பள்ளிவாசலை உடைக்க வேண்டிய தேவை எழுந்தது ஏன்?

அம்பாறையில் அமைச்சர் ரிஷாட் கேள்வி!

அம்பாறை நகரில் அமைந்துள்ள பள்ளிவாசலை உடைக்க வேண்டிய எந்தவொரு தேவையும் இல்லாத நிலையிலும், எதுவிதக் காரணங்களுமின்றி வேண்டுமென்று நன்கு திட்டமிட்டு இந்தப் பள்ளியை இனவாதிகள் உடைத்து தகர்த்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
விமானப் படைக்குச் சொந்தமான விஷேட விமானம் மூலம் அம்பாறைக்கு விஜயம் செய்திருந்த அமைச்சர் தலைமையிலான குழு தாக்குதலுக்குள்ளான பள்ளிவாசல், கடைகள் மற்றும் தீக்கிரையாக்கப்பட்ட வாகனங்கள் ஆகியவற்றை பார்வையிட்டதுடன், சம்பவம் தொடர்பில் பள்ளி தர்மகர்த்தாக்களிடமும், ஊர்ப்பிரமுகர்களிடமும் விபரங்களைக் கேட்டறிந்துகொண்டு, அங்கு வருகை தந்திருந்த போலிஸ் உயரதிகாரிகளிடம் இவ்வாறு  மிகுந்த கவலையுடன் கேள்வி எழுப்பினார்.
பள்ளிவாசலில் இருந்து சில மீற்றர் தொலைவுக்கு அப்பால் அமைந்திருந்த ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற சர்ச்சையை அடுத்து, நூற்றுக்கணக்கானோர் வேண்டுமென்றே இந்தப் பள்ளிவாசலுக்கு வந்து தாக்குதல் நடத்தியதன் காரணம் என்ன? இதன் பின்னணிதான் என்ன? என்றும் அமைச்சர் ரிஷாட், பொலிஸ் அதிகாரிகளிடம் வினவினார்.
இந்த நாசாகார செயலைப் புரிந்தவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டுமென்றும், இலங்கை புலனாய்வுத்துறை இவர்களை கண்டுபிடிக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.
இதேவேளை, பாதிக்கப்பட்ட ஹோட்டல் உரிமையாளர்களும், பள்ளிவாசல் காவலாளியும், அன்று நள்ளிரவு நடந்த திகில் சம்பவங்களையும், தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளையும் அமைச்சரிடம் விபரித்தனர்.

பதற்ற சூழ்நிலையில் வாழும் அம்பாறை மாவட்ட முஸ்லிம்களை பொறுமை காக்குமாறு கூறிய அமைச்சர், அவர்களை ஆசுவாசப்படுத்தியதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்க ஜனாதிபதியிடமும், பிரதமரிடமும் தாம் வலியுறுத்தியுள்ளதாகவும் கூறினார்.
இதன்போது, பிரதி அமைச்சர் அமீர் அலி, ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தலைவர் எம்.ரீ.ஹசன் அலி மற்றும் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்களான எஸ்.எஸ்.பி மஜீத்,  ஏ.எம்.நௌஷாட், அமைச்சரின் இணைப்புச் செயலாளர் இர்ஷாத் ரஹ்மத்துல்லாஹ் ஆகியோர் அமைச்சருடன் சென்றிருந்தனர். அத்துடன் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்களான வேதாந்தி சேகு இஸ்ஸதீன், அன்சில், தாகிர், ஜவாத் ஆகியோரும் அங்கு வருகை தந்திருந்தனர்.
இந்த சம்பவத்தின் பின்னர் பள்ளிவாசலில் இடம்பெற்ற முதலாவது தொழுகையிலும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.









0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top