எத்தனை தடைகள் வந்தாலும் சந்திக்க தயார்
அரசியல்வாதியாகியுள்ள
நடிகர் கமல்ஹாசன் அறிவிப்பு
அரசியலில் எத்தனை தடைகள் வந்தாலும் அதை நான் சந்திக்க தயார் என்று அரசியல்வாதியாகியுள்ள நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தனது அரசியல் பிரவேசத்தின் முதல் படியாக ராமேசுவரத்தில் அப்துல் கலாம் இல்லத்துக்கு நேற்று காலை 7.45 மணிக்கு கமல்ஹாசன் சென்றார். கமலை கலாம் சகோதரர் முத்து மீரான் மரைக்காயர் குடும்பத்தினருடன் வரவேற்றார். அவர்களுடன் சிறிது நேரம் உரையாடிய கமல்ஹாசன், அவர்களுடன் சிற்றுண்டி அருந்தினார். கலாம் வீட்டின் மாடியில் அமைக்கப்பட்டுள்ள கலாம் அருங்காட்சியகத்தைப் பார்வை யிட்டார்.
இதுகுறித்து கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பிரமிப்பூட்டும் எளிமையைக் கண்டேன், கலாமின் இல்லத்திலும், இல்லத்தாரிடமும். அவர் பயணம் தொடங்கிய இடத்திலேயே நானும் என் பயணத்தைத் தொடங்கியதை பெரும்பேறாக நினைக்கிறேன். பெரிய விஷயங்கள் எளிமை யாகத் தொடங்குகின்றன. எளிமையில் இருந்துதான் உயர்வு பிறக்கும். எனது பயணத்தை ஒரு மாமனிதரின் எளிமையான இல்லத்தில் இருந்து தொடங்கியதில் பெருமகிழ்ச்சி’ எனத் தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து அப்துல்கலாம் படித்த பாடசாலைக்கு கமல் செல்வதாக திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கு ராமநாதபுரம் கல்வி மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து கலாம் படித்த பாடசாலை வழியாக காரில் சென்ற கமல்ஹாசன் அதில் நின்றபடியே மாணவர்களை பார்த்து கை அசைத்துவிட்டு சென்றார்.
காலை 9.30 மணியளவில் ராமேசுவரம் கணேஷ் மஹாலில் மீனவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற கமல்ஹாசன் பேசியதாவது:
மீனவர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டியது எனது கடமை. தமிழகத்தில் முக்கியமான தொழில்களில் மீன்பிடித் தொழிலும் ஒன்று. மீனவத் தொழில் பாதுகாக்கப்பட வேண்டும். மீனவர்களும் பாதுகாப்புடன் தொழில் செய்ய வேண்டும். உங்களுக்கு ஏற்படும் சுக துக்கங்களை பத்திரிகைகள் வாயிலாக அறிவதற்குப் பதிலாக நான் நேரில் சந்தித்து உங்களின் மொழியிலேயே அறியவந்திருக்கிறேன். மாறிமாறி வரும் ஆட்சியாளர்கள் வாக்குறுதிகளை அள்ளி வீசினார்களே தவிர அதனை நிறைவேற்ற வில்லை.
கடல் மேலாண்மை, நீங்கள் செயல்பட வேண்டிய விதம், சர்வதேச சட்டங்களைப் பற்றியும் நாம் பேச வேண்டும். மீண்டும் நான் வருகிறேன். நாம் கலந்துரையாடலாம், அதற்கான நாளும், நேரத்தையும் தேர்வு செய்வோம் என்றார்.
மீனவர்களுடன் கமல் கலந்துரையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெறும் 3 நிமிடங்கள் மட்டும் பேசிவிட்டுச் சென்றதில் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் 10.30 மணியளவில் ராமேசுவரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது மீண்டும் மீனவப் பிரதிநிதிகளைச் சந்தித்தார்.
அப்போது விசைப்படகு மீனவ பிரதிநிதிகள், ‘மத்திய, மாநில அரசுகள் தங்களுக்கு எவ்வித உதவியும் செய்யவில்லை. கமல்ஹாசன் தங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உதவுவார் என நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாகவும், கடலில் தத்தளிக்கும்போது தப்பிப் பிழைக்க ஒரு கட்டை கிடைப்பதுபோல் கமல்ஹாசன் கிடைத்துள்ளார்’ என மீனவர்கள் கூறினர்.
