நொயார் கடத்தி தாக்கப்பட்ட சம்பவம்
ஜெனரல் அமல் கருணாசேகரவுக்கு
ரூபா ஒரு கோடி கொண்ட 3 சரீரப் பிணைகளில் விடுதலை
ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, இராணுவ புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர், ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2008, மே 22 ஆம் திகதி, தெஹிவளை பிரதேசத்தில் வைத்து, ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு, சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட சம்பவத்திற்கு, உதவி, ஒத்தாசை புரிந்ததாக தெரிவிக்கப்பட்டு, மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
,இவர் விசாரணைகளுக்கு ஒத்துழைக்கவில்லை என்றும், தகவல்களை வழங்க மறுப்பதாகவும், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் கூறியிருந்தனர்.
கடந்த ஏப்பரல் 05 ஆம் திகதி கைது செய்யப்பட்ட அவர், தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அவரது பிணை மனு இன்று (10) கல்கிஸ்ஸை மேலதிக நீதவான் லோச்சன அபேவிக்ரம முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அவரை பிணையில் செல்ல நீதவான் அனுமதி வழங்கினார்.
ரூபா ஒரு கோடி கொண்ட 3 சரீரப் பிணைகளின் அடிப்படையில் அவரை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் இதன்போது அனுமதி வழங்கியது.
அத்துடன் பிணை வழங்குபவர், அரச சேவையில் நிறைவேற்று அதிகாரியாக இருக்க வேண்டும் எனவும் நீதிமன்றம், நிபந்தனை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment