தலைவர் மர்ஹூம் அஷ்ரப் எல்லாவிதமான எதிர்மறை


விமர்சனங்களுக்கும் அப்பாற்பட்டவர்

மாற்றமாக செயற்படுபவர்கள் நமது கட்சியின்

உண்மைப் போராளிகளாக இருக்க முடியாது

அமைச்சர் ரிஷாட் முகநூலில் தெரிவிப்பு




நமது சமூகம் தனது விடுதலையை வென்றெடுத்துச் சகல உரிமைகளுடனும் இந்த நாட்டில் தலை நிமிர்ந்து தன்மானத்துடன் சகல இனத்துடன் சகோதரத்துவத்துடனும் வாழ வேண்டுமென்பதற்கான போராட்டத்தைத் தொடங்கி, அந்தப் போராட்டப் பாதையில் தனது இன்னுயிரை அர்ப்பணித்த மிகப் பெரும் வீர வரலாற்றையும் தியாக வரலாற்றையும் கொண்டவர் மா மனிதர் மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இருக்க முடியாது.

இந்த சமூகத்தின் உயர்ச்சிக்காக எழுச்சியோடு போரிட்ட புரட்சித் தலைவர் அவர். இறை நம்பிக்கையையும் இனிய குணங்களையும் தன்னகத்தே கொண்டவர் அவர். அன்னார் மரணித்துப் பதினெட்டு வருடங்களாகின்ற போதிலும், அந்த மகத்தான மனிதருக்கான பிரார்த்தனைகளை நமது மக்கள் இன்னமும் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதிலிருந்தே அவர் எந்தளவுக்கு மக்களின் மனதில் குடிகொண்டிருக்கிறார் என்பதை அறிந்து கொள்ள முடியும்.

மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் தனது தூரநோக்குச் சிந்தனையின் மூலம் நமது சமூகத்தை ஓரணிக்குள் கொண்டுவந்து, ஜனநாயக வழியிலான அரசியல் இயக்கத்தைத் தொடங்கியிராவிட்டால், நமது இளைஞர்கள் நம் சமூகத்தின் மீதான அடக்குமுறைகளைத் தகர்த்தெறிய ஆயுதப் போராட்டத்துக்குள் தள்ளப்பட்டிருப்பார்கள். கூடவே, நமது சமூகம் பாரிய இழப்புகளையும் அழிவுகளையும் சந்தித்திருக்கும். ஆனால், எல்லாம் வல்ல அல்லாஹ் தனது அருளால் மா மனிதர் அஷ்ரப் அவர்கள் மூலமாக நமது சமூகத்தைப் பாதுகாத்தான்; அல்ஹம்து லில்லாஹ்!

மாமனிதர் மர்ஹூம் அஷ்ரப் அவர்களைப் பற்றி எவரொருவர் குறை கூறினாலும் அவர் மீது குற்றம் சுமத்தினாலும் நாம் அதனை ஒருபோதும் அனுமதிக்கவோ, பொறுத்துக் கொள்ளவோ தயாரில்லை என்பதை இச்சந்தர்ப்பத்தில் மிகப் பொறுப்போடும் உறுதியோடும் கூறிக் கொள்ள விரும்புகிறோம்.
மேலும், ''இறந்தவர்களைப் பற்றி நல்லவற்றையே கூறுங்கள், கெட்டவற்றைக் கூறாதீர்கள்.'' என்று அல்லாஹ் தனது தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் மூலம் நமக்குத் தெளிவாகச் சொல்லியுள்ள நிலையில், மர்ஹூமான மா மனிதர் அஷ்ரப் அவர்களைப் பற்றிய மோசமான விமர்சனங்களை எவர் செய்தாலும் அதனை நாம் மிக வன்மையாகக் கண்டிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

நமது சமூக உரிமைகளை வென்றெடுப்பதற்கான உயர்ந்த இலட்சியத்தோடு மிகுந்த அர்ப்பணிப்போடு பயணித்து மறைந்த நமது மா தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்கள், எல்லாவிதமான எதிர்மறை விமர்சனங்களுக்கும் அப்பாற்பட்டவர் என்பதைத் திடமாகக் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

இந்த விடயத்தில் நமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு மிகத் தெளிவானதும் தீர்க்கமானதுமாகும் என்பதையும் இதற்கு மாற்றமாக செயற்படுபவர்கள் நமது கட்சியின் உண்மைப் போராளிகளாக இருக்க முடியாதென்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாமனிதர் மர்ஹூம் அஷ்ரப் அவர்களுக்கு, அல்லாஹ் மேலான ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் சுவனபதியை வழங்குவானாக!



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top