இதைத் தொடர்ந்து மீனவர் சங்கப் பிரதிநிதிகளை ஆரத்தழுவி கமல், ‘பொன்னாடைகள் போர்த்திக் கொள்ளும் வழக்கம் இல்லை. இங்கு நானே ஆடைதான். அவர்களை நான் தழுவும்போது அவர்களுக்கு நான் ஆடை, எனக்கு அவர்கள் ஆடை’ என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் கமல்ஹாசன் கூறியதாவது: கலாமின் வீட்டில் இருந்து எனது அரசியல் பயணத்தைத் தொடங்கியதில் எந்த அரசியலும் இல்லை. கலாம் பயின்ற பாடசாலைக்குச் செல்ல நினைத்ததிலும் எந்த அரசியலும் இல்லை. ஆனால், நான் கலாம் பாடசாலைக்குச் செல்லவிடாமல் தடுக்கப்பட்டதில் அரசியல் இருக்கிறது. சினிமாவிலேயே ஆயிரம் தடைகளைத் தாண்டி சரித்திரம் படைத்தேன். அரசியலில் எத்தனை தடைகள் வந்தாலும் அதை நான் சந்திக்க தயார்.
கலாமின் பாடசாலைக்குச் செல்லவிடாமல் மட்டுமே அவர்களால் தடுக்க முடியும். ஆனால் நான் பாடம் படிப்பதை அவர்களால் தடுக்க முடியாது. கலாமின் நாட்டுப்பற்று, கலாமின் வாழ்க்கை எனக்கு பாடம். அவரது வாழ்க்கை எனது பாடத்தின் ஒரு பகுதி.
அரசியலுக்கு வர தொழில் முக்கியம் அல்ல. ஒரு காலத்தில் வழக்கறிஞர்கள் காந்தி, நேரு, திலகர், அம்பேத்கர், ராஜாஜி என்று அரசியலுக்கு வந்தார்கள். அரசியலில் உணர்வுள்ள, உத்வேகம் உள்ள, ஆசையுள்ள யார் வேண்டுமானாலும் வரலாம்.
சினிமா பயணத்துக்கும் அரசியல் பயணத்துக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இதுவும் மக்கள் தொடர்புதான். சினிமாவை விட அரசியலில் பொறுப்பு அதிகம். சினிமாவில் இருந்த பெருமையை விட அரசியலில் அதிக பெருமையும் இருப்பதாக நினைக்கிறேன் என்றார்.
``நான் தொடங்கியிருக்கும் நியாப்போரின் படை இது. அவர்களை அறிமுகப்படுத்துவதில் பேரானந்தம். அவர்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் தனித்தனியாக பேசலாம். 37 வருடங்களாக நற்பணியைச் செய்துகொண்டிருந்தோம். நாமும் நற்பணியை மட்டும் செய்துவிட்டு போகலாம் என்று நினைத்த போது, அதற்கும் இடைஞ்சல் செய்தார்கள். அதை யார் செய்தார்கள் என்று இப்போது கூற விரும்பவில்லை.
நான் பேச தயங்கியதை கெஜ்ரிவால் வெளிப்படையாக பேசியுள்ளார். மேடை நாகரீகம் கருதி பிறகு பேசலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால், கெஜ்ரிவால் அதைத் தொடங்கி வைத்துவிட்டார். எனது நேரமின்மையும், மக்களின் நேரமின்மையும் அவருக்குத் தெரியும். நான் மதிக்கும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தொலைபேசியில் பேசும்போது `உங்கள் கட்சிக் கொள்கை என்ன’ என்று கேட்டார். இடதா, வலதா என இஸங்களைப் பற்றிக் கவலைப்படாமல் மக்களுக்கு நல்லது எங்கிருந்தாலும் அதை எடுத்துக் கொள்வதே கொள்கை என்றேன். உடனடியாக செயலில் இறங்குங்கள் என்று அவர் வாழ்த்தினார். கொள்கை என்ன என்று கேட்கிறார்கள். நல்ல கல்வி, தரமான கல்வி அனைத்து தரப்பினருக்கும் போய்ச்சேர வேண்டும். சாதியையும், மதத்தையும் சொல்லிச்சொல்லி விளையாடிய விளையாட்டுகள் நிறுத்தப்பட வேண்டும். இங்கு பணம் பற்றாக்குறை இல்லை. மனம்தான் பற்றாக்குறை.
