இலங்கை தமிழர் அருண் செல்வராசனை
இந்திய பொலிஸ் இரகசிய இடத்தில் விசாரணை

பாகிஸ்தான் உளவாளி என சந்தேகித்து இந்தியப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள  இலங்கை தமிழர் அருண்செல்வராசனை 3 நாட்கள் காவலில் எடுத்த இந்தியா தேசிய புலனாய்வு பொலிஸார், அவரிடம் இரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர் என அறிவிக்கப்படுகின்றது.
தமிழகத்தை உளவு பார்த்தது தொடர்பாக பாகிஸ்தான் உளவாளி என சந்தேகத்தில்  ஜாகீர் ஹுஸைனை கடந்த வருடம் இந்திய தேசிய புலனாய்வு பொலிஸார் கைது செய்தனர். மேலும் அவரது கூட்டாளிகளான சிவபாலன், முகமதுசலீம், ரபீக் ஆகியோரையும் பொலிஸார் கைது செய்தனர்.
விருகம்பாக்கம் அடுத்த சாலிகிராமத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த மற்றொரு பாகிஸ்தான் உளவாளி எனச் சந்தேகத்தில் அருண்செல்வராசனை  இந்திய தேசிய புலனாய்வு பொலிஸார் கடந்த மாதம் 10ஆம் திகதி  கைது செய்தனர்.
அருண்செல்வராசனை ஏற்கனவே 6 நாள் காவலில் எடுத்து விசாரித்த தேசிய புலனாய்வு பொலிஸார், அவரை மீண்டும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை விசாரித்த நீதிபதி மோனி, அருண்செல்வராசனை 11ஆம் திகதி  (நேற்று) காலை 11 மணி முதல் 13ஆம் திகதி  மாலை 4 மணி வரை மொத்தம் 3 நாட்கள் பொலிஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
இதையடுத்து புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள அருண்செல்வராசனை நேற்று காலை 11 மணிக்கு தேசிய புலனாய்வு பொலிஸார் காவலில் அழைத்துச் சென்றனர். அருண்செல்வராசனை அவர்கள் இரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.
கடந்த மாதம் 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்த போது தமிழகத்தில் உள்ள முக்கிய பிரமுகர்கள் குறித்த தகவல்களை மட்டும் அவர் கூறியதாகவும், விசாரணைக்கு சரிவர ஒத்துழைப்பு கொடுக்காததால் மீண்டும் 3 நாட்கள் பொலிஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர் எனக் கூறப்படுகின்றது.
ஆனால் இதற்கு வேறு ஒரு காரணமும் இருப்பதாக கூறப்படுகிறது. அருண்செல்வராசன் இலங்கை தமிழர் என்பதால் சந்தேகத்தின்பேரில் கடந்த 5ஆண்டுகளுக்கு முன்பு புதுச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, கியூ பிரிவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அருண்செல்வராசனை விசாரித்த கியூ பிரிவு பொலிஸார், உரிய தகவல்கள் ஏதும் கிடைக்காததால் அவரை பற்றிய தகவல்களை மட்டும் எடுத்துக்கொண்டு விடுவித்தனர்.
அப்போது அவர் பாகிஸ்தான் உளவாளி என்பது தெரியாது. தற்போது அருண்செல்வராசன் உளவாளி என்பது தெரியவந்ததையடுத்து கியூ பிரிவு பொலிஸார் தங்களிடம் உள்ள ஆவணங்களை தேசிய புலனாய்வு பொலிஸாரிடம் கொடுத்து உள்ளனர்.
இவை அனைத்தும் கடந்த முறை அருண்செல்வராசனுக்கு 6 நாட்கள் பொலிஸ் காவல் முடிந்த பிறகே கிடைத்ததால் தற்போது மீண்டும் 3 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிப்பதற்கான முக்கிய காரணம் என்றும் கூறப்படுகிறது.
அருண்செல்வராசன் முதலில் கள்ள நோட்டு மாற்றும் கும்பலுடன் சேர்ந்து உள்ளார். அப்போது அதிக வருமானம் கிடைக்கும் என்று கூறி அவரை மூளை சலவை செய்து தமிழகத்தை உளவு பார்க்கும் பாகிஸ்தான் உளவாளியாக மாற்றி உள்ளனர். மேலும் கள்ள நோட்டுகள், போலி பாஸ்போர்ட், பாகிஸ்தான் துணை தூதரக அதிகாரிகளுடன் உள்ள தொடர்புகள் குறித்தும் விசாரிக்க தேசிய புலனாய்வு பொலிஸார் முடிவு செய்து உள்ளதாக கூறப்படுகிறது.

குற்றவாளிகளிடம் ஒரு தடவை மட்டும்தான் பொலிஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளிக்கும். ஆனால், அருண்செல்வராசன் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டவர் என்பதால் 2-வது முறையாக பொலிஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top