இந்திய நாட்டின் துணைவேந்தர்களில்

எட்டு பேர் அலிகர் முஸ்லிம் பல்கலையைச் சேர்ந்தவர்கள்

37,000 மாணவர்கள்1400 பேராசிரியர்கள்3500 அலுவலர்கள்

இந்தியாவிலுள்ள அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் பயின்றவர்கள் மற்றும் பேராசிரியர்கள் இந்திய நாடு முழுவதிலும் உள்ள எட்டு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களாக உள்ளனர். இது, வேறு எந்த பல்கலைக்கழகத்திலும் தற்போது நடைபெறாத சாதனையாகக் கருதப்படுவதாக அறிவிக்கப்படுகின்றது.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா மார்ச் 7ம் திகதி நடைபெறுகிறது. இதில் இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு மாணவ - மாணவியருக்கு பட்டங்களை வழங்கி உரையாற்றுகிறார்.
அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் 1875-ல் சர் சையது அகமது கான் என்பவரால் தொடங்கப்பட்டது. தற்போது மத்திய அரசின் பல்கலைக்கழகங்களில் ஒன்றாக இருக்கும் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள் உலகம் முழுவதிலும் பணியாற்றி வருகின்றனர். இதில், எட்டு முன்னாள் மாணவர்கள் இந்தியாவின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களாக அமர்த்தப்பட்டு பணியாற்றி வருகின்றனர்.
டெல்லியின் ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருக்கும் தலத் அகமது, அலிகர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர். அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான டாக்டர் தாரீக் மன்சூர் அதன் ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரியின் அறுவை சிகிச்சை துறையின் பேராசிரியர் மற்றும் முன்னாள் மாணவர் ஆவார். தாரீக் மன்சூரைப் போல் வேறுபல துறைகளின் பேராசிரியர்களும் நாட்டின் மற்ற பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களாக அமர்த்தப்பட்டுள்ளனர்.
இவர்கள், ஜோத்பூரின் மவுலானா ஆசாத் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் அக்தரூல் வாசே, ஹைதராபாத்தின் மவுலானா ஆசாத் தேசிய உருது பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் அஸ்லம் பர்வேஜ், ஜம்முவில் உள்ள பாபா குலாம் ஷா பாத்ஷா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ஜாவீத் மஸ்ரத், ஹைதராபாத்தின் தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பைசான் முஸ்தபா, .பி.யின் சீதாபூரின் காஜா மொய்னுத்தீன் சிஸ்தி, உருது அரபி பெர்ஷியா பல்கலைக்கழகத்தில் மஹரூக் மிர்சா ஆகியோர் ஆவர். மற்றொரு பேராசிரியரான பைசாபாத்தின் நரேந்தர் தேவ் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக அக்தர் ஹாசீப் உள்ளார். இவரது இடத்தில் புதிதாக அமர்த்தப்பட்டுவிட்டாலும் அவர் இன்னும் பொறுப்பு ஏற்காத நிலையில் ஹசீப் துணைவேந்தராகத் தொடர்கிறார்.
அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் சுமார் 37,000 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். தொடக்கப்பள்ளி முதல் மருத்துவம், தொழில்நுட்பம் உள்ளிட்ட ஆய்வுக்கான உயர் கல்வி வரை கற்பிக்கப்படுகிறது. இதில் பணியாற்றும் பேராசிரியர்கள் சுமார் 1400 மற்றும் அலுவலர்கள் எண்ணிக்கை சுமார் 3500 ஆகும்.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top