கேட்டது 30 நாள் போர் நிறுத்தம்..
கிடைத்தது 5 மணிநேரம் மட்டுமே!
சிரியாவில் தொடரும் துயரம்!!
சிரியாவின் கிழக்கு கூட்டாவில் ஜனாதிபதி ஆதரவு படையினர் நடத்தி வரும் தாக்குதலில் பொதுமக்கள் அதிகமானோர் பலியான நிலையில், தினமும் 5 மணிநேரம் தாக்குதல் நிறுத்தப்படும் என ரஷ்யா - சிரியா கூட்டுப்படை அறிவித்துள்ளது.
சிரியாவில் ஜனாதிபதி பஷார் அல் அசாருக்கு எதிராக ஆயுதம் தாங்கி போரில் ஈடுபட்டு வரும், கிளர்ச்சிக்குழுக்கள், ராணுவத்தின் ஒரு பிரிவு ஆகியவற்றை ஒடுக்கும் பணியில் ஜனாதிபதி ஆதரவு படையினர் கடந்த 2012-ம் ஆண்டு முதல் ஈடுபட்டு வருகின்றனர். 6 ஆண்டுகளாக நடந்து வரும் உள்நாட்டுச் சண்டையில் லட்சக்கணக்கான மக்கள் இதுவரை பலியாகியுள்ளனர்.
கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக அமெரிக்காவும், ஜனாதிபதிக்கு ஆதரவாக ரஷ்ய படைகளும் சண்டையிட்டு வந்த நிலையில் கிளர்ச்சிக்குழுக்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதை அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ நிறுத்தியது. இதனால், அரசுப்படையினரின் கை ஓங்கிய நிலையில், கடந்த 18-ம் திகதி முதல் ஜனாதிபதி ஆதரவு படை - ரஷ்யா இணைந்து கிழக்கு கூட்டா பகுதியில் ஆவேச தாக்குதல்களை நடத்தியது.
ஒரே கட்டமாக கிளர்ச்சிக்குழுக்களை ஒழித்துக்கட்டலாம் என தொடர்ந்து வான் தாக்குதலை ஜனாதிபதி ஆதரவு - ரஷ்யா படை நடத்தியது. இந்த கோர தாக்குதல்களில் சிக்கி 600 பேர் வரை அப்பாவி பொதுமக்கள் பலியாகியிருக்கலாம் என சிரிய போர் கண்காணிப்பகம் தெரிவித்திருந்தது.
பலியானவர்களில் அதிமான குழந்தைகளும் அடக்கம். பலியான மற்றும் காயமடைந்த குழந்தைகளின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனை அடுத்து, 24-ம் திகதி கூடிய ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் சிரியாவில் 30 நாட்கள் போர் நிறுத்தம் செய்யும் தீர்மானத்திற்கு ஒப்புதல் அளித்தது.
ஐ.நா ஒப்புதல் அளித்தும் போர் நிறுத்தம் அமுலுக்கு வரவில்லை. கிழக்கு கூட்டாவில் ஓயாது குண்டு மழை பொழிந்தது. இதனை அடுத்து, சிரிய விவகாரம் தொடர்பாக ரஷ்ய ஜனாதிபதி புதினிடம் ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் தலைவர்கள் தொலைபேசியில் பேசினர்.
இந்நிலையில், இன்று முதல் தினமும் காலை உள்ளூர் நேரப்படி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தாக்குதல்கள் நடத்தப்படாது என ஜனாதிபதி ஆதரவு - ரஷ்ய படை அறிவித்துள்ளது. இந்த 5 மணி நேரத்தில் கிழக்கு கூட்டாவில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது வரை கிழக்கு கூட்டா பகுதியில் 4 லட்சம் பொதுமக்கள் வரை இருக்கலாம் என கூறப்படுகிறது. எனினும், இந்த ஐந்து மணி நேர உடன்பாட்டை வரவேற்றுள்ள ஐ.நா சபை செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக், “30 நாள் போர் நிறுத்தத்தை உடனே அமுல்படுத்த வேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளார்.
தினமும் 5 மணி நேரம் தாக்குதல் நிறுத்தப்பட்டாலும், அந்த நேரத்தில் காயமடைந்தவர்களுக்கு உணவு மற்றும் மருத்துவ உதவிகளை ஜனாதிபதி ஆதரவு - ரஷ்யா படையினர் வழங்குவார்களா? என்ற தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.
0 comments:
Post a Comment