போர் நிறுத்தத்திற்கு ஐ.நா ஒப்புதல் அளித்தும்
சிரியாவில் குண்டு மழை
சிரியாவில் 30 நாள் போர் நிறுத்தத்திற்கு ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல் அளித்தும் அரசு ஆதரவு படைகள் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து வான் தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகின்றன.
சிரியாவில் ஜனாதிபதி பஷீர் அல் ஆசாத்துக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் கடந்த 2011-ம் ஆண்டு முதல் ஆயுதம் தாங்கிய போரில் ஈடுபட்டு வருகின்றனர். ஜனாதிபதி ஆதரவு படைக்கு ரஷ்யாவும், கிளர்ச்சியாளர் குழுக்களுக்கு அமெரிக்காவும் ஆதரவாக களமிறங்கின.
கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அரசு ஆதரவுப்படையினர் இதுவரை இல்லாத அளவுக்கு ஆவேச தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த 2013-ம் ஆண்டுக்கு பிறகு இப்படி ஒர் அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்க உளவு அமைப்பு ஆயுத உதவிகளை நிறுத்தியதால் கிளர்ச்சியாளர்கள் பல இடங்களில் வீழ்ந்து வருகின்றனர்.
இந்த சூழலை சாதகமாக கொண்டு விரைவில் போராளிகளை அழிக்கும் நோக்கில் அரசுத்தரப்பு கூட்டுப்படையினர் கிழக்கு கூத்தா பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக ஓயாது வான் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதில், சிக்கி 600-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக போர் மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்திருந்தது.
பலியானவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் குழந்தைகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மருத்துவம் மற்றும் நிவாரணப்பணிகளை மேற்கொள்ள போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்தது. ஆனாலும், போர் நிறுத்தம் செய்வதில் தாமதம் ஏற்பட்டது.
இதற்கிடையே, 30 நாள் போர் நிறுத்தத்திற்கு ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் நேற்று முன்தினம் ஒருமனதாக ஆதரவு அளித்தது. இதனை அடுத்து போர் நி்றுத்தம் தாமதமின்றி உடனடியாக அமலுக்கு கொண்டு வரவேண்டும் என பாதுகாப்பு கவுன்சில் கேட்டுக்கொண்டது.
ஆனால், போர் நிறுத்த தீர்மானத்தை கண்டுகொள்ளாமல் கிழக்கு கூட்டாவில் அரசு ஆதரவு படைகள் தொடர்ந்து வான் தாக்குதல்களை நடத்தி வருகின்றது. இதனால், இன்னும் நிலைமை மிக மோசமாக ஆகக்கூடும் என மனித உரிமை அமைப்புகள் எச்சரித்துள்ளன.
ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் தலைவர்கள் சிரியா நிலவரம் தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம் தொலைபேசியில் பேசியுள்ளனர். அப்போது, உடனடியாக போர் நிறுத்தத்தை கொண்டு வர அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
அடுத்த மாதத்துடன் எட்டாவது ஆண்டை எட்டவிருக்கும் சிரிய உள்நாட்டு யுத்தத்தில் இதுவரை 340,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருப்பதோடு மில்லியன் கணக்கான மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.




0 comments:
Post a Comment