பாரிய ஊழல், மோசடி தொடர்பான

ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின்

ஆங்கில மற்றும் தமிழ் பிரதிகள் இல்லாததால்

சபை ஒத்திவைப்பு

பாரிய ஊழல், மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையின் ஆங்கில மற்றும் தமிழ் பிரதிகள் இல்லாததால், பாராளுமன்றம் நாளை (21) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.. சுமந்திரனால் இது குறித்து சபைக்கு சுட்டிக்காட்டப்பட்டதை அடுத்து, குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் பாரிய ஊழல் மோசடி விசாரணை அறிக்கை மற்றும் மத்திய வங்கியின் முறி மோசடி அறிக்கைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் இன்று (20) பிற்பகல் இடம்பெறவிருந்த நிலையில் அவை நாளை (21) வரை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டது.
குறித்த விடயம் தொடர்பில் ஒன்றிணைந்த எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான தினேஷ் குணவர்தன மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் சுமந்திரன் எம்.பியுடன் தர்க்கத்தில் ஈடுபட்டனர்.
முறி ஆணைக்குழு அறிக்கை ஆங்கிலத்தில் உள்ளதால் அது குறித்து பேசுங்கள் என, பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
அதற்கு பதிலளித்த சுமந்திரன் எம்.பி. அது மாத்திரம் தொடர்பாகவா பேச சொல்கிறீர்கள்? ஆனால் எனக்கு (பாரிய ஊழல் மோசடி) குறித்த அறிக்கை தொடர்பிலும் பேச வேண்டும் என தெரிவித்ததோடு, முன்னாள் தேசிய மொழிகள் அமைச்சராக இருந்த நீங்கள் இவ்வாறு சொல்வது தவறு என சுட்டிக்காட்டியதோடு, மொழி தொடர்பான குறித்த விடயத்தை பாதுகாக்க வேண்டிய கடப்பாடு உங்களுக்கு உண்டு எனவும் சுட்டிக்காட்டினார்.
குறித்த விடயம் தொடர்பில் சிக்கல் இருப்பதை தன்னால் உணர முடிவதாகவும், இது தொடர்பில் கருத்தில் எடுப்பதாகவும், 8,000 பக்கங்களைக் கொண்ட குறித்த ஆவணங்களை மொழி பெயர்ப்பதற்கான தேவை உள்ளதாகவும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆரம்பத்தில் தெரிவித்தார்.
அதன் பின்னர், சபை இது குறித்து தீர்மானிக்குமாறு சபாநாயகர் தெரிவித்ததோடு, சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்லவினால் சபையை ஒத்திவைப்பதற்கான ஆலோசனை முன்வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, சபை அதற்கு அனுமதி வழங்கியது. அதன் பின்னர் கரு ஜயசூரிய சபையின் உடன்பாட்டுக்கு அமைவாக விவாதத்தை நடத்தாது சபையை ஒத்திவைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டார்.
இதேவேளை, தேசிய அரசாங்கம் நீடிப்பது தொடர்பில் தனக்கு அறிவிக்கப்பட்டுள்ளதா என, சபாநாயகரிடம் பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அலகப்பெருமவினால் கேள்வியெழுப்பப்பட்டது.
குறித்த விடயம் தொடர்பில் தனது எந்வொரு அறிவிப்பும் கிடைக்கப் பெறவில்லை என, சபாநாயகர் கரு ஜயசூரிய கூறியதோடு, நாளை (21) இது குறித்து அறிவிப்பதாக அவைக்கு அறிவித்தார்.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top