இஸ்லாம் சமய பாடத்திற்கு விண்ணப்பிப்போரின்
வயதெல்லையை 18 தொடக்கம் 45  வயதுக்கு
இடைப்பட்டதாக நீடிக்குமாறு
பிரதமர், கல்வி அமைச்சர் ஆகியோர்களிடம்
அமைச்சர் ரிஷாட் கோரிக்கை!


அரச பாடசாலைகளில் சமய ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு கல்வி அமைச்சால் கோரப்பட்டுள்ள விண்ணப்பங்களில், இஸ்லாம் சமய பாடத்திற்கு விண்ணப்பிப்போரின் வயதெல்லையை 18 தொடக்கம் 45  வயதுக்கு இடைப்பட்டதாக நீடிக்குமாறு பிரதமரிடமும், கல்வி அமைச்சரிடமும், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அமைச்சர் ரிஷாட் பதியுதீன், இவர்களிவருமிடமும் எழுத்துமூலம் விடுத்துள்ள கோரிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
சுமார் 18 வருடங்களின் பின்னரேயே, கடந்த அரசாங்க காலத்தில் அதாவது, 2010ஆம் ஆண்டு இறுதியில் 150 மௌலவி ஆசிரியர்களுக்கு மட்டுமே நியமனங்கள் வழங்கப்பட்டன. எனினும், அப்போது 625 மௌலவி ஆசிரியர்களுக்கு நியமனங்கள் வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டிருந்தது.
நீண்டகால இடைவெளியின் பின்னர்,மிகச் சொற்பமான ஆசிரிய நியமனங்கள் வழங்கப்பட்டதால் நாட்டிலுள்ள பாடசாலைகளின் முஸ்லிம் மாணவர்கள் இஸ்லாம் பாடத்தை நேர்த்தியான முறையில் கற்க முடியாது பரிதவித்தனர். அதுமாத்திரமின்றி குறிப்பிட்ட பாடத்தை வேறு துறைகளில் பயிற்றப்பட்ட ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது.
அத்துடன், 2010 ஆம் ஆண்டு இடம்பெற்ற மௌலவி ஆசிரியர் நேர்முகத் தேர்வில், தகுதி இருந்தும் பலர் உள்வாங்கப்படாத நிலை ஏற்பட்டது. 
நேர்முகத் தேர்வில் தோற்றிய விண்ணப்பதாரிகள், தமக்கு மௌலவி ஆசிரியர் நியமனம் கிடைக்குமென்ற நம்பிக்கையில் தொடர்ந்தும் காத்திருந்ததால், அவர்களின் வயதும் அதிகரித்தது. எனவே, தற்போது கோரப்பட்டுள்ள விண்ணப்பத்தில், இவர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்க வேண்டியது அரசாங்கத்தின் தார்மீகப் பொறுப்பாகும். அதுமாத்திரமின்றி வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்தவர்களும், மனஉளைச்சல்களுக்கு உள்ளாகியவர்களும்  2010 ஆம் ஆண்டு இடம்பெற்ற நேர்முகத்தேர்வுகளில் தோற்ற முடியாத சூழ்நிலையும் அப்போது ஏற்பட்டது.
இவ்வாறான காரணங்களைக் கருத்திற்கொண்டு, கல்வி அமைச்சினால் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்ட 18 வயது தொடக்கம் 35 வயதுக்கும் இடைப்பட்ட வயதெல்லைக் காலத்தை, 18 வயது தொடக்கம் 45 வரையான வயதெல்லையாக நீடித்து உதவுமாறு பிரதமரிடமும், கல்வியமைச்சரிடமும் அமைச்சர் ரிஷாட்  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top