கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை வைத்தியரின்
செயல் குறித்து ஜனாதிபதிக்கு முறைப்பாடு!



கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியரொருவர், பெண்ணொருவரை அவமானப்படுத்தும் வகையிலும், தொழில் தர்மத்துக்கு முரணாகவும் நடந்து கொண்டமை தொடர்பில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு முறைப்பாடொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது .
கல்முனை – 03 இல் வசிக்கும் ஆசிரியை ஒருவர் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவருக்கு எதிராக இந்த முறைப்பாட்டினை மேற்கொண்டுள்ளார்.
கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்கைக்காக, தான் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, சம்பந்தப்பட்ட வைத்தியர், தன்மீது உளரீதியான வன்முறைகளை மேற்கொண்டதாகவும், தன்னை அவமானப்படுத்தியதாகவும், தொழில் தர்மத்துக்கு முரணாக நடந்து கொண்டதாகவும்ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள முறைப்பாட்டில் மேற்படி ஆசிரியை சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடும் வயிற்று நோவு காரணமாக கடந்த ஒக்டோபர் 20ஆம் திகதி அதிகாலை 4.30 மணிக்கு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டேன்.
எனினும் அன்றைய தினம் இரவு ஏழு மணி வரைஎனக்கு எந்தவித மருத்துவப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படவில்லை.
இதேவேளை, குறித்த தினம் காலை 10 மணியளவில் நோயாளர்களை பார்வையிட வந்த குறிப்பிட்ட வைத்தியர்எனது வயிற்றுப் பகுதியை பரிசோதிக்க முயற்சித்தார். ஆனாலும், ஆண் வைத்தியர் என்பதால் நான் தயக்கம் காட்டினேன்.
இதனால், கோபம் கொண்ட வைத்தியர்நான் யார் எனவும், எங்கிருந்து வந்துள்ளேன் என்றும் அருகிலிருந்த தாதியிடம் விசாரித்தார். நான் கல்முனைக்குடியிலிருந்து வந்துள்ளதாக தாதி கூறினார். இதனைக் கேட்டதும், என்னைகழுதை, நாய் என்கிற மிக மோசமான வார்த்தைகளால் அந்த வைத்தியர் திட்ட ஆரம்பித்தார். ஏனைய நோயாளிகளுக்கு மத்தியிலேயே இது நடந்தது.
மேலும், அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு செல்லாமல்ஏன் இங்கு வந்தாய் எனக் கேட்டதோடு, தொடர்ந்தும் அவர் என்னைத் திட்டினார்.
குறித்த வைத்தியர், இதுபோன்று இதற்கு முன்னரும் நோயாளர்களிடம் நடந்து கொண்டதாக தெரியவருகிறது.
இந்த வைத்தியரினால்பாலினம் சார்ந்த வன்முறைகளுக்கு நான் உள்ளாகியுள்ளதோடு, உளரீதியான அவமானங்களுக்கும் ஆகியிருக்கின்றேன்.
எனவே, இவ் விவகாரம் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட வைத்தியருக்கெதிராக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்’.
இந்த கடிதத்தின் பிரதிகள் சுகாதார அமைச்சர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர், கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் மற்றும் கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top