மன்னார் பொது மையானத்தில் அடக்கம் செய்யப்பட்டிருந்த

கத்தோலிக்க மத அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகளின்

15 சடலங்கள் தோண்டியெடுப்பு

மன்னார் பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டிருந்த கத்தோலிக்க மத அருட்தந்தையர்கள் மற்றும் அருட்சகோதரிகள் உள்ளடங்கலாக 15 சடலங்கள் நேற்று திங்கட்கிழமை மாலை 4 மணியளவில் மன்னார் நீதிவான் .ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.
மன்னார் - தலைமன்னார் பிரதான வீதியில் அமைந்துள்ள மன்னார் பொது மயானத்தில் இறந்த மக்களினதும், கத்தோலிக்க அருட்தந்தையர்கள் மற்றும் அருட்சகோதரிகள் ஆகியோரின் சடலங்கள்அடக்கம் செய்யப்பட்டு வந்தன.
கடந்த சில வருடங்களுக்கு முன் மன்னார் பொது மயானத்திற்கு அருகில் உயிரிழந்த கத்தோலிக்க அருட்தந்தையர்கள் மற்றும் அருட்சகோதரிகளின் அடக்கத்திற்காக மயானம் அமைக்கப்பட்டுள்ளது.
குறித்த மயானத்தில் கடந்த சில வருடங்களாக உயிரிழந்த கத்தோலிக்க அருட்தந்தையர்கள் மற்றும் அருட்சகோதரிகள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் மன்னார் பொது மயானத்தில் கடந்த பல வருடங்களுக்கு முன் அடக்கம் செய்யப்பட்ட கத்தோலிக்க அருட்தந்தையர்கள் மற்றும் அருட்சகோதரிகள் உள்ளடங்கலாக 15 சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டு, பொது மயானத்திற்கு அருகில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கத்தோலிக்க அருட்தந்தையர்கள் மற்றும் அருட்சகோதரிகள் அடக்கம் செய்யும் மயானத்தில் அடக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை மன்னார் ஆயர் இல்லம் மேற்கொண்டது.



குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்காக மன்னார் ஆயர் இல்லம் சட்டத்தரணி வில்பட் அர்யூன் ஊடாக மன்னார் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தது.
குறித்த வழக்கை விசாரணைக்குட்படுத்திய மன்னார் நீதிவான், மன்னார் பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட கத்தோலிக்க அருட்தந்தையர்கள் மற்றும் அருட்சகோதரிகள் உள்ளடங்கலாக 15 சடலங்களை தோண்டி எடுத்து புதிதாக அமைக்கப்பட்டுள்ள கத்தோலிக்க அருட்தந்தையர்கள் மற்றும் அருட்சகோதரிகளின் அடக்கத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள மயானத்தில் நல்லடக்கம் செய்ய அனுமதி வழங்கினார்.
இந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை மாலை 4 மணியளவில் மன்னார் நீதிவான் .ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் குறித்த 15  சடலங்களும் தோண்டி எடுக்கப்பட்டன.
இதன் போது பொலிஸார், மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை, அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், நீதிமன்ற பணியாளர்கள், மன்னார் நகர சபை செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது குறித்த 15 சடலங்களும் தோண்டி எடுக்கப்பட்டு அருகில் உள்ள கத்தோலிக்க அருட்தந்தையர்கள் மற்றும் அருட்சகோதரிகளின் அடக்கத்திற்காக அமைக்கப்பட்ட மயானத்தில் மீண்டும் அடக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top