கட்சிக் கொடியில் இருக்கும் 6 கைகள், 6 மாநிலங்களைக் குறிக்கும். நடுவிலிருக்கும் நட்சத்திரம் மக்களைக் குறிக்கும். உற்றுப்பார்த்தீர்கள் என்றால் அதில் தென்னிந்தியாவின் வரைபடம் தெரியும். நீங்கள் இடதா, வலதா என்று கேட்கிறார்கள். அதற்காககத்தான் பெயரிலேயே மய்யத்தை வைத்திருக்கிறேன். நீதிக்கட்சி போன்ற பெரிய கட்சிகள் சொன்னதைக் கலந்து எங்கள் கொள்கைகளை உருவாக்கியிருக்கிறோம்’ என்றார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் உயர்மட்டக் குழு அறிவிக்கப்பட்டது. இதில், கமலின் நண்பரும், பேராசிரியருமான கு.ஞானசம்பந்தன், சுகா, தங்கவேலு, பாரதி கிருஷ்ணகுமார், ஸ்ரீப்ரியா ராஜ்குமார், கமீலா நாசர், சவரிராஜன், ராஜசேகர், மூர்த்தி, மௌரியா, ராஜநாராயணன், ஆர்.ஆர்.சிவராம் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். அதேபோல், அகில இந்தியப் பொறுப்பாளராக தங்கவேலு நியமிக்கப்பட்டுள்ளார்.
மாவட்டவாரியாக நிர்வாகிகள் அறிவிப்பு: பொதுக்கூட்டத்தின் முதல் நிகழ்வாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்டவாரியான நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டு, மேடையேற்றப்பட்டனர். அவர்கள் ஒவ்வொருவராக மேடையில் வந்து நேரடியாகக் கமலைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றுவிட்டு சென்றனர்.
பொதுக்கூட்ட மேடையில் கமல்: கட்சிப் பெயரை அறிவித்த பின்னர் பொதுக்கூட்ட நிகழ்ச்சிகள் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. கமல்ஹாசனுடன் பொதுக்கூட்ட மேடையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் சட்ட அமைச்சருமான சோம்நாத் பாரதி மற்றும் விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன் ஆகியோர் அமர்ந்துள்ளனர். தமிழ்த்தாய் வாழ்த்துடன் பொதுக்கூட்டம் தொடங்கியதாக அறிவிக்கப்பட்டது.
``மக்கள் நீதி மய்யம்’’ - அரசியல் கட்சியின் பெயரை அறிவித்தார் கமல்
பொதுக்கூட்ட மைதானத்தில் கட்சிக் கொடியை ஏற்றிவைத்த நடிகர் கமல், ரசிகர் மத்தியில் தனது கட்சியின் பெயரையும் அறிவித்தார். அரசியல் கட்சியின் பெயர் ``மக்கள் நீதி மய்யம்’’ என ரசிகர்கள் மத்தியில் அவர் அறிவித்தார்.
’தூய வெள்ளையில் இணைந்த கைகள்!’ - பொதுக்கூட்ட மைதானத்தில் கொடியேற்றிய கமல்!
மதுரை ஒத்தக்கடையில் நடைபெற்று வரும் அரசியல் பிரகடன மேடைக்கு கமல்ஹாசன் வந்தார். அவருடன் டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோரும் மேடைக்கு வந்துள்ளனர். பொதுக்கூட்ட மேடைக்கு வருவதற்கு முன்பாக பொதுக்கூட்ட மைதானத்தில் அவரது கட்சிக் கொடியை கமல் ஏற்றிவைத்தார். விஸ்வரூபம் படத்தின் யாரென்று தெரிகிறதா பாடல் இசை பின்னணியில் ஒலிக்க கமல், தனது அரசியல் கட்சியின் கொடியை ஏற்றிவைத்தார்.
மதுரை செல்லும் வழியில் திருப்புவனத்தில் பொதுமக்கள் திரண்டு நிற்க அங்கு காரில் இருந்தபடியே ஒரு நிமிடம் பேசினார் நடிகர் கமல்ஹாசன். அப்போது அவர், "திருப்புவனம் எப்போதுமே வளமான ஊர். அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஊர். இந்த ஊருக்கும், இங்கே இருக்கும் இளைஞர்களுக்கும் முக்கியமான திட்டம் வைத்திருக்கிறேன். அதை இங்கு சொல்லவில்லை.ஒத்தக்கடை கூட்டத்தில் அறிவிக்கிறேன் அங்கே வாருங்கள்," என்றார்.
நேர நெருக்கடியால் அப்துல்கலாம் இல்லத்துக்குச் செல்லும் நிகழ்வு தவிர, கமல்ஹாசனின் மற்ற அனைத்து நிகழ்வுகளும் முழுமைப்பெறாமல் போனது.
மானமதுரையிலும் 30 விநாடிகள் பேசிவிட்டு கிளம்பினார் கமல்ஹாசன்."உங்கள் அன்பில் நீந்தி வந்து கொண்டிருக்கிறேன். அடுத்த முறை உங்களை சந்தித்து நீண்ட நேரம் பேசுகிறேன். மதுரை பொதுக்கூட்டத்தில் பேசவேண்டியிருப்பதால் உங்களிடமிருந்து விடைபெற்றுக்கொள்கிறேன்," என்று மட்டும் பேசி விடைபெற்றார் கமல்ஹாசன்.
0 comments:
Post a Comment