பிரித்தானியாவுக்கான இலங்கைத் தூதுவரின்

பதவி விலகலை ஏற்றுக் கொண்டார் ஜனாதிபதி?



பிரித்தானியாவுக்கான இலங்கைத் தூதுவர் அமரி விஜேவர்த்தனவின் பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக் கொண்டுள்ளார் என்று ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பிரித்தானியாவுக்கான இலங்கைத் தூதுவர் அமரி விஜேவர்த்தன பதவியை விட்டு விலகியுள்ளார் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
எனினும், அவர் பதவி விலகவில்லை என்று வெளிவிவகார அமைச்சு நேற்று அறிவித்துள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு பதவியில் இருக்கும் உடன்பாட்டின் அடிப்படையிலேயே அவர் பிரித்தானியாவுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டார் என்றும், அந்த உடன்பாடு வரும் மார்ச் 31ஆம் திகதியுடன் நிறைவடைவதாகவும், வெளிவிவகார அமைச்சு விளக்கமளித்துள்ளது.
அதேவேளை, பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் அழுத்தங்களால், லண்டனில் உள்ள இலங்கைத் தூதரக பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ, கொழும்புக்குத் திருப்பியழைக்கப்பட்ட விவகாரத்தை அடுத்தே, அமரி விஜேவர்த்தன தனது பதவியை விட்டு விலகியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
அத்துடன், ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன இவரது பதவி விலகல் கடிதத்தை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top