இன்று அல்லது நாளை விசாரணைக்கு வரும்ஜெயலலிதா ஜாமீன் மனு
வயது, உடல்நிலையை கருத்தில் கொண்டு

விடுதலை செய்ய கோரிக்கை

உடல்நிலையை கருத்தில் கொண்டு தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டில் ஜெயலலிதா மனு தாக்கல் செய்து உள்ளார். இந்த மனு மீதான விசாரணை இன்று அல்லது நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூர் தனிக்கோர்ட்டில் நடைபெற்று வந்த சொத்து குவிப்பு வழக்கில் .தி.மு.. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து கடந்த 27ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த வழக்கில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன், ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறைதண்டனையும், தலா ரூ.10 கோடியும் அபராதம் விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஜெயலலிதாவும் மற்ற 3 பேரும் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் தங்களை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இதுதவிர மேல் முறையீடு தொடர்பாகவும், தனிக்கோர்ட்டின் தீர்ப்பை ரத்து செய்யக் கோரியும், தண்டனையை நிறுத்தி வைக்க கோரியும், தங்கள் சொத்துக்களை விடுவிக்க வேண்டும் என்று கோரியும் தனித்தனியாக 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
கடந்த 29ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுக்கள் கர்நாடக ஐகோர்ட்டில் விடுமுறைகால நீதிபதி ரத்தினகலா முன்னிலையில் கடந்த 30ஆம் திகதி விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வக்கீல் இல்லாமல் மனுவை விசாரிக்க முடியாது என்று கூறி நீதிபதி ரத்தினகலா விசாரணையை தள்ளிவைத்தார்.
இதைத்தொடர்ந்து ஜெயலலிதா தரப்பில் இந்த மனுவை அவசர அடிப்படையில் விசாரிக்க வேண்டும் என்று கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையை ஐகோர்ட்டின் வழக்கமான அமர்வுக்கு மாற்றி கடந்த 1ஆம் திகதி  நீதிபதி ரத்தினகலா உத்தரவிட்டார்.
அதன்படி, தசரா விடுமுறைக்கு பின் 7ஆம் திகதி கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதி சந்திரசேகர் முன்னிலையில் நடைபெற்ற விசாரணையில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கலாம் என்று அரசு தரப்பில் விரும்பினாலும், ஊழலின் தீவிரத்தை கவனத்தில் கொண்டு தனிக்கோர்ட்டு வழங்கிய தண்டனையை நிறுத்தி வைக்க கோரும் மனுவையும், ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்வதாக நீதிபதி சந்திரசேகர் தனது தீர்ப்பில் குறிப்பிட்டு இருந்தார்.
கர்நாடக ஐகோர்ட்டு ஜாமீன் வழங்க மறுத்து விட்டதால், ஜெயலலிதா சார்பில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஜெயலலிதாவுக்கு கர்நாடக ஐகோர்ட்டில் ஜாமீன் கிடைக்காமல் போனதற்கு சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்ததுதான் ஒருவேளை காரணமாக இருக்கலாம் என்று சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்து இருந்தனர். முதலில் ஜெயலலிதா மட்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்து இருந்தால், வயது, உடல் நிலை ஆகியவற்றின் அடிப்படையில் அவருக்கு ஜாமீன் கிடைத்து இருக்கக்கூடும் என்றும், அதன்பிறகு மற்ற 3 பேரும் ஒவ்வொருவராக மனு தாக்கல் செய்து ஜாமீன் பெற்று இருக்கலாம் என்றும் அவர்கள் கூறினார்கள்.
எனவே நேற்று ஜெயலலிதா சார்பில் மட்டும் ஜாமீன் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
வக்கீல் ஜெய் கிஷோர் என்பவர் பெயரில் தாக்கல் செய்யப்பட்ட சுமார் ஆயிரம் பக்கங்கள் கொண்ட அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
நான் ஒரு பெண்மணி. 66 வயதான எனக்கு உடல் ரீதியாக பல்வேறு உபாதைகள் உள்ளன. இந்த குறிப்பிட்ட வழக்கு கடந்த 18 ஆண்டுகளாக நடைபெற்றதால் எனக்கு உயர் ரத்த அழுத்த நோய், சர்க்கரை வியாதி மற்றும் மூச்சுத் திணறல் போன்ற கடுமையான பிரச்சினைகள் ஏற்பட்டு உள்ளன. நான் முதல்-அமைச்சராக இருந்த போது இந்த வழக்கு தொடர்பாக அதிகார துஷ்பிரயோகம் எதுவும் செய்யவில்லை.
தனிக்கோர்ட்டால் விதிக்கப்பட்டுள்ள சிறை தண்டனை மற்றும் அபராதத்தையும் எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்து உள்ளேன். இந்த மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணை, தனிக்கோர்ட்டு தண்டனையாக விதித்துள்ள 4 ஆண்டுகளுக்கு அதிகமாகவும் நடைபெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
என்னுடைய ஜாமீன் மனுவை விசாரித்த கர்நாடக ஐகோர்ட்டு, ஜாமீன் வழங்குவது குறித்து சுப்ரீம் கோர்ட்டு வகுத்துள்ள பல்வேறு வரையறைகளை கருத்தில் கொள்ளாமல் மனுவை நிராகரித்து இருக்கிறது. எனக்கு விதிக்கப்பட்டு இருப்பது கடுங்காவல் சிறை தண்டனை அல்ல; சாதாரண தண்டனைதான். இதற்கு ஜாமீன் வழங்குவதில் உள்ள நடைமுறைகளை ஐகோர்ட்டு கருத்தில் கொள்ள தவறிவிட்டது.
எனவே, நான் 66 வயதான பெண் என்பதையும், உடல் ரீதியாக எனக்கு உள்ள பல்வேறு உபாதைகளையும் கருத்தில் கொண்டு கருணை அடிப்படையில் ஜாமீன் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.
தனது ஜாமீன் மனுவை அவசர மனுவாக கருதி இன்றே (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் மனுவில் ஜெயலலிதா கேட்டுக் கொண்டு உள்ளார்.
சுப்ரீம் கோர்ட்டு பதிவாளரிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஜெயலலிதாவின் இந்த ஜாமீன் மனு, இன்று தலைமை நீதிபதி அமர்வில் பரிசீலனைக்காக முன்வைக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இதனை நீதிபதிகள் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், இந்த மனுவின் மீதான விசாரணை இன்று அல்லது நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறும் என்று கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top