவைகள் மீண்டும் திருத்தியமைக்கப்பட்டன. இதற்கு அரச உதவி சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் மூலமே கிடைத்தன. காரைதீவு மக்களின் ஒத்துழைப்பும் கிடைத்தது.
1957ம் ;ண்டு பெப்ரவரி மாதம் காரைதீவு முச்சந்தி தைக்காவின் வேலிகளைச் சில விசமிகள் சேதப்படுத்தினர். இது தொடர்பாக கல்முனை நா.. கேட் முதலியார் M.S.காரியப்பர் அரச அதிபருடன் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுத்தார்.
1983ம் ஆண்டில் இச்சியாரம் தீயிடப்படடு அதன் பாகங்கள் களவாடப்பட்டன. இது தொடர்பாக இப்;பிரதேசத்தில் அமைதிக் குலைவொன்று ஏற்பட்டமையால் கல்முனை A.S.P. நவரத்னராசா தலைமையில் சமாதானக் கூட்டம் ஒன்று 01.10.1983 இல் சம்மாந்துறை உதவி அரசாங்க அதிபர் காரியாலத்தில் சாய்ந்தமருது, காரைதீவு, சம்மாந்துறை,நிந்தவூர் பிரதான தர்மகத்தாக்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து 16.03.1984 இல் கிழக்குப் பிராந்திய DIG கிங்ஸ்லி வீரசூரியவின் தலைமையில் மேற்குறிப்பிட்ட பிரமுகர்களுடன் நடந்த கூட்டத்தில் சியாரத்தின் காணிக்கு வேலிபோட்டுப் பராமரிக்க சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு காரைதீவு மக்கள் எவ்வித தடையும் ஏற்படுத்தக் கூடாதெனவும் தீர்மானிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அத்துடன் சியாரத்துக்கு சேதம் விளைவித்ததாக குற்றம் சாட்டப்பட்ட காரைதீவைச்சேர்ந்த சந்தேக நபர்களுக்கெதிராக கல்முனை ஆரம்ப நீதிமனறில் 85688 ம் இலக்கத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் முன்னாள் கிராம சபைத் தலைவர்களான திரு..வினாயகமூர்த்தி மற்றும்ம டாக்டர் பரசுராமன் ஆகியோரின் ஒத்துழைப்பு குறிப்பிடத்தக்கது.

போர் முடிவுற்ற பின்னர்; சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகம் 14.08.2011 திகதியன்று இவ்வளவில் உள்ள தென்னை மரங்களில் தேங்காய் பறித்து நிலத்தையும் செப்பனிட்டுள்ளது.; இந்நிலையில் 06.09.2011 இல் காரைதீவு பிரதேச தலைவர் தலைமையில் இவ்வளவில் அபிவிருத்தி வேலைகள் செய்ய எத்தனிக்கப்பட்டது. சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகம் எதிர்ப்புத்தெரிவித்ததைத் தொடர்ந்து காரைதீவு பிரதேச செயலாளர் தலைமையில் சமாதான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டன. பின்னர் தமிழர் கூட்டணி. முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய அரசியல் கடசிகளின் பிரதிநிதிகளுடனும் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டன.








0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top