அம்பாறை சம்பவம்:
குடும்பக் கட்டுப்பாட்டு மாத்திரை
குற்றச்சாட்டு உண்மையல்ல
அமைச்சர் ராஜித சேனாரத்ன
அம்பாறை சம்பவம் குடும்பக் கட்டுப்பாட்டு மாத்திரை வழங்கியதாலேயே ஏற்பட்டதாக தெரிவிக்கும் குற்றச்சாட்டில் எந்த உண்மையும் கிடையாது
இந்தச் சம்பவத்துடன் தொடர்புள்ள சகலரையும் கைது செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சினையை சிலர் வேண்டுமென்றே தூண்டி விட்டனரா என்பது குறித்தும் ஆராயப்படுவதாக அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவத்தார்.
குடும்பக் கட்டுப்பாட்டு மாத்திரை வழங்கியதாலே இந்த மோதல் ஏற்பட்டதாக தெரிவிக்கும் குற்றச்சாட்டில் எந்த உண்மையும் கிடையாது என்று குறிப்பிட்ட அவர், சமூக வலைத்தளங்களினூடாக இனவா தத்தை தூண்டி விட சிலர் முயல்வதாகவும் குறிப்பிட்டார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் அம்பாறை தாக்குதல் தொடர்பாக வினவப்பட்டது.
இதற்குப் பதிலளித்த போதே அமைச்சர் இதனை தெரிவித்தார். அம்பாறை நிலைமை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.இதன் பின்னணியில் இருப்போர் குறித்து ஆராயப்படுகிறது.
கேள்வி: குடும்பக் கட்டுப்பாட்டு மாத்திரை தான் இந்த பிரச்சினைக்கு காரணம் என குற்றஞ்சாட்டப்படுகிறதே?
பதில்: சில மருத்துவர்கள் மீதும் இவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்டது.தமிழ் முஸ்லிம் மருத்துவராக இருந்தால் இவ்வாறு பலி சுமத்தப்படும்.ஆனால் அது பற்றி விசாரித்த போது அவை பொய் குற்றச்சாட்டு என்பது கண்டு பிடிக்கப்பட்டது. சுகாதார அமைச்சின் திட்டங்களை தான் அந்த மருத்துவர்கள் முன்னெடுத்திருந்தார்கள்.இங்கும் குடும்பக் கட்டுப்பாட்டு மாத்திரை குறித்து கூறப்படுகிறது. பொலிஸார் விசாரணை நடத்துகின்றனர். அவ்வாறு ஏதும் மாத்திரை கண்டுபிடிக்கப்பட்டால் விசாரிக்கத் தயார்.
கேள்வி: இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகியுள்ளன.
பதில்: எனக்குக் கிடைத்துள்ள தகவல் படி இது பொய் குற்றச்சாட்டாகும். சமூக வலைத்தளங்கள் தான் இவ்வாறு குற்றஞ்சாட்டுகின்றன.
கேள்வி: கடை உரிமையாளர் தான் மாத்திரை விற்றதாக ஏற்றுக் கொண்டுள்ளாரே?
பதில்: வீடியோக்களில் காட்டப்படும் நபர் தான் கடை உரிமையாளர் என எப்படி கூறி முடியும். வேறு ஒருவரின் வீடியோவை கூட அவ்வாறு வௌியிட்டு குறித்த கடை உரிமையாளர் என்று கூற முடியும். சமூக வலைத்தளங்களில் தான் இதனை வௌியிடுகின்றனர்.இனவாதத்தை தூண்ட சமூக வலைத்தளங்கள் பயன்படுத்தப்படுகின்றன.கடந்த காலத்திலும் இவ்வாறு இனவாதம் தூண்டப் பட்டவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.
கேள்வி: உலகில் இவ்வாறு குடும்பக் கட்டுப்பாட்டு மாத்திரைகள் பயன்படுத்தப்படுகிறதா?
பதில்: உலகில் எங்கும் ஆண்களுக்கு குடும்பக் கட்டுப்பாட்டு மாத்திரை வழங்கப்படுவதில்லை.பெண்களுக்கு வழங்கினால் தான் குடும்பக் கட்டுப்பாடு செய்ய முடியும். ஆண் குடும்பக் கட்டுப்பாட்டு மாத்திரை சாப்பிட்டால் பெண்ணுக்கு குடும்பக் கட்டுப்பாட்டை ஏற்படுத்த முடியுமா?
உலகில் எங்கும் அவ்வாறு முடியாது.
கேள்வி: இவ்வாறான சம்பவங்கள் இடைக்கிடை நடந்து வருகின்றன.அதனை தடுக்க அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?
பதில்: 2014 ஆம் ஆண்டு வரை நடந்த இனவாத செயற்பாடுகளுடன் ஒப்பிடுகையில் தற்பொழுது சிறிதளவே நடந்துள்ளன. 30 வருட யுத்தத்தின் பின்னர் மக்கள் மத்தியில் யுத்த மனப்பாங்கு தான் இருந்தது.இதனோடு இனவாத உணர்வுகளும் தூண்டப்பட்டன.இவை கட்டம் கட்டமாகத் தான் குறையும். கடந்த கால இனவாத செயல்களுடன் நோக்குகையில் தற்பொழுது குறைந்தளவே நடக்கிறது.இந்த நிலைமை மாறும் என்றார்.
0 comments:
Post a Comment