சுனந்தாவின் மரணத்துக்கு விஷம் தான் காரணம்

புதிய அறிக்கையில் அதிர்ச்சி தகவல்

இந்திய மத்திய முன்னாள் அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கரின் மரணத்துக்கு விஷமே காரணம் என்று காவல்துறைக்கு டில்லி எய்ம்ஸ் மருத்துவக் குழு அளித்த புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
சுனந்தா புஷ்கரின் உடலைப் பரிசோதித்த 3 பேர் கொண்ட மருத்துவக் குழு அளித்த அறிக்கையில், அவரது உடலில் சிறுநீரகம், கல்லீரல், இருதயம் ஆகியவை நன்றாக இயங்கிக் கொண்டிருந்தன என்றும், அவரது மரணத்துக்கு விஷமே காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஏற்கெனவே, சுனந்தா புஷ்கரின் மரணத்துக்குப் பிறகு, அவரது உடலைப் பரிசோதித்த மத்திய தடயவியல் அறிவியல் ஆய்வகம், இதே சந்தேகத்தை கடந்த மார்ச் மாதம் எழுப்பியது.
எனினும், அந்த ஆய்வறிக்கை முழுமையானதாக இல்லை என்று கூறிய காவல்துறை, மீண்டும் ஆய்வு நடத்துமாறு தில்லி எய்ம்ஸ் மருத்துவக் குழுவை கேட்டுக்கொண்டது.
அதனடிப்படையில், ஆய்வு மேற்கொண்ட டில்லி எய்ம்ஸ் மருத்துவக் குழு, கடந்த செப்டம்பர் 30ஆம் திகதி காவல்துறையிடம் இந்தப் புதிய ஆய்வறிக்கையை அளித்துள்ளது.
இந்திய மத்திய இணை அமைச்சராக இருந்த சசி தரூரை திருமணம் செய்து கொண்ட சுனந்தா புஷ்கர் டில்லியில் ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றில், கடந்த ஜனவரி மாதம் 17ஆம் திகதி மர்மான முறையில் இறந்து கிடந்தார்.

சுனந்தா புஷ்கருக்கும், கணவர் சசி தரூருடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும் பாகிஸ்தான் பத்திரிகையாளர் மெஹர் தராருக்கும் இடையே சமூக வலைதளத்தில் பகிரங்க மோதல் ஏற்பட்ட மறுநாள் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததும் குறிப்பிடத்தக்கது.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top